தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அ.தி.மு.கவை சீண்டிய சுதீஷின் ஆடியோ - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY FB SUDHEESH FB

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தி.மு.க, அ.தி.மு.க அணியில் கதவுகள் மூடப்பட்டுவிட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தலின் முடிவில் தே.மு.தி.கவின் எதிர்காலம் என்னவாகும்?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்ட வேண்டிய கட்சிகள் அனைத்தும் தொகுதிப் பங்கீடு, இழுபறி, உள்கட்சி பூசல் எனப் பலமுனைத் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரிக்கவே நேரம் இல்லாத நிலையில், சிறிய கட்சிகள் தவித்துக் கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவிட்டதால், அந்தத் தொகுதிகளில் பிரசாரங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன.

140 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்

தி.மு.க தரப்பில் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அ.ம.மு.க சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில், அ.தி.மு.க அணியில் இருந்து விலகிய தே.மு.தி.கவும் 140 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்கிறது. இந்நிலையில், அ.ம.மு.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தே.மு.தி.க தலைமை நடத்தி வருகிறது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம், அ.தி.மு.க அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்ததால், `எப்படியும் அ.தி.மு.கவுடன் கூட்டணி உறுதியாகிவிடும்' என தே.மு.தி.க தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க அணியில் இருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்டது. இப்படியொரு திடீர் முடிவை தொண்டர்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டம் முடிந்து வெளியே வந்த தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், `இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி. அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும்' எனக் கொதித்தார். இதனைத் தொடர்ந்து விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும், அ.தி.மு.க தலைமையை கடுமையாக விமர்சித்தார்.

வேட்பாளர்கள் மனநிலை

கூட்டணிக்கான கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், தே.மு.தி.க தனித்துப் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான பட்டியல் சரிபார்ப்பின்போது, கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்ட தே.மு.தி.க நிர்வாகிகள், ` உங்கள் பெயரை மாவட்ட செயலாளர் பரிந்துரை செய்துள்ளார். `நீங்கள் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறீர்களா?' எனக் கேட்டு எழுதிக் கொண்டனர். தே.மு.தி.க சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் மனநிலையை பரிசோதிக்கவே இவ்வாறு கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டோருடன் தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

விஜயகாந்த்

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY TWITTER

படக்குறிப்பு, கோப்புப் படம்

``அ.தி.மு.க நிர்வாகிகள் அவமானப்படுத்தியதால்தான் அ.தி.மு.க அணியில் இருந்து தே.மு.தி.க வெளியேறியதா?'' என அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசிய அவர், `` அ.தி.மு.க தலைமையில் உள்ளவர்களைப் பற்றி விஜயகாந்த் குடும்பத்தினர் பேசிய பேச்சுகள்தான் கூட்டணி முறிவுக்குப் பிரதான காரணம். தொடக்கத்தில் இருந்தே அவர்கள் அதிக இடங்களைப் பெறும் முனைப்பில் இருந்தனர். அ.தி.மு.கவுக்கு என சில கணக்குகள் இருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் இடங்களை ஒதுக்க முடியும். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோதே ஆரணியில் சுதீஷ் பேசிய பேச்சின் ஆடியோ ஒன்று முதல்வரிடம் போட்டுக் காட்டப்பட்டது. தே.மு.தி.கவை ஒதுக்குவதற்கு அந்த ஆடியோ ஒன்று மட்டுமே போதுமானதாக இருந்தது" என்கிறார்.

கூட்டணியை சீண்டிய ஆடியோ

தொடர்ந்து பேசுகையில், `` ஆரணியில் நடைபெற்ற தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எல்.கே.சுதீஷ், `2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் மட்டும் கூட்டணியில் இல்லாவிட்டால் அ.தி.மு.க என்ற கட்சியே இன்றைக்கு இருந்திருக்காது. கூட்டணிக்காக இவர்கள் நம்மிடம் வந்து கெஞ்சினார்கள் எனக் கூறிவிட்டு அ.தி.மு.க தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவர்கள் கட்சியின் உள் அரங்கில் பேசப்பட்டாலும், இதன் ஆடியோ மட்டும் முதல்வரின் பார்வைக்குச் சிலர் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து நேரடியாக சுதீஷிடம் அமைச்சர் ஒருவர் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்தவர், ` எங்கள் தொண்டர்களின் எழுச்சிக்காக உள்அரங்கில் பேசினோம். பொதுவெளியில் நாங்கள் விமர்சனம் செய்யவில்லையே' என விளக்கம் கொடுத்தார். அதன்பிறகு கே.பி.முனுசாமியை விட்டு தே.மு.தி.கவை சங்கடப்படுத்தும் வேலைகள் நடந்தன" என்கிறார்.

மேலும், `` ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தாமதம் ஏற்படவே, சுதீஷை நேரடியாக அழைத்துப் பேசினார் முதல்வர். அப்போது, `நீங்கள் எல்லாம் என்ன கட்சி நடத்துகிறீர்கள். 8 சதவிகித வாக்கு, 10 சதவிகித வாக்கு உள்ளது எனப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கட்சியில் நான்கு பேரையாவது குறிப்பிட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம். எத்தனை பேர் உங்கள் கட்சியில் இருக்கிறார்கள்' எனக் கடுமையாக சத்தம் போட்டுள்ளார். இந்த அவமானத்தை சுதீஷால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்றார் விரிவாக.

அவமானத்தை ஏற்க முடியவில்லை

இதனைத் தொடர்ந்து தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய சுதீஷ், ` நாடாளுமன்றத் தேர்தலிலும் நமக்கு கடைசியாகத்தான் சீட்டுகளை ஒதுக்கினார். இப்போதும் பா.ம.கவை முடித்துவிட்டு நம்மிடம் வந்தார்கள். தொடக்கத்தில் இருந்தே சிங்கிள் டிஜிட் என்றதைத் தாண்டி அவர்கள் வெளியே வரவில்லை. அமைச்சர்கள் நேரில் வந்து கேப்டனை பார்த்துவிட்டுச் சென்றனர். அவர்களுடன் 4 முறை பேச்சுவார்த்தை நடந்தது. ராஜ்யசபா சீட்டை தருகிறோம் என்பதை முதல்நாளே ஒத்துக் கொண்டனர். தொகுதிப் பங்கீட்டில் 23 இடங்களைக் கேட்டோம். அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, 18 தொகுதிகள் வரையில் இறங்கி வந்தோம். கடைசியாக 15 தொகுதிகள் கேட்டோம். திடீரென 13 எனக் குறைத்துவிட்டார்கள். இந்தக் கூட்டணியில் ஏராளமான அவமரியாதையை சந்தித்துவிட்டோம். இதற்கு மேலும் நாம் தொடரக் கூடாது என நினைக்கிறேன்," எனப் பேசியுள்ளார். இதனை ஏற்று விலகல் அறிவிப்பை வெளியிட்டனர்.

பேசியது உண்மைதான்

`சுதீஷ் பேசிய சில வார்த்தைகள்தான் கூட்டணி மோதலுக்குக் காரணம் என்கிறார்களே?' என செங்கல்பட்டு மாவட்ட தே.மு.தி.க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான அனகை முருகேசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ஆரணி கூட்டத்தில் சுதீஷ் பேசியவிதம் அ.தி.மு.கவுக்கு சங்கடத்தை உருவாக்கியிருக்கலாம். முதலமைச்சர் அவரிடம் பேசும்போது, `உங்களுக்கு என்ன ஓட்டு வங்கி இருக்கிறது. இவ்வளவு சீட்டுகளைக் கேட்கலாமா?' எனக் கேட்டதும் மனவருத்தத்தை அதிகப்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள். எங்கள் நிர்வாகிகளை கே.பி.முனுசாமியும் சரியான முறையில் நடத்தவில்லை" என்கிறார்.

அ.தி.மு.க மீதான புகார்கள் குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும் என நினைத்தோம். கூட்டணி வேண்டாம் எனத் தே.மு.தி.க கூறிவிட்டது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதால் விரக்தியின் விளிம்பில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு தரப்புக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாவிட்டால், இதுகுறித்து எங்கள் கட்சித் தலைமையின் கவனத்துக் கொண்டு சென்றிருக்கலாம். அப்படிச் செய்யாமல் அ.தி.மு.க தோற்றுப் போகும் என்றெல்லாம் பேசுவது சரியானதல்ல. எங்களோடு பயணம் செய்வார்கள் என நினைத்தது முடியாமல் போனதில் ஆதங்கம் உள்ளது. அதேநேரம், வார்த்தைகளை வெளியிடும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

பிரேமலதா உணரவில்லை

பிரேமலதா

பட மூலாதாரம், HTTP://DMDKPARTY.COM/

`அ.தி.மு.க கூட்டணியில் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதால், தே.மு.தி.கவின் நிலை என்னவாகும்?' என மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தொடக்கத்தில் இருந்தே அரசியல் கட்சிக்கான முதிர்ச்சியோடு தே.மு.தி.க நடந்து கொள்ளவில்லை. ` கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஏன் தாமதப்படுத்த வேண்டும்?' என வெளிப்படையாகக் கேட்பது சரியானதல்ல. அவர்களுக்குக் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றால் லாபி செய்திருக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலும் பேசியிருக்கலாம். ஆனால், பொதுவெளியில் பேசி தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டனர். தங்களின் பலம் என்ன என்பதையும் பலம் குறைந்துவிட்டதையும் அவர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` பழைய ஜமீன் பரம்பரைகள், தங்களை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தே.மு.தி.கவின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது. இவர்களுக்கு களநிலவரத்தை உணர்ந்து ஜனநாயகப்பூர்வமாகக் கட்சியை நடத்தத் தெரியவில்லை. இந்தத் தேர்தலில் கிடைக்கும் முடிவுகள்தான் அவர்களைப் பக்குவப்படுத்தும். 2016 ஆம் ஆண்டு வரையில் விஜயகாந்த் ஓரளவுக்கு நன்றாக இருந்தார். இப்போது அவர் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்சியின் வாக்கு வங்கி என்பது விஜயகாந்துக்கானதுதான். பிரேமலதாவுக்கானது அல்ல.

இந்தத் தேர்தலின் முடிவில் தே.மு.தி.கவுக்கு எதிர்காலம் இருக்குமா என்பது கேள்விக்குறி. ஒரு கட்சி உயிர்த்திருப்பதற்கு சில காரணங்கள் தேவை. தி.மு.க என்ற எதிர்ப்பு உள்ளவரை அ.தி.மு.க இருக்கும். அதேபோல்தான் தி.மு.கவுக்கும். எது சரி.. எது தவறு என்ற நிலைப்பாடு இருந்தால்தான் கூட்டம் கூடும். இதுபோன்ற காரணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :