புதுச்சேரி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது பாமக - தனித்து போட்டியிட முடிவு

தனராஜு முன்னாள் எம்.பி

பட மூலாதாரம், K. DHANARAJU FB

படக்குறிப்பு, தனராஜு, பா.ம.க முன்னாள் எம்.பி

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாங்கள் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

புதுச்சேரிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகள் பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் சேர்ந்து 14 தொகுதிகளில் போட்டியிடும் என்று புதுச்சேரி பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அறிவித்தார். இதில் பாஜக, அதிமுக, பாமக எத்தனை தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டது என்று முடிவு செய்யப்படவில்லை. இது குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என நிர்மல் குமார் சுரானா தெரிவித்தார்.

இந்த நிலையில், புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு போதிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யவில்லை. ஆகவே, புதுச்சேரியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, பாமக தனித்துப் போட்டியிட இருப்பதாக மக்களவை முன்னாள் உறுப்பினரும், பாமக புதுச்சேரி மாநில அமைப்பாளருமான தனராஜு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனராஜுவிடம் பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர், "தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சரியான நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொகுதிப் பங்கீடு தொடர்பாக, புதுச்சேரி பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை நேரில் சந்தித்து நேற்று கடிதம் வழங்கினேன். அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பாமகவிற்குப் புதுச்சேரியில் 4 தொகுதிகள் மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் 1 தொகுதி என மொத்தமாக 5 தொகுதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினோம்," என்றார் அவர்.

கடித்ததைப் பெற்றுக்கொண்ட நிர்மல் குமார் சுரானா எங்களது விருப்பத்தைப் பரிசீலனை செய்வதாக கூறினார்.

"குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது என்.ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ரங்கசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் சரியான விளக்கம் கொடுக்கவில்லை.‌ ஆகவே இந்த கூட்டணியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் விலகுவதாக முடிவெடுத்திருப்பதால், தனித்துப் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தனர். இதை கேள்விப்பட்டவுடன் தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இருக்கும் என்று எனது கருத்தை என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகியிடம் தெரிவித்திருந்தேன். இதன் காரணமாக நான் பாஜக பொறுப்பாளரிடம் தொகுதிப் பங்கீடு தொடர்பான கடித்ததை வழங்கி விட்டு சென்னை திரும்பி விட்டேன்.

இதற்கிடையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வைத்து ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது‌. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 14 தொகுதிகளில் அதிமுக, பாமகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க இருக்கிறார்கள் என்ற எந்த தகவலும் தெரியவில்லை," என்றார் தனராஜு.

தொடர்ந்து பேசிய அவர், "என்.ஆர்.காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டிற்குப் பிறகு தொலைப்பேசி மூலமாவது எங்களுக்கு தொகுதிப் பங்கீடு குறித்து தெரிவித்திருக்கலாம். ஆனால் எங்களிடம் அவர்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகள் குறித்தோ, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தோ கலந்தாலோசிக்கவில்லை. இதுபோன்று எதுவுமே எங்களுக்கு இல்லை என்ற போது நாங்கள் என்ன செய்ய முடியும்?

இதன் காரணமாகவே நாங்கள் தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளோம். இதே நிலை தொடர்ந்தால் இறுதியில் பாமகவிற்குத் தொகுதிகள் இல்லை என்ற கூறலாம். உடனடியாக பாமக தலைமை அன்புமணி ராமதாஸிடம் கேட்டபோது, நாம் தனித்துப் போட்டியிடலாம் என்று கூறினார். ஆகவே தற்போது தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

"தற்போது புதுச்சேரியில் எந்தெந்த தொகுதிகளில் பாமக வலுவாக உள்ளதோ, அந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். குறைந்தது புதுச்சேரி, காரைக்காலில் 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுத்துள்ளோம். இதில் தற்போது வரை புதுச்சேரியில் 9 தொகுதிகளும், காரைக்காலில் 3 தொகுதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு வேட்பாளர்கள் இணையும் பட்சத்தில் தொகுதிகள் அதிகப்படுத்தப்படலாம்.

புதுச்சேரி பாமகவிற்கு தொகுதிப் பங்கீடு செய்வார்கள் என தற்போது வரை எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டும் என்பதில் என்ற மாற்றுக் கருத்து இல்லை. எங்களுக்கு உரியத் தொகுதிகளைக் கொடுத்து எங்களை அழைத்தார்கள் என்றால் சேர்வதற்குத் தயாராக இருக்கிறோம். அப்படி தொகுதி ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் அதிகபட்சமாக 5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். அதில் எத்தனை தொகுதிகள் பங்கீடு செய்ய முடியும் என்று கேட்கும் பட்சத்தில் எங்களது விருப்பத்தைத் தெரிவிப்போம்," எனத் தெரிவித்தார் தன்ராஜ்.

"பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால், குறைந்த பட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடு வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறது. அதுவும் இல்லாத பட்சத்தில், புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம் பெறாது," என்றார் அவர்.

மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகிக்கும் அதிமுக தலைமைக்கு எங்களது கோரிக்கையைத் தெரிவித்திருக்கிறோம். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்கலாம் என கூறியிருப்பதாக தனராஜு தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :