அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது: விஜயகாந்த் அறிவிப்பு

பட மூலாதாரம், Twitter
அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்தது. இதையடுத்து, இன்று (மார்ச் 9, செவ்வாய்க்கிழமை) தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் இன்றிலிருந்து (09.03.2021) அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY TWITTER
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ், "நாங்கள் கேட்ட தொகுதிகளும், எண்ணிக்கையும் தராததால் அதிமுக - பாஜக கூட்டணிலிருந்து விலகுவதாக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணிலிருந்து விலகியதால் எங்களுக்கு இன்றுதான் தீபாவளி. தமிழகத்தில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்" என்று தெரிவித்தார்.
அதிமுகவை வீழ்த்த தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் பணியாற்றுவார்கள் என்று கூறிய சுதீஷ், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, பாமகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம், தேமுதிகவின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்குமென்ற கேள்விக்கு பதிலளித்த அந்த கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி, "நாங்கள் 23 தொகுதிகள் கேட்டோம், அதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்ததால் அந்த கூட்டணியிலிருந்து விலகியுள்ளோம். தேமுதிக தனித்து போட்டியிடுமா என்பது குறித்து நாளை கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், விஜயகாந்தின் அறிவிப்பை அந்த கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கூடியுள்ள தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
"இனி அதிமுகவுக்கு இறங்கு முகம்தான்"
கடலூரில் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற கட்சி கூட்டமொன்றில் சற்று முன்னர் பேசிய தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், அதிமுக குறித்து கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.
"அதிமுகவுக்கு இனி இறங்குமுகம்தான். நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தலையே போனாலும் நாங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுகவின் சீட்டை தேமுதிகவினர் பறிப்பர். குறிப்பாக, எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தோல்வியடைவார்" என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- சசிகலாவின் அரசியல் விலகல் அமமுக கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?
- திமுகவின் கூட்டணிக் கணக்கில் கலங்கிப் போன கம்யூனிஸ்ட் கட்சிகள் - நடந்தது என்ன?
- கேரளாவில் இஸ்லாமியர் - கிறிஸ்தவர் ஒற்றுமையில் பாஜக பாதிப்பை ஏற்படுத்துமா?
- "ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன் இருந்தானா?" - 17 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அகழாய்வு முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













