தி.மு.கவின் உறுதிமொழி: ‘குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 1000’

ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படுமென தி.மு.க. தனது செயல்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாகவும் திருச்சியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

திருச்சியில் தி.மு.கவின் தேர்தல் பிரசார மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய மு.க. ஸ்டாலின் தமிழகத்தை மேம்படுத்துவதற்கான ஏழு செயல்திட்டத்தை வெளியிட்டார்.

அதற்கு முன்பாக பேசிய அவர், "நவீன தமிழகத்தை உருவாக்கியது தி.மு.க. ஆட்சிதான். இந்த அடிப்படை கட்டமைப்பை சிதைத்தது அ.தி.மு.க. ஆட்சி. அடிப்படை கட்டமைப்பை சிதைப்பது, தி.மு.க. உருவாக்கிவைத்த திட்டங்களை குலைப்பதுதான் அந்த ஆட்சியின் பழக்கமாக இருக்கிறது. ஊழலுக்கு உதாரணம் அ.தி.மு.க. ஆட்சிதான். இந்தியாவிலேயே பதவியிலிருக்கும்போதே, ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு பதவி விலகியவர் ஜெயலலிதா. மே 2ஆம் தேதி அமையும் ஆட்சி பெரியார் விரும்பிய சமூக நீதி ஆட்சியாக, பேரறிஞர் அண்ணா விரும்பிய மாநில சுயாட்சிக்கான ஆட்சியாக, கலைஞருக்கான நவீன மேம்பாட்டு ஆட்சியாக, காமராஜரின் கல்வி வளர்ச்சி ஆட்சியாக ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக அமையும்" என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய ஏழு அம்சங்களில் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை மேம்படுத்தப்போவதாக கூறி, அதற்கான செயல்திட்டங்களை ஒவ்வொன்றாக அறிவித்தார்.

"அடுத்த பத்தாண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கை பொருளாதார வளர்ச்சியை எட்டுவது முதல் இலக்கு. நமது பொருளாதாரம் 35 லட்சம் கோடியைத் தாண்டும். தனி நபர் வருவாய் ஆண்டுக்கு 4 லட்சமாக உயரும். ஒவ்வொரு ஆண்டும் 10,00,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். கடும் வறுமையில் வாடும் மக்கள் அடுத்த பத்தாண்டுகளில் மீட்கப்படுவார்கள். வறுமைக்கோட்டிற்குள் கீழ் ஒருவர்கூட இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டின் நிகர பயிரிடும் பரப்பு 60 விழுக்காடாக இருக்கிறது. பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, இதனை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போதுள்ள 10 லட்சம் ஹெக்டேர் இருபோக நிலங்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தானிய உற்பத்தியைப் பொறுத்தவரை, தேங்காய், கரும்பு, பருத்தி, சூரியகாந்தி போன்ற பணப்பயிர்களின் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெறும்.

திமுக

நீர்வளத்தைப் பொறுத்தவரை, தனிநபர் பயன்பாட்டிற்கான தண்ணீரின் அளவு ஆண்டுக்கு 9 லட்சம் லிட்டரிலிருந்து 10 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும். தண்ணீர் வீணாகும் அளவினை 50 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பதோடு, மறுசுழற்சி செய்யப்படும் நீரின் அளவு 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படும். தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பு 20.27 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும்.

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு செலவிடப்படும் தொகை அடுத்த பத்தாண்டுகளில் 3 மடங்காக உயர்த்தப்படும். பள்ளிக் கல்வியில் இடைநிற்றல் 16 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்கப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன் மாதிரிப் பள்ளிகளும் மருத்துவமனைகளும் அமைக்கப்படும்.

நகர்ப்புறங்களில் உள்ள 36 லட்சம் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இதன் மூலம் குடிநீர் இணைப்புப் பெற்ற வீடுகளின் சதவீதம் 35லிருந்து 75ஆக உயரும். புதிதாக 9.75 லட்சம் வீடுகளைக் கட்டித்தருவதன் மூலம் குடிசை வீடுகளின் சதவீதம் 16.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்குக் குறைக்கப்படும். நாட்டின் சிறந்த 50 நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து 15 நகரங்கள் இடம்பெறச் செய்யப்படும்.

தமிழ்நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் இப்போது 57 சதவீத கான்க்ரீட் வீடுகள் உள்ளன. 20 லட்சம் கான்க்ரீட் வீடுகளை புதிதாக கட்டித்தந்து இந்த எண்ணிக்கை 85 சதவீதமாக உயர்த்தப்படும். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். எல்லா கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணைய இணைப்பு, எந்த வானிலையையும் தாக்குப்பிடிக்கும் சிறந்த சாலைகள், வடிகால் வசதிகள் அமைக்கப்படும்.

குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்களைப் பெரும் அனைத்து குடும்பங்களும் இதனால் பயனடையும். கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தித் தரப்படும். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவு ஒழிக்கப்படும்" என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக

இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2031க்குள், அடுத்த பத்தாண்டுகளுக்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் பெரியாரின் கனவுகளை, அண்ணாவின் கனவுகளை, கருணாநிதியின் கனவுகளை செயல்பட வைக்க நம்மால் மட்டும்தான் முடியும் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், அங்கு கூடியிருந்த தொண்டர்களை பின்வரும் உறுதி மொழியை ஏற்கச் செய்தார்.

"அனைத்து உரிமைகளும் கொண்டதாக தமிழ்நாட்டை மாற்றிக்காட்டுவோம். மக்களை பிளவுபடுத்தும் எவரையும் கூட்டாக எதிர் நின்று தோற்கடிப்போம். எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசை நடத்திக் காட்டுவோம். சட்டம் ஒழுங்கை உறுதியோடு காப்பாற்றுவோம். சட்ட மீறல்களையும் குற்றச் சம்பவங்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்போம். 100 சதவீதம் வெளிப்படையான ஊழலற்றை நிர்வாகத்தை கொடுப்போம். இந்த உறுதிமொழிகளை எந்நாளும் காப்போம்" என்ற உறுதிமொழியை மு.க. ஸ்டாலின் சொல்லச் சொல்ல தொண்டர்கள் திரும்பிச் சொன்னார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :