தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: திமுகவின் கூட்டணிக் கணக்கில் கலங்கிப் போன கம்யூனிஸ்ட் கட்சிகள் - நடந்தது என்ன?

பட மூலாதாரம், Twitter
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 180 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க போட்டியிட உள்ளது. `கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்கிய விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுவிட்டார். நாங்கள் தோற்றுவிட்டோம்' என ஆதங்கப்படுகின்றனர் கம்யூனிஸ்டுகள். என்ன நடந்தது?
சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில வாரங்களே இருப்பதால், புதிய புதிய அறிவிப்புகளால் தி.மு.கவும் அ.தி.மு.கவும் வாக்காளர்களைத் திணறடித்து வருகின்றன. `இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000' என திருச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பானது. இதையடுத்து, `1,500 ரூபாயோடு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்' என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். `நாங்கள் அறிவிக்க இருந்த தகவல் கசிந்துவிட்டதால், தி.மு.க வெளியிட்டுவிட்டது' என அ.தி.மு.க தரப்பில் இருந்து விளக்கமும் கொடுக்கப்பட்டது.
புதிய அறிவிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளில் தி.மு.க கறார் காட்டியதை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளால் இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ம.தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளோடு முதலில் இழுபறி நீடித்தது. பின்னர், ம.தி.மு.க ஒப்புக் கொண்டுவிட்டதால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தி.மு.க தரப்பிடம் கூடுதல் தொகுதிகளை வாங்க முற்பட்டனர். ஒருகட்டத்தில் 25 தொகுதிகளுக்கு காங்கிரஸ் இசைவு தெரிவித்துவிட்டது. கூட்டணிக் கட்சிகளிலேயே மார்க்சிஸ்ட் கட்சியே கடைசி வரையில் சம்மதம் தெரிவிக்காமல், `8 தொகுதிகள் வரையில் பெற்றே தீருவது' என உறுதியாக இருந்தது.
`வேட்பாளர்களை அறிவிக்கவிருக்கிறோம். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது' என தி.மு.க தரப்பில் உறுதி காட்டியதால், வேறு வழியின்றி இறுதியாக மார்க்சிஸ்ட் கட்சியும் 6 இடங்களைப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டுவிட்டது.
பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், DMK
"கூட்டணிக் கட்சிகளை எத்தனை தொகுதிகளுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்பதை தி.மு.க தலைமை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டது. ஐபேக் நிறுவனம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து அவர்களுக்குத் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே தொகுதிகளை வழங்கியுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க, ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இல்லை. `அவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் இடங்களைக் கொடுப்பது' என்ற அடிப்படையில் செயல்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையொப்பம் போட்டவுடன், எங்களுக்கான பிடி நழுவிவிட்டது" என ஆதங்கத்தோடு பிபிசி தமிழிடம் விவரித்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர்.
15 ஆக குறைந்த 21
பெயர் குறிப்பிட விரும்பாமல் தொடர்ந்து பேசியவர், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் எங்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். `எதுவாக இருந்தாலும் இருவரும் அமர்ந்து பேசி முடிவு செய்வோம்' எனக் கூறிவிட்டு முதல் ஆளாகச் சென்று ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டுவிட்டனர். இதில் எங்களுக்கு மனவருத்தம்தான். தி.மு.க தரப்பிடம், எங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள 21 தொகுதிகளைக் கண்டறிந்து அதில் 15 தொகுதிகளுக்கான பட்டியலைக் கொடுத்தோம். அவை ஏற்கெனவே நாங்கள் வென்ற தொகுதிகள்தான். அந்தப் பட்டியலில் திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கோவை, நாகர்கோவில், நாகப்பட்டினம், பெரம்பூர் உள்ளிட்ட தொகுதிகளும் அடக்கம். தி.மு.க தரப்பில் நாங்கள் கொடுத்த பட்டியலை படித்துப் பார்த்தார்களா எனத் தெரியவில்லை. அவர்களிடம் கூடுதல் இடங்களைப் பெறுவதற்காக நாங்கள் எந்த லாபியும் செய்யவில்லை. `பா.ஜ.க, அ.தி.மு.கவை தோற்கடிப்பது' என முடிவெடுத்த பிறகு கூட்டணி தொடர்பாக நாங்கள் வேறு நிலைப்பாட்டை எடுக்க முடியாது. தி.மு.கவும், `எப்படியும் மார்க்சிஸ்ட் வெளியே போகாது' என உறுதியாக நினைத்துவிட்டனர்.
ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியோடு இழுபறியாகும் என நினைத்தோம். ஒரு எம்.பி தொகுதிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.பிக்கள் என்ற அடிப்படையில் 24 தொகுதிகள் என முடிவானது. இறுதியில் டெல்லியில் பேசி, ஒரு தொகுதியைக் கூடுதலாகப் பெற்று 25 தொகுதிகளை அவர்கள் வாங்கிவிட்டனர். இதற்காக அகில இந்திய தலைவர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். எங்களுக்கு அதுபோன்ற சூழல்கள் அமையவில்லை" என்கிறார் வேதனைக் குரலில்.
பா.ஜ.க என்ன செய்யும்?

தொடர்ந்து பேசுகையில், "தி.மு.க நிர்வாகிகள் எங்களிடம் பேசுகையில், `இந்த ஒருமுறை எங்களை விட்டுவிடுங்கள், 180 இடங்களில் நாங்கள் போட்டியிட்டால் 150 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெற்று ஆட்சியமைப்போம். எங்களுக்கு அந்த எண்ணிக்கை தேவையாக இருக்கிறது. காரணம், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியின் வலுவைப் பார்த்தால் தேர்தலுக்குப் பிறகு எங்கள் கட்சியில் இருந்து ஆள்களை எடுப்பதற்கும் அவர்கள் முயற்சி செய்வார்கள்' என்றனர். கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தமாக 54 இடங்கள்தான் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். நாங்கள் இரண்டு முறை பேச்சுவார்த்தையில் பங்குபெற்றோம். கூட்டணிக் கட்சிகளை கருணாநிதி கையாண்ட விதத்துக்கும் மு.க.ஸ்டாலின் எங்களைக் கையாண்ட விதத்துக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. அவர் கூட்டல், கழித்தல் கணக்குகளை வைத்துக் கொண்டு பேச மாட்டார். கட்சிகளின் தரத்தை மட்டுமே பார்ப்பார். அந்தந்த சூழலில் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது கருணாநிதிக்குத் தெரியும்.
மக்கள் நலக் கூட்டணிக் கணக்கு
அவரையும் தற்போதுள்ள தலைமையையும் ஒப்பிட முடியாது. நாங்களும் ஒருகட்டத்தில், `8 இடங்களைக் கொடுத்தாலாவது கையொப்பம் போடலாம்' என்றோம். காங்கிரஸை போல ஒரு தொகுதி கூடுதலாகக் கிடைக்கலாம் எனவும் நம்பினோம். அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள். இந்தப் பேச்சுவார்த்தையில், அவர்கள் முக்கியமான கணக்கு ஒன்றையும் முன்வைத்தனர். `2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே குறைவான வாக்கு சதவிகிதத்தைப் பெற்றுள்ளது. அந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் 0.9 சதவிகிதமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.8 சதவிகிதமும் மார்க்சிஸ்ட் 0.7 சதவிகிதமும் வாக்குகளைப் பெற்றிருந்தன. உங்களுக்கு ஒரு சீட் கூடுதலாகக் கொடுத்தால் அவர்களும் கேட்பார்கள்' என்ற காரணத்தை முன்வைத்தனர். இதனை சுட்டிக் காட்டிப் பேசியபோது எங்களால் பதில் அளிக்க முடியவில்லை" என்கிறார் அவர்.
இதையடுத்து பிபிசி தமிழிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், "வி.சி.கவுக்கு வட மாவட்டங்களில் சில தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் வலுவாக உள்ளது. 34 மாவட்டங்களிலும் தேர்தல் வேலை செய்யக் கூடிய களப்பணியாளர்களைக் கொண்டது மார்க்சிஸ்ட் மட்டும்தான் என்பது தி.மு.கவுக்கும் தெரியும். ஆண்டு முழுக்க மக்கள் பிரச்னைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். ஒரு எம்.பி தொகுதிக்கு 3 சீட் என்றால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில்தானே தி.மு.க வென்றது. இதனையும் லாஜிக் அடிப்படையில் பார்க்கலாம்தானே..
வேறு வழியில்லை

பட மூலாதாரம், DMK
ஒருகட்டத்தில் எங்களால் போராடிப் பெற முடியாது எனத் தெரிந்ததுவிட்டது. மேலும், தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வி.சி.க, ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பார்வையும் எங்களுக்கு எதிராகப் போய்விடும் என அச்சப்பட்டோம். அதிலும், இரண்டு முறை தி.மு.க ஆட்சியில் இல்லை. பெரும்பாலான இடங்களில் நிற்க வேண்டும் என அவர்கள் நினைப்பதில் தவறில்லை. அவர்கள் கொடுத்ததை மற்றவர்களும் வாங்கிக் கொண்ட பிறகு மனவருத்தத்தோடு ஏற்றுக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார் ஆதங்கத்துடன்.
குறைத்து மதிப்பிடவில்லை
சி.பி.எம் நிர்வாகிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், `இரண்டு பேரும் ஒன்றாகச் சென்று பேசுவோம்' என நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. `நாங்கள் பேசினாலும் சொல்கிறோம், நீங்கள் பேசினாலும் சொல்லுங்கள்' என்றோம். எத்தனை தொகுதிகள், எந்தெந்த இடங்கள் என்பதைப் பற்றியும் அவர்களிடம் நாங்கள் விவாதிக்கவில்லை.
அவர்களை அழைத்தார்கள்; அவர்கள் பேசினார்கள். எங்களை அழைத்தார்கள்; நாங்கள் பேசினோம். நாங்கள் இரட்டை இலக்கத்தில் இடங்களைக் கேட்டோம். தி.மு.க தரப்பு மறுத்தது. அடுத்தடுத்த எண்ணிக்கையை சொன்னோம். அதையும் அவர்கள் ஏற்கவில்லை. முடிவில், `அனைத்துக் கட்சிகளுக்கும் சமமாகக் கொடுக்க வேண்டும்' என்பதையும் வலியுறுத்தினோம். மார்க்சிஸ்ட் அதிகமான தொகுதிகளை வாங்கியிருந்தாலும் எங்களுக்கு ஒன்றுமில்லை. யாரையும் நாங்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை" என்றார்.
கூட்டணியை உரசுமா?

பட மூலாதாரம், Twitter
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "கூட்டணியில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட இன்றைக்கு வந்திருக்கக் கூடிய சவாலை எதிர்கொள்வதுதான் பிரதானமாக இருக்கிறது. எனவே, `அ.தி.மு.க, பா.ஜ.கவை தோற்கடிப்போம். தி.மு.க தலைமையில் மாற்று மதச்சார்பற்ற, ஜனநாயக அரசு உருவாகும். இது அகில இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தை உண்டாக்கக் கூடிய அடித்தளத்தை உருவாக்கும்' என உறுதியாக நம்புகிறோம். எனவே, தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம்" என்கிறார்.
`கூட்டணி உரசல்கள் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாதா?' என்று கேட்டபோது. "நிச்சயமாக இல்லை. கொரோனா காலத்தில் வேலையின்மை, சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலையேற்றம் என மக்களை வாட்டியெடுக்கும் பொதுப் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. பொதுப் பார்வையில் மக்கள் இதை உணர்ந்துதான் வாக்களிப்பார்கள். எங்கள் அணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்றார் உறுதியாக.
எதற்காக அதிக தொகுதிகள்?
`தி.மு.க குறித்து மார்க்சிஸ்ட் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் சரியானதா?' என தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் எதார்த்த நிலவரத்தைப் புரிந்து கொண்டு கூட்டணிக்குள் வந்தார்கள். எந்தக் கட்சியையும் குறைவாக மதிப்பிட்டோ, அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்றோ தலைமை நினைக்கவில்லை. தி.மு.க நினைப்பதெல்லாம், பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். கடந்த காலங்களில் இதுபோன்று நிறைய இடங்களை விட்டுக் கொடுத்ததால் மைனாரிட்டி அரசு என்ற வார்த்தையை சுமந்து கொண்டு எதையும் செய்ய முடியாமல் இருந்தது. அந்தநேரத்தில் நிறைய நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது" என்கிறார்.
மேலும், `` நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே கம்யூனிஸ்டுகள் தலா இரண்டு இடங்களில் வென்றது தமிழ்நாட்டில் மட்டும்தானே. அவை முழுவதும் தி.மு.க வெற்றி பெறக் கூடிய இடங்கள் என நினைக்கவில்லையே. நாகப்பட்டினம், கோவை, திருப்பூர் ஆகியவை தி.மு.க வெற்றி பெறக் கூடிய தொகுதிதான். அங்கு லட்சக்கணக்கான வாக்குகளில் கம்யூனிஸ்டுகள் வென்றார்கள். இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்பது எங்களின் ஆசைதான். எனவே, நிறைய தொகுதிகளில் போட்டியிட முடியாததை ஆதங்கமாகவே பார்க்கிறேன். மற்றபடி, இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













