இயற்கை விவசாயத்தில் புதுமுறை: மண்ணையே உரமாக, பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தி சாதிக்கும் தெலங்கானா இயற்கை விவசாயி

"நைட்ரஜன், ஃபாஸ்பரஸ், சூப்பர், பொட்டாஷ் - அனைத்தும் மண்ணிலேயே உள்ளன. மழையில் நனைந்தால், மண்ணிலிருந்து வெளிப்படும் இனிய மணம் பயிருக்கு சிறந்த சுவையையும், பழங்களுக்கு இனிப்பையும் தருகிறது" என்று மண் மற்றும் தனது விளைபொருட்களின் பின்னால் உள்ள ரகசியத்தை விளக்குகிறார் வெங்கட் ரெட்டி.
"2002 ஆம் ஆண்டில் மண்ணுடன் பரிசோதனை செய்யும் எண்ணம் எனக்கு வந்தது. எனக்கு தெரிந்த ஒருவரின் மலர் தோட்டத்தை நான் பார்வையிட்டேன். ஆரம்பத்தில், பூக்கள் பெரியதாக இருந்தன. மெதுவாக, அவை சிறியதாகிவிட்டன. மண்ணுக்கு வயதாகும்போது, பூக்கள் முழு அளவுக்கு வளராது என்பதை நான் உணர்ந்தேன். மண் "இறந்துவிட்டது" என்று நான் அவரிடம் சொன்னேன். அவர் அதை அகற்றிவிட்டு புதிய மண்ணை போடவேண்டும் என்று சொன்னேன். அவரும் அவ்வாறே செய்தார். எல்லா பயிர்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும் என்று நான் நினைத்து பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன். திராட்சை தோட்டங்கள், நெல் மற்றும் கோதுமை பயிர்களுக்கு இந்த மண் அணுகுமுறையை முயற்சித்தேன். இதன் மூலம் நல்ல பலன் கிடைத்தது,"என்று வெங்கட் ரெட்டி குறிப்பிட்டார்.
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோதி தனது "மன் கி பாத்" (மனதின் பேச்சு) நிகழ்ச்சியில் வெங்கட் ரெட்டியை புகழ்ந்து பேசினார்.

உரமாக மண்
மண்ணைப் பயன்படுத்துவதற்கான பரிசோதனை வெற்றியடைந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் வெளியில் இருந்து மண்ணைப் பெறுவது கடினமானது மற்றும் சிக்கலானது. மேலும், மண் கிடைக்கக்கூடிய பகுதியும் குறைவாக உள்ளது. ஆகவே வெங்கட் ரெட்டி தனது சொந்த வயலில் அகழிகளை தோண்டி, கீழ் அடுக்குகளிலிருந்து துணை மண்ணை வெளியே எடுத்து அதைப் பயன்படுத்தினார். ஐந்து அடி ஆழமும், இரண்டரை அடி அகலம் கொண்ட அகழிகள் தோண்டப்பட்டு அதிலிருந்து மண் எடுக்கப்பட்டது. வயலை உழும்போது, அந்த மண் வயலில் நிரப்பப்பட்டு, ஒரே சீராக பரப்பப்பட்டது. மீதமுள்ள மண் எதிர்கால பயன்பாட்டிற்காக உலரவைத்து பாதுகாக்கப்பட்டது.
"இந்த செயல்முறையின் மூலம், நான் நெல் சாகுபடிக்கு இயற்கை உரங்களை பயன்படுத்தியபோது, எனக்கு நல்ல மகசூல் கிடைத்தது. வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் பத்ம ராஜு இந்த பயிரைக் கண்டார். ஜெனீவாவின் சர்வதேச காப்புரிமை அமைப்பில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்குமாறு என்னிடம் யோசனை கூறினார்," என்று வெங்கட் ரெட்டி தெரிவித்தார்.
"நான் ஐ.சி.ஏ.ஆர். விஞ்ஞானி டாக்டர் கல்பனா சாஸ்திரியுடன் பேசினேன். 2004 ஜூனில் எனது விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். எனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக எட்டு மாதங்களுக்குப் பிறகு தகவல் கிடைத்தது. மேலும் 18 மாதங்களுக்குப் பிறகு, அது அவர்களின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. சர்வதேச காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சுமார் 120-130 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளனர். ஆனால் அமெரிக்கா காப்புரிமை வழங்கவில்லை," என்றார் வெங்கட் ரெட்டி.
அமெரிக்கா காப்புரிமையை வழங்காவிட்டாலும்கூட இந்த செயல்முறையை அறிந்த அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ், வெங்கட் ரெட்டியை சந்தித்து அவருக்கு சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
"மாவட்ட ஆட்சியரும் எங்கள் பண்ணைக்கு வந்து இந்த நடைமுறை பற்றி கேட்டறிந்து காப்புரிமை ஆவணங்களை பெற்றுக்கொண்டார். அவர் ஒரு மாதத்திற்குப் பிறகு என்னை அழைத்து, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என்னை சந்திப்பார் என்று தெரிவித்தார். மனிதகுலத்திற்கு பயனுள்ள நல்ல செயலை நான் செய்துள்ளேன் என்று புஷ் என்னைப் பாராட்டினார்," என்று வெங்கட் ரெட்டி தெரிவித்தார்.
"முன்பு வறட்சி இருந்தபோது கிணறுகளை ஆழமாக தோண்டி, சேற்று நீரை பயிர்களுக்கு திருப்பி விடுவார்கள். அத்தகைய நீரை பயன்படுத்தும்போது மகசூல் இயல்பை விட அதிகமாக, கிட்டத்தட்ட இருமடங்கு இருந்தது. கிணற்று நீர் காரணமாகவே நல்ல மகசூல் கிடைத்தது என்று ஆரம்பத்தில் நான் நினைத்தேன். கிணற்றில் உள்ள மண்ணால் தான் இந்த அதிசயம் ஏற்படுகிறது என்பதை பின்னர் உணர்ந்தேன்,"என்கிறார் அவர்.

நீர் மற்றும் மண் தெளிப்பு
2014 ஆம் ஆண்டில் வெங்கட் ரெட்டி வறண்ட மண்ணைத் தெளிக்கும் பரிசோதனையில் வெற்றி பெற்றார். கால்நடை தீவனத்திற்காக வளர்க்கப்பட்டு வரும் சோளப் பயிரில், உலர்ந்த மண் கலந்த தண்ணீரை தெளித்தார். தண்ணீரை சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால், மண் கீழே சென்றுவிடும். அந்த வண்டல் தெளிப்பானில் சிக்கிக்கொள்ளாது. சோளப் பயிர் நன்றாக வளர்ந்தது. இரண்டு நாட்களில், பயிரில் இருந்த பூச்சிகள் அனைத்தும் மறைந்துவிட்டன என்றும் அவர் தெரிவிக்கிறார்..
"அதைக்கண்டு நான் வியப்படைந்தேன். நான் மண்ணை மட்டுமே தெளித்தேன். எல்லா குழந்தைகளும் குழந்தைப்பருவத்தில் சாப்பிடும் அதே மண்தான்.விலங்குகளும் சிறிய அளவில் மண்ணை சாப்பிடுகின்றன. ஆனால் அவைகள் இறக்கவில்லை. அப்படியிருக்கும்போது பூச்சிகள் எவ்வாறு இறந்தன? இந்த எண்ணம் முடிவற்ற புதிராக இருந்தது. மாணவனாக நான் இருந்தபோது படித்ததை அப்போது நினைவு கூர்ந்தேன். பூச்சிகள் மற்றும் புழுக்களுக்கு கல்லீரல் இருக்கிறதா என்று யோசித்தேன்," என்று வெங்கட் ரெட்டி குறிப்பிட்டார்.
"நான் 2015 இல் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினேன். பூச்சிகளுக்கு கல்லீரல் உள்ளதா என்று இணையத்தில் தேடினேன். இல்லை என்ற பதில் எனக்கு கிடைத்தது. அவை உடல் மூலமாக சுவாசிக்கின்றன. மண் கலந்த தண்ணீரை தெளிக்கும்போது சரியாக சுவாசிக்க முடியாமல் அவை இறக்கின்றன என்பதை உணர்ந்தேன். மேலும் அவைகளுக்கு கல்லீரல் இல்லாததால், மண் செரிமானம் ஆகாது. எனவே மண் ஒரு நல்ல பூச்சிக்கொல்லியாக செயல்பட்டது. வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப அதை தெளித்தால் நல்லது,"என்றார் ரெட்டி.
அவ்வாறு தெளிப்பதன் மூலம் மண் வெப்பத்தை கட்டுப்படுத்துகிறது, வானிலையை தாங்கி, தாவரங்களின் நிலையை ஒழுங்குபடுத்தி பயிரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று வெங்கட் ரெட்டி கூறுகிறார். வெட்டுக்கிளிகளின் தாக்குதலைத் தடுக்கவும் மண் தெளிப்பு உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மண்ணைத் தெளிப்பது மட்டுமல்ல. சொட்டு நீர் விழும் இடங்களிலும் இந்த வகையான வறண்ட மண்ணை அவர்கள் வைக்கின்றனர். நெல் பயிருக்கு நீர் பாய்ச்சும்போது, இந்த மண்ணை நீர் தொட்டியில் கலக்கின்றனர். இந்த செயல்பாடு காரணமாக நல்ல மகசூல் மற்றும் நல்ல சுவை, நமக்குக்கிடைக்கும் நன்மைகள்.
"ஆனால்பாசன நீரில் மண்ணைக் கலப்பது மற்றும் ஒரு அகழி தோண்டி, மண்ணை வெளியே எடுத்து அதை தெளிப்பது ஆகிய இரண்டு செயல்களும் வெவ்வேறானவை என்று ஐரோப்பிய சமுதாய மக்கள் என்னிடம் சொன்னார்கள்," என்று அவர் விவரித்தார்.
எனவே வெங்கட் ரெட்டி ஒரு அகழி தோண்டி அந்த மண்ணை எருவாகப் பயன்படுத்துவதற்கான காப்புரிமையைப் பெற்றார். தண்ணீரில் மண்ணைக் கலந்து பின்னர் நீர்ப்பாசனம் செய்வதற்கான செயல்முறையை பற்றி பின்னர் சிந்திக்கலாம் என்றும் அவர் நினைத்தார். அந்த சிந்தனை ஒரு புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.

வைட்டமின் அரிசி என்றால் என்ன?
"நான் செய்யும் ஒவ்வொரு செயல்முறையையும் எனது நாட்குறிப்பில் எழுதுகிறேன். 2008 ஆம் ஆண்டில், நான் மண்கலந்த தண்ணீரை பாய்ச்சியபின்னர் எனது நாட்குறிப்பில் பின்தேதியில் சென்று பார்த்தேன். இதிலிருந்து எனக்கு ஒரு துப்பு கிடைத்தது, "என்று ரெட்டி நினைவு கூர்ந்தார். பயிரில் வைட்டமின் டி எவ்வாறு வளர்கிறது என்பதை காப்புரிமை தடைகள் அல்லது வேறு ஏதோ காரணத்தால் அவர் விரிவாகக் கூறவில்லை. "சில தாவரங்களின் எச்சங்களை தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு பாய்ச்சியதன்மூலம் அது சாத்தியமானது,"என்று அவர் குறிப்பிட்டார்.
"2008 ஆம் ஆண்டில், நான் உற்பத்தி சோதனை செய்தபோது, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை விளைச்சலில் இருந்தன. வேறு சில சோதனைகளுக்காக பயிரை அனுப்பியபோது இந்த விஷயம் வெளிப்பட்டது. அந்த நாட்களில், அனைவரும் வைட்டமின்கள் பற்றி பேசினர். 'வைட்டமின் ஏ' மற்றும் 'வைட்டமின் சி 'ஆகியவற்றிற்கு பதிலாக 'வைட்டமின் டி' ஐ அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டேன். அதில் வெற்றியும் கண்டேன். 2021 பிப்ரவரியில் 'வைட்டமின் டி செயல்முறை' காப்புரிமை வெளியிடப்பட்டது," என்று வெங்கட் ரெட்டி விவரித்தார்.
"தாவரங்களில் மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து உள்ளடக்கத்திற்கான கலவை" - இதற்காகத்தான் அவர் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.
நெல் மற்றும் கோதுமை மட்டுமல்ல, அனைத்து பயிர்களிலும் உள்ள ஊட்டச்சத்துக்களை இயற்கை வழிமுறைகள் மூலம் அதிகரிக்க முடியும் என்று அவர் கூறுகிறார். இந்த காப்புரிமைதான் பிரதமர் மோதியை, வெங்கட் ரெட்டி பற்றி பேச வைத்தது.
வெங்கட் ரெட்டி ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள அல்வாலில் பிறந்தார். அவர் தனது வீட்டுக்கு எதிரே இருக்கும் வயலில் விவசாயம் செய்தார். இது தவிர, அவருக்கு மற்றொரு பெரிய பண்ணை நிலமும் உள்ளது. வெங்கட் ரெட்டி பள்ளி சென்ற காலத்திலும் விவசாய வேலைகளில் தனது தந்தைக்கு உதவினார்.
1969 ல் பி.யு.சி முடித்தபிறகு அவர் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். ஆனால் கல்வியைத் தொடராமல் விவசாயத்தில் நுழைந்தார்.
தனது நடைமுறைகள், விஞ்ஞான ரீதியாகவும் பரவலாகவும் அரசால் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று வெங்கட் ரெட்டி விரும்புகிறார். தன்னை தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்குகிறார். பிற மாநிலங்களிலிருந்தும் கூட விவசாயிகள் அவரை அழைக்கிறார்கள்.
அவரது மகன் உயர் கல்வி பயின்றுள்ள போதும் வேளாண் துறையில் பணிபுரிகிறார். திராட்சைப்பயிர் வளர்ந்து தயாராவதற்கு முன்பே அவர்கள் ஆர்டர்களைப் பெறுகிறார்கள். அவற்றின் நல்ல சுவை மற்றும் இயற்கை விவசாய முறையே இதற்குக்காரணம். "மக்கள் நல்ல உணவை உண்ண வேண்டும். அவர்கள் நல்ல உணவைப் பற்றி சிந்திக்க வேண்டும். இயற்கை நடைமுறைகளைப் பின்பற்றி விவசாயிகள் தங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும். பயிர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நாம் வாங்கும் அனைத்துமே நம் காலடியில்தான் உள்ளன," என்று வெங்கட் ரெட்டி தனது சக விவசாயிகளிடம் கூறுகிறார்.
ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்ததை விட பிரதமர் மோதி தன்னைப் பற்றி பேசியதில் அதிக மகிழ்ச்சி அடைவதாக வெங்கட் ரெட்டி குறிப்பிட்டார். தன் தாய்நாட்டில் தனக்கு அங்கீகாரம் கிடைத்ததில் அவர் பெருமிதம் அடைகிறார்.
பிற செய்திகள்:
- இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம்: ஸ்டாலின், எடப்பாடி, கமல் உரிமை கோரும் திட்டத்துக்கு நிதி எங்கிருந்து வரும்?
- சசிகலாவின் அரசியல் விலகல் அமமுக கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?
- திமுகவின் கூட்டணிக் கணக்கில் கலங்கிப் போன கம்யூனிஸ்ட் கட்சிகள் - நடந்தது என்ன?
- கேரளாவில் இஸ்லாமியர் - கிறிஸ்தவர் ஒற்றுமையில் பாஜக பாதிப்பை ஏற்படுத்துமா?
- "ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன் இருந்தானா?" - 17 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அகழாய்வு முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
(బీబీసీ తెలుగును ఫేస్బుక్, ఇన్స్టాగ్రామ్, ట్విటర్లో ఫాలో అవ్వండి. యూట్యూబ్లో సబ్స్క్రైబ్ చేయండి.)













