கமல் ஆவேசம்: "தி.மு.கவும் அ.தி.மு.கவும் அகற்றப்பட வேண்டிய கட்சிகள்"

`தி.மு.க, அ.தி.மு.க என இருவருமே அகற்றப்பட வேண்டியவர்கள்தான். அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும்' என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கமல்ஹாசன், ` கூட்டணி தொடர்பாக ஒவ்வொரு முறையும் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனை முதல் அணியாகத்தான் பார்க்கிறேன். எங்கள் வசதிக்காக ஒரு பெயர் வைக்க வேண்டும் என்றால் `முதல் அணி' எனக் கூறுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த அணிக்குள் இனியும் சிலர் வந்த வண்ணம் உள்ளனர். நல்லதை நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்கள் அணிக்கு வரலாம். அவர்களை அரவணைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது' என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சரத்குமார், ` இங்கு சிறந்த "முதல் கூட்டணி" உருவாகியுள்ளது. இந்த அணியின் தலைவர் மட்டுமல்ல, முதல்வர் வேட்பாளரும் கமல் என்பதை தெளிவுபடக் கூறுகிறோம். மாற்றம் வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற அடிப்படையில் இணைந்திருக்கிறோம். தொடர்ந்து இந்த அணி பயணிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள், எங்கள் கூட்டணியை ஆதரிப்பார்கள். நல்லவர் வல்லவர்களை நம்மவர் வரவேற்பார்' என்றார்.
அடுத்துப் பேசிய ரவி பச்சமுத்து, `தமிழகத்துக்கான விடிவெள்ளியாக இந்தக் கூட்டணி இருக்கும். இங்கு பல ஆண்டுகளாக சில கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. ஏற்கெனவே ஒரு மக்கள் நலக் கூட்டணி இருந்து தோற்றுவிட்டது. இந்த அணி அப்படியல்ல. எங்களால் ஆட்சியமைக்க முடியும் என நம்பிக்கையோடு சொல்கிறேன். தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றத்தை இந்த அணியால் கொடுக்க முடியும்' என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

``தே.மு.தி.கவுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடக்கிறதா?"
``எங்கள் அணிக்கு யார் வந்தாலும் அரவணைக்க வேண்டியது எங்கள் கடமை. இது மக்களுக்காக வந்திருக்கிற முதல் அணி. நன்மை பயக்கும் என வருகிறவர்களை வரவேற்போம். எங்கள் கட்சியின் சார்பில் பொன்ராஜ் அழைப்பு விடுத்தாகக் கேள்விப்பட்டேன். அந்த அழைப்பு அப்படியே இருக்கிறது. தே.மு.தி.கவிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்."
``தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி என்றீர்கள். அவர்களுடன் கூட்டணி முடிவாகவில்லை. உங்களை நோக்கி கூட்டணி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லையா?"
``காந்தியின் அணிக்குள் மகாராஜாக்களும் மகாராணிக்களும் வரவில்லை. மக்கள் எங்களுக்கு அளிக்கப் போகும் மரியாதையை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். இதனை ஒரு சார்பான ஊடக கேள்வியாகத்தான் பார்க்கிறேன். மக்கள் தெளிவான பதிலைக் கொடுப்பார்கள்."
``கடந்த சில நாட்களாக ஸ்டாலின் மீது கடுமையான கோபத்தை முன்வைக்க என்ன காரணம்?"
``நான் அவர் மீது விமர்சனமே வைப்பதில்லை என சில நாள்களாக கூறிக் கொண்டிருந்தீர்கள். எனக்கு யாரெல்லாம் எதிரிகள் என்பதை முடிவு செய்வதில்லை. ஒரு சுரங்கப் பாதையில் நடிகர் புரூஸ்லி மாட்டிக் கொள்வார். அங்கு ஒரே ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருக்கும். அதை அவர் உடைத்துவிடுவார். இதன்பிறகு எதிர்ப்பட்டவர்களை எல்லாம் அடிப்பார். அதைப் போலத்தான். இந்த மியூசிக்கல் சேரில் மற்றவர்களும் வந்து அமர வேண்டியதிருக்கும்."
``நீங்கள் ஆளும்கட்சியை விமர்சிப்பதில்லை. பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத ஒரு கட்சியை விமர்சனம் செய்வதாகச் சொல்லப்படுகிறதே?"
``இல்லை. ஆளும் கட்சியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது இவர்களைப் பற்றிச் சொல்லவில்லையே என்றீர்கள். கூடவே, அப்படியானால் நண்பர்களா என கேட்டீர்கள். இவர்களைப் பற்றிச் சொல்லும்போது, `10 வருடம் ஆட்சியில் இல்லையே' என்கிறீர்கள். செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும்.இங்கே அகற்றப்பட வேண்டியவர்கள் இருவருமேதான்" என்ற கமல், ``நாளை காலை 10 மணிக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும்" என்றதோடு முடித்துக் கொண்டார்.
பிற செய்திகள்:
- இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம்: ஸ்டாலின், எடப்பாடி, கமல் உரிமை கோரும் திட்டத்துக்கு நிதி எங்கிருந்து வரும்?
- சசிகலாவின் அரசியல் விலகல் அமமுக கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?
- திமுகவின் கூட்டணிக் கணக்கில் கலங்கிப் போன கம்யூனிஸ்ட் கட்சிகள் - நடந்தது என்ன?
- கேரளாவில் இஸ்லாமியர் - கிறிஸ்தவர் ஒற்றுமையில் பாஜக பாதிப்பை ஏற்படுத்துமா?
- "ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன் இருந்தானா?" - 17 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அகழாய்வு முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













