தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இடையே மோதலா? என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம்

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்த மகளிர் தினக் கொண்டாட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இடையே மோதல் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டின. `இந்நிகழ்வில் பங்கேற்க முதல்வர் வருகிறார்' எனத் தலைமை அலுவலகத்துக்குத் தகவல் அனுப்பப்பட்டது. காலை 10 மணிக்கு முதல்வர் வருவதாகக் கூறப்பட்டிருந்ததால் 9.15 மணியளவில் போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் வேகமெடுத்தன. ஆனால், முதல்வர் வரவில்லை. இதையடுத்து, மகளிர் தின விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அங்கு கேக் வெட்டிய ஓ.பி.எஸ், கட்சி அலுவலகத்தில் அரைமணி நேரம் இருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

முதல்வர் அலுவலக பதற்றம்

எடப்பாடி

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMI FB

தே.மு.தி.க உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தவிர, இன்றைய மகளிர் தின நிகழ்ச்சி நிரலில் பங்கேற்பதில் முதல்வருக்கு எந்தவிதச் சிக்கலும் இல்லை. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம் நடந்த அதேநேரம், பசுமை இல்ல சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் முதல்வர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். ` தொகுதிப் பங்கீட்டின்படி கூட்டணிக் கட்சிகளுக்கு சில தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. துணை முதல்வரும் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சரிபாதி அளவுக்கு இடங்களைக் கேட்பதால் சிக்கல் நீடிக்கிறது' எனத் தகவல் வெளியானது.

இதுதொடர்பான தகவல் வைரலாகப் பரவியதால் ஊடக நிறுவனங்களைத் தொடர்பு கொண்ட முதல்வர் அலுவலகம், ` துணை முதல்வரிடம் தெரிவித்துவிட்டுத்தான் பசுமை இல்ல வீட்டில் முதல்வர் ஆலோசனை நடத்தி வந்தார். நீங்கள் குறிப்பிடும்படியான எந்த சர்ச்சைகளும் இல்லை' என விளக்கமளித்தனர்.

என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

``அ.தி.மு.க சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதில் கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலரின் அழுத்தங்களும் உள்ளன. அவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்கின்றனர். பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கேட்கும் தொகுதிகளிலும் சில சிக்கல்கள் உள்ளன. அவற்றில் அ.தி.மு.கவின் சிட்டிங் எம்.எல்.ஏக்களின் தொகுதிகளும் வருகின்றன. அவற்றில் கைவைத்தால் அதிருப்தியாளர்கள் அணிதிரளும் அபாயங்களும் உள்ளன" என பிபிசி தமிழிடம் விவரித்தார் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகி ஒருவர்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பட்டியல்

பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், `` 234 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமே 70 இடங்களை ஒதுக்க உள்ளனர். மீதமுள்ள இடங்களில் அமைச்சர் தொகுதிகளில் கைவைக்க முடியாது. அவர்கள் அனைவருக்கும் சீட் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 124 பேரில் எத்தனை பேருக்கு சீட் கிடைக்கும் என்ற கேள்வியும் உள்ளது. காரணம், முதல்வருக்குத் தேர்தல் ஆலோசகராக இருக்கும் ஒருவர், எந்தெந்த தொகுதிகளில் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை முதல்வரிடம் கொடுத்திருக்கிறார்.

அதில் 30 சிட்டிங் எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் அதிருப்தி நிலவுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. இவர்களுக்கு சீட் மறுத்தால் வரப் போகும் பிரச்னைகளைப் பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறது. அமைச்சர்கள் பிளஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் ஆகியவற்றைக் கழித்தது போக மீதமுள்ள தொகுதிகளைத்தான் இ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் பங்கு போட்டுக் கொள்ள முடியும். இதில் அ.தி.மு.கவின் வழிகாட்டும் குழுவில் உள்ளவர்களும் தங்களின் ஆதரவாளர்களுக்கு சீட் கேட்கின்றனர்" என்கிறார்.

ஓ.பி.எஸ் பிடிவாதமா?

ஓபிஎஸ்

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து பேசுகையில், `` தென்மண்டலம் மட்டுமல்லாமல் வடமாவட்டங்களில் உள்ள தனது ஆதரவாளர்கள் சிலருக்கும் ஓ.பி.எஸ் சீட் கேட்கிறார். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் இருக்கிறார். தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு உடனடியாக வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இந்தப் பட்டியலில் உள்ளவர்களை வேட்பாளர் என அங்கீகரிக்கும் படிவம் ஏ மற்றும் இரட்டை இலை சின்னத்தைக் கோரும் படிவம் பி ஆகியவற்றில் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கையொப்பமிட்டால் மட்டுமே செல்லுபடியாகும். தனது ஆதரவாளர்களுக்கு சீட் மறுக்கப்பட்டால், படிவத்தில் கையொப்பமிட ஓ.பி.எஸ் மறுப்பு தெரிவிப்பார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி களமிறங்குவதால் ஓ.பி.எஸ்ஸை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். யாருக்கெல்லாம் சீட் என்பதில் ஏற்பட்ட குழப்பங்கள் ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார் விரிவாக.

சுமூக அறிவிப்பு?

`இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையே மோதலா?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து கொண்டிருக்கின்றன. தே.மு.தி.க உடனான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாகும். எதையும் விட்டுக் கொடுத்துப் போகும் தலைவராக ஓ.பி.எஸ் இருக்கிறார். முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பை வெளியிடும்போது, அன்று அவர் ஒப்புக் கொள்ளாமல் இருந்திருந்தால் பிரச்னை வரும் என எதிரிகள் எதிர்பார்த்தார்கள். அதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை. ஆட்சியும் கட்சியும் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அம்மாவின் பாராட்டைப் பெற்றவர் ஓ.பி.எஸ். எனவே, வேட்பாளர் பட்டியலை சுமூகமாக அறிவிப்பார்கள். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :