தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: உதயசூரியன் சின்னத்தில் போட்டி ஏன்? ஸ்டாலின் தலையீடும் வைகோ முடிவின் பின்னணியும்

உதயசூரியன் சின்னத்தில் போட்டி ஏன்? ஸ்டாலின் தலையீடும் வைகோ முடிவின் பின்னணியும்

பட மூலாதாரம், Twitter

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் ஆறு தொகுதிகளில் மறுமலர்ச்சி தி.மு.க போட்டியிட உள்ளது. இப்படியொரு முடிவை வைகோ எடுத்தது ஏன்? என்ற கேள்வி பரவலாக நிலவுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை, இழுபறி என அரசியல் களத்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டன. அ.தி.மு.க கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரதானக் கட்சிகள் இரண்டும் கடுமையாக தேர்தல் வேலைகளைப் பார்த்து வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் ம.தி.மு.கவுடன் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துவிட்டது. `தனிச்சின்னம் என்றால் நான்கு தொகுதிகள், உதயசூரியன் என்றால் ஆறு தொகுதிகள்' என தி.மு.க தரப்பில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் தி.மு.க - ம.தி.மு.க உடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டது.

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு

சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க, ம.தி.மு.க இடையே மூன்றுகட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்தன. தி.மு.கவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் ம.தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ஆவடி அந்தரிதாஸ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். `கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு எம்.பி தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தால், 2 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவது' என தி.மு.க தலைமை தீர்மானித்தது. பின்னர், அதனை 3 தொகுதிகளாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.

உடன்பாடு இல்லை!

அந்த அடிப்படையில் வி.சி.கவுக்கு 6 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. ம.தி.மு.கவுக்கு ஒரு எம்.பி தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அந்த அடிப்படையில் இடத்தை ஒதுக்க தி.மு.க முன்வந்தது. இதில் ம.தி.மு.க உடன்படவில்லை. இதுகுறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் பதில் அளித்த மல்லை சத்யா, `எங்களுக்கான அங்கீகாரத்தைத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். தி.மு.கவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த பேச்சுவார்த்தையின்போது தெரிவித்த அதே பதிலையே இப்போதும் தெரிவிக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகுதி எண்ணிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை' என்றார்.

"பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள், 12 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்த்தன. அவர்கள் அனைவரிடமும், நான்கு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர். இதற்குக் காரணம், ஐபேக் நிறுவனம் கொடுத்த வலுவான புள்ளிவிவரங்கள்தான்" என்கிறார் தி.மு.கவின் முன்னணி நிர்வாகி ஒருவர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மக்கள் நலக் கூட்டணியில் 29 தொகுதிகளில் ம.தி.மு.க நின்றதால், இந்தமுறை 10 தொகுதிகள் வரையில் வைகோ எதிர்பார்த்தார். ஆனால், களநிலவரம் என்ன என்பதை தி.மு.க நிர்வாகிகள் விவரித்தனர்."

வைகோ வெளியேறிவிடக் கூடாது!

ஸ்டாலின்

பட மூலாதாரம், Twitter

அதேநேரம், `இந்தக் கூட்டணியை விட்டு யார் வெளியேறினாலும் வைகோ போய்விடக் கூடாது' என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். `பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் அவர் வெளியேறிவிட்டால், நான் பழிவாங்கியது போல ஆகிவிடும்' எனவும் நினைத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டாலினை சந்தித்த வைகோ, `பொருளாதார ரீதியாக நான் வலுவாக இல்லை. எனக்கு ஒதுக்கப் போகும் தொகுதிகளில் நீங்கள்தான் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றார். இதற்கு ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்தார்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், "மு.க.ஸ்டாலினுக்கு இது மிகவும் முக்கியமான தேர்தலாக இருக்கிறது. 93 ஆம் ஆண்டு அக்டோபரில் வைகோவுடன் ஏற்பட்ட மோதலால் தி.மு.கவில் பிளவு ஏற்பட்டது. அதையடுத்து தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. ஏறக்குறைய 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் நிற்கிறார். அவரை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்ய உள்ளார். எனவேதான், வைகோவை கூட்டணியில் வைத்திருக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார்" என்றார்.

நிர்வாகிகள் கொடுத்த அழுத்தம்!

"தி.மு.க உடனான பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படாததால், ம.தி.மு.கவின் உயர்நிலைக்குழு கூடி முடிவெடுத்தது. `தனிச்சின்னம் என்றால் 4 தொகுதிகளுக்கு மேல் தர மாட்டார்கள். அந்தச் சின்னத்தை நம்மால் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவும் நேரம் இல்லை. எனவே, உதயசூரியன் சின்னத்திலேயே 6 தொகுதிகளில் போட்டியிடுவோம்' என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து ஒப்பந்தம் கையொப்பமானது" என்கிறார் ம.தி.மு.க நிர்வாகி ஒருவர். பிபிசி தமிழுக்காக பேசிய அவர், "இந்த விவகாரத்தில் ம.தி.மு.க நிர்வாகிகளும் வைகோவுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதில், முக்கிய நிர்வாகி ஒருவர் வைகோவிடம், `கடைசியாக நான் பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்றேன். அதன்பிறகு எந்த வாய்ப்புகளும் எனக்கு வரவில்லை' என வேதனைப்பட்டார். இதர நிர்வாகிகளும் இதே தொனியில் பேசினர்.

இதையடுத்து தி.மு.க தலைமையிடம் வைகோ பேசியபோது, 'ம.தி.மு.க சார்பில் ஒரு எம்.பி வெற்றி பெற்றார். நான் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறேன். எனவே, 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்' என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், `நீங்கள் ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர். உங்கள் குரல் அங்கு ஒலிக்க வேண்டும் என்பதாலேயே மாநிலங்களவை ஒதுக்கப்பட்டது. தனிச்சின்னத்தில் போட்டியிட 6 தொகுதிகளை ஒதுக்க முடியாது. அதேநேரம், உதயசூரியன் என்றால் பிரச்சனையில்லை' என்றார். இதனை நிர்வாகிகளிடம் விவாதித்த பிறகு வைகோவும் ஏற்றுக் கொண்டார்" என்கிறார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டி ஏன்? ஸ்டாலின் தலையீடும் வைகோ முடிவின் பின்னணியும்

உதயசூரியன் சின்னம் ஏன்?

`இப்படியொரு முடிவுக்கு என்ன காரணம்?' என ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "நாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் 12 தொகுதிகளில் நின்றால்தான் பம்பரம் சின்னம் கிடைக்கும். அதில் 8 தொகுதிகளில் வென்றால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். ஆறு தொகுதிகளிலும் ஆறு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். தேர்தலுக்கு சில நாள்களே உள்ளன. அதற்குள் சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது சிரமமான காரியம்.

எனவே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதே பாதுகாப்பானது என முடிவு செய்தோம். தி.மு.க தரப்பிலும் அதனை வலியுறுத்தினார்கள். பொதுவாக, மற்ற கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தி.மு.கவின் பெருந்தன்மையை பாராட்டுகிறோம். `எங்களோடு வாருங்கள். உங்கள் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்கிறோம்' என்றார்கள். நாங்களும் ஏற்றுக் கொண்டோம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :