பாஜக-வுக்கு 20 தொகுதிகள், கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் பொன்.ராதா போட்டி - அதிமுகவுடன் உடன்பாடு

பட மூலாதாரம், AFP Contributor/Getty Images
ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக, பாஜக தலைவர்கள் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு தாமதமாக எட்டப்பட்ட இந்த உடன்பாட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பட மூலாதாரம், BJP Tamil Nadu
அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு தே.மு.தி.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பேசிவந்தது.
இந்நிலையில், அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 20 சட்டமன்றத் தொகுதிகளும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக எச். வசந்தகுமார் இருந்துவந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததையடுத்து அந்தத் தொகுதி காலியாக இருந்தது. தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்ந்து, கன்னியாகுமரி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறர்.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க. 2.86 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2011ஆம் ஆண்டிலும் தனித்துப் போட்டியிட்டு 2.2 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 2006ஆம் ஆண்டில், 2 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2001ஆம் ஆண்டில் தி.மு.கவுடன் இணைந்து கூட்டணி அமைத்த பா.ஜ.க., 4 இடங்களைப் பெற்றதோடு 3.2 சதவீத வாக்குகளையும் பெற்றது.
பிற செய்திகள்:
- திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா! அழுத்தம் கொடுத்தது யார்?
- தமிழ்நாட்டில் ஏன் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை நம்பியே இருக்கின்றன?
- ஆந்திராவில் அதிகரிக்கும் கழுதை இறைச்சி தேவை: பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா?
- தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன? எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது?
- எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












