தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: எடப்பாடி பழனிசாமியின் 3 ஃபார்முலாக்கள்! பா.ஜ.கவை மிரட்டும் உள்கட்சி மோதல்கள்

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில், புதன்கிழமை மாலையில் மேலும் 171 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சி தலைமை புதன்கிழமை மாலையில் அறிவித்தது. இதையடுத்து, அதிமுக தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகள் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.
இந்த 20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டறிந்து அதற்கான பட்டியலை அ.தி.மு.க தலைமையிடம் பா.ஜ.க நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க வெளியேறிய நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வரும் துணை முதல்வரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
எந்தெந்த தொகுதிகளில் பா.ஜ.க?
இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்புக்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், `` கோவை மாவட்டத்தில் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய தொகுதிகளைக் கேட்டோம். இதில் தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க தலைமை இசைவு தெரிவித்துவிட்டது. அங்கு வானதி சீனிவாசனுக்கு நல்ல அறிமுகம் உள்ளது. தொடர்ந்து மதுரை தெற்குத் தொகுதியைக் கேட்டோம். வடக்குத் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். சேப்பாக்கம் தொகுதி, பரமக்குடி அல்லது ராமநாதபுரம், மொடக்குறிச்சி, ஓசூர் அல்லது கிருஷ்ணகிரி, நாமக்கல் அல்லது தாராபுரம், நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, விருதுநகர், நெல்லை, உதகமண்டலம், காரைக்குடி எனப் பரவலாகக் கேட்டிருக்கிறோம். இதில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு அ.தி.மு.க தலைமை சம்மதம் தெரிவித்துவிட்டது" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ ஆக அ.தி.மு.கவின் அம்மன் அர்ச்சுனன் இருக்கிறார். தொகுதிக்குள் செல்வாக்குடன் வலம் வருகிறார். அண்மையில் முதல்வர் வருகையின்போது சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு தெற்குத் தொகுதியை பா.ஜ.கவுக்குக் கொடுப்பதற்கு அ.தி.மு.க தலைமை சம்மதித்துவிட்டதாகத் தகவல் வெளியானது. வானதி தரப்பிலும், `தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிடலாம்' எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அம்மன் அர்ச்சுணன் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தில் கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அ.தி.மு.க தலைமை தலையிட்டு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால், தேர்தல் நெருக்கத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதற்கும் வாய்ப்பில்லை" என்கிறார்.
3 ஃபார்முலாக்கள்!

பட மூலாதாரம், @CMOTAMILNADU
``கோவை தெற்குத் தொகுதி என்பது ஒரு சிறு உதாரணம்தான். மாநிலம் முழுக்க வேட்பாளர் தேர்வில் அதிரடியான சில நடைமுறைகளை முதல்வர் பழனிசாமி செயல்படுத்த இருக்கிறார்" என்கிறார் அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` ஒவ்வொரு தொகுதியிலும் தகுதியான வேட்பாளர்களை அடையாளம் கண்டறிவதில் மூன்று வகையான ஃபார்முலாக்களை முதல்வர் பயன்படுத்த உள்ளார். அதில், அ.தி.மு.கவின் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் சுனில் என்பவர் கொடுத்த அறிக்கை, மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த அறிக்கை, மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த அறிக்கை ஆகியன. இதில், யாருக்காவது சீட் மறுக்கப்பட்டால், ` சுனில் கொடுத்த பட்டியலில் உங்கள் பெயர் இல்லை' என முதல்வர் தரப்பில் இருந்து சமாதானம் செய்யப்படும்.
தொகுதியில் செல்வாக்கு!
மேலும், ` இந்தத் தேர்தல் நமக்கு முக்கியமானது. இது வாழ்வா, சாவா போராட்டம். தேர்தல் முடியும் வரையில் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுங்கள். உங்களுக்கு வேறு சில வாய்ப்புகளை வழங்குவோம்' எனவும் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் வேலைகளும் நடந்து வருகின்றன. தவிர, வேட்பாளராக நிறுத்தப்படுகிறவர், 100 சதவிகிதம் உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தொகுதியில் கணிசமாக உள்ள சமூகம், வேட்பாளரின் சொந்த செல்வாக்கு ஆகியவை முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. 10 பேரிடம் சர்வே எடுத்தால்கூட யாருடைய பெயர் அதிகப்படியாக உச்சரிக்கப்படுகிறது என்பதையும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏக்களில் மக்கள் மத்தியில் அதிருப்தியுள்ள வேட்பாளர்களை நிராகரிப்பதில் முதல்வர் தயக்கம் காட்டவில்லை" என்கிறார் விரிவாக.
இயல்பான ஆதங்கம்தான்!

கோவை தெற்குத் தொகுதியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு குறித்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தெற்கு தொகுதி விவகாரம் சுமூகமாக முடிந்து விடும். எங்கள் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். `அவருக்குத் தொகுதியை ஒதுக்க வேண்டும்' என நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இது இயல்பான ஆதங்கம்தான்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``தொகுதியை பா.ஜ.கவுக்கு ஒதுக்கியதாக சமூக வலைதளங்களில் வந்த தகவல்தான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம். எங்கள் கட்சித் தலைமையில் இருந்து பேசினாலே சரியாகிவிடும். எங்கள் மாவட்டச் செயலாளரும் நிர்வாகிகளிடம் அமைதியாக இருக்குமாறு கூறியிருக்கிறார். ஒவ்வொரு நிர்வாகிக்கும், இந்தத் தொகுதி நமது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்கின்ற விருப்பம் இருக்கும். அது அனைத்து தொகுதிகளிலும் சாத்தியமில்லை. தலைமையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரையில் பதற்றம் இருக்கும். அதன் பிறகு ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை" என்கிறார்.
பா.ஜ.க தலைமை சொன்னது என்ன?
அ.தி.மு.கவினரின் எதிர்ப்பு குறித்து தமிழக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` பா.ஜ.க கட்டுப்பாடுகள் நிறைந்த கட்சியாக உள்ளது. எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை கேட்கிறோம். அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் ஏற்றுக் கொள்வோம். எங்களுக்கு இரண்டு நோக்கங்கள்தான் உள்ளன. ஒன்று பா.ஜ.க வெல்வது, இரண்டாவது எங்களின் கூட்டணி வெல்வது ஆகியவை. `கூட்டணியின் வெற்றியையும் நல்லுறவையும் உறுதி செய்ய வேண்டும்' என்பது எங்கள் அகில இந்திய தலைவரின் உத்தரவு. நிர்வாகிகள் கூட்டத்தில் இதைத்தான் அவர் வலியுறுத்தினார். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் வெல்வதற்கு வேலை பார்ப்போம். இதற்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருடல்கள், உரசல்கள் ஆகியவற்றை சரிசெய்ய முயற்சி செய்வோம். இதனைப் பெரிதுபடுத்த மாட்டோம்" என்கிறார்.
அ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கெல்லாம் சீட் மறுக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து உள்கட்சி பூசல்கள் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. இதனை முதல்வர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதுதான் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமான கேள்வியாக உள்ளது.
பிற செய்திகள்:
- 2 நொடிக்கு ஒரு மின்சார ஸ்கூட்டர்: தமிழகத்தில் அமையும் ஓலாவின் உலகின் மிகப் பெரிய தொழிற்சாலை
- காங்கோ தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் - என்ன சொல்கிறது அரசு?
- மண்ணையே உரமாக, பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தி சாதிக்கும் தெலங்கானா இயற்கை விவசாயி
- ஹாரி - மேகன் பேட்டி: இன ரீதியிலான குற்றச்சாட்டு குறித்து பக்கிங்காம் அரண்மனை விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












