உணவுக் காடு: "உழவில்லா வேளாண்மை" - விவசாயிகளுக்கு வழிகாட்டும் சரோஜா #iamthechange

காணொளிக் குறிப்பு, மாற்று விவசாயம் செய்யும் சரோஜா
    • எழுதியவர், மு.நியாஸ் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்று மற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 17வது அத்தியாயம் இது.)

எப்போதும் விவசாயிகளுக்குப் பிரச்சனையாக இருப்பது சந்தைப்படுத்துதல்தான். மரபுகளாக தொடரும் அனுபவ அறிவினாலும், புதிய நுட்பங்களாலும் விவசாய உற்பத்தியில் சாதனை செய்யும் விவசாயிகளால்கூட, சந்தைப்படுத்துதல் என்று வரும் போது வெற்றி பெற முடிவதில்லை. மிகை உற்பத்தி, மிகவும் குறைவான கொள்முதல் விலை என சந்தைப்படுத்துதலில் பல்வேறு பிரச்சனைகளைத் தமிழக விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.

இந்த இடர்களை எல்லாம் வென்றெடுத்து சந்தைப்படுத்துதலில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சரோஜா. தான் வென்றது மட்டுமல்லாமல், பல விவசாயிகளுக்கு வழியையும் காட்டி வருகிறார் சரோஜா.

சரோஜா

'நம்மாழ்வார் காட்டிய வழி'

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டி என்று சிறிய ஊரில் விவசாயம் செய்து வருகிறார் சரோஜா. விவசாயம் மட்டுமல்லாமல் தான் உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களை வெற்றிகரமாக மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி வருகிறார் அவர்.

"இது நம்மாழ்வார் காட்டிய திசை வழி. நாற்பது வயது வரை நானும் சாதாரண ஒரு குடும்ப பெண்ணாகத்தான் இருந்தேன். குடும்பத்தில் பலருக்கு வந்த உடல் நலக் கோளாறுகள் தான் என்னை இந்த இடத்திற்கு வந்து நிறுத்தியது." என்கிறார் சரோஜா.

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

மேலும் அவர், "குடும்பத்தில் தொடர்ந்து பலர் புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க் கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டார்கள். இது எனக்கு வாழ்க்கை குறித்த ஓர் அச்சத்தையும், கேள்வியையும் எழுப்பியது. என்னைச் சுற்று எதுவுமே சரியில்லாமல் இருப்பது போல உணர்ந்தேன். அந்த சமயத்தில்தான் நம்மாழ்வாரை சந்தித்தேன். 'இயற்கைக்குத் திரும்பு' என்று அவர் கூறிய வார்த்தைகள்தான் என்னை மீண்டும் எங்கள் விவசாய நிலம் நோக்கித் திரும்ப வைத்தது. குறிப்பாக அவர் சுனாமி பாதித்த நிலத்தை மீட்டுப் பண்படுத்தி விவசாயம் செய்தது பெரும் நம்பிக்கையை அளித்தது. அந்த நம்பிக்கைதான் என்னை இங்கு வந்து நிறுத்தி இருக்கிறது" என்கிறார் சரோஜா.

'உணவுக்காடு'

சரோஜா

நான் இங்கு அனைவரும் செய்யும் விவசாயத்தைச் செய்யவில்லை. இங்கு உணவுக் காடு அமைத்திருக்கிறேன் என்று சொல்கிறார் சரோஜா.

அவர், "இது உழவில்லாத வேளாண்மை. நிலத்தை உழாமல் செய்யும் வேளாண்மை. ஜப்பான் வேளாண் முன்னோடி ஃபுகாகோ செய்த வேளாண்மை. நமக்கான உணவு உற்பத்திக்காக நிலத்தைக் கொலை செய்யாமல், இயற்கையுடன் இயைந்து செய்யும் வேளாண்மை," என்கிறார்.

பல அடுக்கில் மரங்களை நட்டுச் சூழல் பன்மயத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக தேவையான உணவை உற்பத்தி செய்கிறேன் என்கிறார் சரோஜா.

'லாபகரமாக விவசாயம்'

சரோஜா

உணவுக் காடு, உழவில்லாத வேளாண்மை - இதனை எல்லாம் கடந்து வெற்றிகரமாகப் பொருளாதார ரீதியாக லாபமீட்டி வருவதாகக் கூறுகிறார் சரோஜா.

அவர், "நான் ஏதோ காடு வளர்க்கிறேன். இயற்கை விவசாயம் செய்து சந்தோஷமாக இருக்கிறேன் என்பதையெல்லாம் தாண்டி உண்மையில் இதில் நான் லாபமீட்டி வருகிறேன்." என்கிறார் சரோஜா.

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

அவர் நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார் அவர்.

சரோஜா

சரோஜா, "ஒரு விளை பொருளிலிருந்து பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறோம். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், முருங்கைகாயை நேரடியாக அப்படியே விற்றால் ஒரு காயை 5 ரூபாய்க்கு விற்கலாம். ஆனால், அதிலிருந்து எண்ணெய் தயாரித்து விற்றால், 50 மில்லி லிட்டர் எண்ணெய்யிலிருந்தே ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்" என்று கூறுகிறார்.

"முருங்கையிலிருந்து எண்ணெய், தேங்காயிலிருந்து சோப்பு என பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறோம். சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சியையும் விவசாயிகளுக்கு அளிக்கிறோம்," என்று தெரிவிக்கிறார் அவர்.

"உற்பத்தி செய்பவனே வணிகனாக மாறினால் மட்டுமே விவசாயத்தில் லாபமீட்ட முடியும். விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலகி வேறு தொழிலுக்குச் செல்லும் இந்தக் காலகட்டத்தில் அவர்களை நிலத்தில் தக்க வைக்க, வெற்றிகரமாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறோம்" என்று கூறுகிறார் சரோஜா.

விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் சந்தைப்படுத்த இவரது முயற்சியில் அந்தப் பகுதி விவசாயிகள் இணைந்து ஒரு நிறுவனத்தையே தொடங்கி இருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: