தமிழர்களின் வரலாறு: "ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன் இருந்தானா?" - 17 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அகழாய்வு முடிவு

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

(முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.)

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வின் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது.

இங்கு முதன்முதலாக 1876ஆம் ஆண்டும், பிறகு 1902ஆம் ஆண்டு வெளிநாட்டு ஆய்வாளர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு கிடைக்கப்பெற்ற பொருட்கள் ஜெர்மனி மற்றும் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டன.

அதைத்தொடர்ந்து 1920-ல் சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்கதேசத்து அறிஞர் பானர்ஜி சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரீகம் என கூறினார். இதனால் உலகமே ஆதிச்சநல்லூரை வியந்து பார்த்தது. ஆனாலும் ஆதிச்சநல்லூர் தொடர்பான முறையான அகழாய்வு அறிக்கை வரவில்லை.

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை மூலமாக 2004-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வை சத்திய மூர்த்தி தலைமையிலான தொல்லியல் துறையினர் செய்தனர். ஆனால் இந்த அகழாய்வின் அறிக்கை வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்நிலையில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற அகழாய்வின் அறிக்கையை மத்திய தொல்லியல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அறிக்கையை முறைப்படி வெளியிடாமல் இணையவழியில் வெளியிடப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை அதிகாரி சத்தியபாமா பத்ரிநாத் தயாரித்த 293 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் 2004-ல் ஆத்திச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் குறித்த முழுமையான விபரங்கள், அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற பொருட்களின் பட்டியல் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

தற்போது 17 ஆண்டுகள் கழித்து அகழாய்வு அறிக்கை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிக்கையில் ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன் இருந்தானா என்பதற்கான பதிலும் கிடைத்துள்ளது. முத்துகுளிக்கும் மக்களுக்கு ஒருவித நோய் வரும். அந்த நோயால் பாதிக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களே இந்த நெற்றிகண் மனிதர்கள் என சத்தியபாமா தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

15 மாதங்களுக்கு பிறகு வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோதி

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 15-ம் தேதி வங்கதேசம் செல்ல உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"1971ல் கிழக்கு பாகிஸ்தானில் பிரிந்து வங்கதேசமாக உருவானது. இதன் 50வது ஆண்டு விழா வங்கதேசத்தில் கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி பிரதமர் மோதி மார்ச் வங்க தேசம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

15 மாதங்களுக்குப் பின் பிரதமர் மோதி வெளிநாடு செல்வது இதுவே முதன் முறை ஆகும்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா - மோதி பேச்சுக்குப் பின் இருவரும் தாஹா - மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையை துவக்கி வைக்க உள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

சமையல் எரிவாயு விலை 7 ஆண்டுகளில் இரட்டிப்பு

பெட்ரோல் டீசல்

பட மூலாதாரம், Getty Images

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 7 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது; பெட்ரோல், டீசல் மீதான வரி வசூல் 459% அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதில்:

நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் சில்லறை விற்பனை விலை ரூ.410.50-ஆக இருந்தது. அதன் விலை இந்த மாதம் ரூ.819-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பொது விநோயகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வந்த மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.14.96-ஆக இருந்தது. இந்த மாதம் அதன் விலை லிட்டருக்கு ரூ.35.35-ஆக உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் சமையல் எரிவாயு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை சிறிய அளவில் உயா்த்தப்பட்டு வந்தன. இந்த விலை உயா்வு அவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலையில் அதிக அளவில் வரிகளும் சோ்ந்துள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் ரூ.52,537 கோடி வரி வசூலானது. இது கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.2.13 லட்சம் கோடியாக அதிகரித்தது. இந்த வரி வசூல் நடப்பு நிதியாண்டில் 11 மாதங்களில் ரூ.2.94 லட்சம் கோடியாக மேலும் அதிகரித்தது. பெட்ரோல், டீசல் மீதான வரி வசூல் 459% அதிகரித்துள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :