திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் சிபிஎம்க்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு

பட மூலாதாரம், DMK

அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்படிக்கை உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில், தற்போது சிபிஎம் கட்சியுடனும் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் இதுவரை 54 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஎம் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிக இடங்களை எதிர்பார்த்ததாகவும், எனினும் தற்போது ஆறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். மேலும் பாஜகவை எதிர்க்கவேண்டும் என்பதற்காக திமுக கூட்டணியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரை முடிவாகியுள்ள தொகுதி பங்கீடு நிலவரப்படி, திமுகவிடம் 185 இடங்கள் உள்ளன. 49 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை, திமுக 178 தொகுதிகளில் போட்டியிட்டது.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

பட மூலாதாரம், DMK

2016 சட்டமன்ற தேர்தலில், மக்கள் நல கூட்டணி என்ற தேமுதிக அமைத்த மூன்றாவது அணியில் தேர்தலை சந்தித்த சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் 25 தொகுதிகள் வீதம் என 50 தொகுதிகளில் போட்டியிட்டன. ஆனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக, 2016 சட்டமன்றத்தில் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறாத சட்டமன்றம் அமைந்தது.

தற்போது, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ கட்சிக்கு ஆறு இடங்களும், சிபிஎம் கட்சிக்கு ஆறு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாத கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் மொத்தமாக 12 இடங்கள் கிடைத்துள்ளன.

இதுவரை திமுக அளித்துள்ள 54 இடங்களில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 12 தொகுதிகள், மதிமுகவுக்கு ஆறு இடங்கள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஆறு இடங்கள், முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மற்றும் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும் ஒதுக்கீடு செய்துள்ளது.

திமுக கூட்டணியில் இணையும் கட்சிகள்

கருணாஸ்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, கருணாஸ்

திமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் எந்த தொகுதியில் எந்த கட்சி போட்டியிடவேண்டும் என்பது குறித்த ஆலோசனை நாளை (மார்ச் 9, செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றவுள்ள அந்த கூட்டத்தில், முதல் கட்டமாக, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகள் பற்றிய ஆலோசனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில், இதுவரை 49 இடங்களை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அளித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸின் முக்குலதோர் புலிப்படை, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. அதோடு, தமிழக வாழ்வுரிமை கட்சியும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், அதிமுக ஆட்சியை அகற்றுவதற்காக திமுகவோடு இணைவதாக கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :