இந்தியா வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ: 3 நாள் பயணம்

பட மூலாதாரம், ANI
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் அவரை வரவேற்றார்.
அதிபர் பதவியேற்ற பிறகு கோட்டாபய மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம் இது.
இலங்கை உள்நாட்டுப் போரில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அந்த இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளும், பொதுமக்களும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதாக புகார்கள் உண்டு.
இந்தப் பின்னணியில் கோட்டாபய இந்திய வருகையை ஒட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினார்.
கோட்டாபய பதவியேற்றவுடன் இலங்கைக்கு நேரடியாக சென்று வாழ்த்துத் தெரிவித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அளித்த வாழ்த்துக் கடிதத்தையம் அவர் அப்போது கோட்டாபயவிடம் அளித்தார். அத்துடன் மோதியின் அழைப்பை ஏற்று உடனடியாக இந்தியா வருகை தரவும் அவர் ஒப்புக்கொண்டார்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் சீன ஆதரவுப் போக்கு உடையவர்கள் என்று கருத்து நிலவி வந்த நிலையில், அவரை இந்திய வெளியுறவு அமைச்சர் நேரில் சென்று சந்தித்ததும், உடனடியாக அவர் இந்தியா வர ஒப்புக்கொண்டதும் அரசியல் நோக்கர்களை இந்த விஷயத்தை கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.
இது தொடர்பாக ஆராயும் பிபிசி தமிழ் கட்டுரை: சீனாவை புறந்தள்ளி இலங்கையை வசப்படுத்த காய்நகர்த்துகிறதா மோதி அரசு?
கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுவார். அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்திப்பார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு வெள்ளிக்கிழமை முறைப்படியான வரவேற்பு அளிக்கப்படும். காந்தியடிகள் நினைவிடமான ராஜ்காட்டுக்கும் செல்வார் கோட்டாபய.
பிற செய்திகள்:
- 'எனை நோக்கி பாயும் தோட்டா' நாளை பாய்கிறது; 4 ஆண்டுகள் காத்திருந்த சினிமா
- இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தடுத்து வைத்து மிரட்டப்பட்டதாக புகார்
- கோட்டாபயவின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவை பகைத்துக் கொள்ளாத சீனச் சார்பா?
- அஜித் பவாரின் எதிர்காலம் எப்படி இருக்கும்? மீண்டும் துணை முதல்வர் ஆவாரா?
- கோட்சே குறித்த சர்ச்சை பேச்சு: பிரக்யா சிங் தாக்கூர் பதவி நீக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












