சாதி சான்றிதழை ஒழித்தால் சமூகம் சமநிலை பெறுமா? - சாதி, மதமற்றவரென சான்றிதழ் பெற்றவர் கூறுவது என்ன? #iamthechange
- எழுதியவர், மு.நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
(Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 13வது அத்தியாயம் இது.)
ஸ்நேகா. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர்.
இந்தியா என்றாலே சாதி மதம்தான் என சர்வதேச அளவில் அடையாளப்படுத்தப்படும் வேளையில் அந்த பிம்பத்தை கட்டுடைத்தவர் இவர் என்றும், சாதி ஒழிப்பு இந்தப் புள்ளியில் தொடங்கி உள்ளதாகவும் அப்போது சமூக ஊடகங்கள அவரை கொண்டாடின; சிலாகித்து எழுதின.
சாதி சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழியுமா?
#iamthechange தொடருக்காக ஸ்நேகாவை சந்திக்க வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சென்றபோது, தீர்க்கமான குரலில், "சாதி சான்றிதழை ஒழிப்பதால் மட்டுமே சாதி ஒழிந்துவிடாது." என்றார்.
ஸ்நேகாவின் பெற்றோர்களான ஆனந்த கிருஷ்ணனும், மணிமொழியும் வழக்கறிஞர்கள். முற்போக்கு சிந்தனையாளர்கள். தங்களது மூன்று பிள்ளைகளுக்கும் ஸ்நேகா, மும்தாஜ், ஜெனிஃபர் என வெவ்வேறு மத பெயர்களை சூட்டி இருக்கிறார்கள்.

"நான் வழக்கறிஞர் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள். என்னுடைய பெற்றோர் ஆனந்த கிருஷ்ணன், மணிமொழி இருவரும் வழக்கறிஞர்கள். யோசித்து பார்த்தால் ஜாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வாங்கும் முயற்சியை நான் தொடங்கவில்லை. இந்த முயற்சி என் பெற்றோர்களிடமிருந்துதான் தொடங்கியது. அவர்கள்தான் இவ்வாறான சான்றிதழ் பெற பெரும் முயற்சி எடுத்தார்கள். அப்போது அது சாத்தியப்படவில்லை. பல ஆண்டுகளாக நடந்த முயற்சிக்குப் பின் இப்போதுதான் எனக்கு சாத்தியப்பட்டிருக்கிறது" என்கிறார்.
மேலும் அவர், "சான்றிதழாக பெறாவிட்டாலும் என்னையும், இரு தங்கைகளையும் பள்ளியில் சேர்க்கும்போது, எங்கள் சாதி, மதங்களை எங்கேயும் குறிப்பிடவில்லை." என்கிறார்.
ஸ்நேகா, "சாதி சான்றிதழ் என்று ஒன்று உருவாகுவதற்கு முன்பே சாதி தோன்றிவிட்டது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் காகிதம் என்று ஒன்று உருவாகுவதற்கு முன்பே சாதி உருவாகிவிட்டது. அதனால் சாதி சான்றிதழை ஒழிப்பதால் மட்டுமே சாதியத்தை, சாதிய பாகுபாட்டை ஒழித்துவிட முடியாது." என்கிறார்.
சாதி சான்றிதழ் தேவை

"ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு நிச்சயம் சாதி சான்றிதழ் தேவை. பட்டியலின மக்கள் இடஒதுக்கீட்டின் பலன்களை பெற சாதி சான்றிதழ் அவசியம்" என்று கூறும் ஸ்நேகா, "அதேநேரம் சாதியத்தை ஒழிக்க பல்முனை தாக்குதல்கள் தேவை. பிறக்கும் போதே சாதி மதத்துடன்தான் பிறக்கிறார்கள் என்று நிலவும் இந்திய சூழலில், சாதி மதமற்றவர் என சான்றிதழ் பெறுவதை முக்கியமானதாக நினைக்கிறேன். பிறப்பிலே சாதி வந்துவிடுகிறது என்று நினைக்கும் மனநிலைக்கு எதிரானதாக இதனை நான் முன்னிறுத்துகிறேன்" என்கிறார்.
நிச்சயம் அனைவரும் சாதியற்றவர் என சான்றிதழ் வாங்க தேவை இல்லை. சமூகத்தால் நாம் ஒடுக்கப்படவில்லை, பொருளாதார தன்னிறைவுடன் இருக்கிறோம் என்று கருதுபவர்கள் வேண்டுமானால் சாதி சான்றிதழை விட்டுதரலாம் என்கிறார் ஸ்நேகா.

"சாதி, மதம் அடையாளம் கொண்டு எங்களை பிரித்தாள பார்க்காதீர்கள் என்பதற்கான சமிக்ஞைதான் என் இந்த நடவடிக்கை. சாதி, மதம்தான் சமூகம் என்று கட்டமைப்பை ஏற்படுத்தியவர்களுக்கு அல்லது ஏற்படுத்த முயல்பவர்களுக்கு என்னளவில் நான் கொடுக்கும் அடி இது." என்கிறார் அவர்.

iamthechange தொடரின் முந்திய கட்டுரைகளைப் படிக்க:

சாதியற்றவர் சான்றிதழை பெற்றது எப்படி?

உண்மையில் சாதி மதமற்றவரென சான்றிதழ் பெறுவது அவ்வளவு சுலபமானதாக இல்லை என்கிறார் ஸ்நேகா.
ஏழாண்டுக்கும் மேலான முயற்சிக்கு பின்பே ஸ்நேகா இந்த சான்றிதழை பெற்றிருக்கிறார்.

அவர், "சாதி இருக்கிறதென சொல்லதான் எங்களுக்கு உரிமை இருக்கிறது. சாதி இல்லை என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டார்கள்" என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் ஸ்நேகா.
அவர், "பத்தாண்டுகளுக்கு முன்புதான் இதற்காக முதல்முறையாக விண்ணப்பித்தேன். ஆனால், தாலுகா அலுவலகத்திலேயே நிராகரித்து விடுவார்கள். மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு சொல்கிறோம் என்பார்கள். ஏன் இதனை கேட்கிறீர்கள் என அச்சுறுத்தலாக பார்ப்பார்கள்.ஆனால், இந்த முறை சார் ஆட்சியர், வட்டாட்சியர் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்" என்கிறார் ஸ்நேகா.

சாதியற்றவர் என்று சான்றிதழ் பெற தாம் மேற்கொண்ட முறையை விவரிக்கிறார், "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கமாக சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் வழியிலேயே சாதியற்றவர் என சான்றிதழ் பெறவும் விண்ணப்பித்தேன்.முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்தேன். அதனை அவர் ஆர்.ஐ-யிடம் அனுப்பினார். அங்கிருந்து தாசில்தார் மேஜைக்கு என் விண்ணப்பம் சென்றது. அதன்பின் அவர்கள் விசாரணையை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு நான் நிறைய விளக்கம் அளிக்க வேண்டி இருந்தது. நான் யாருடைய உரிமையையும் பறிப்பதற்காக இந்த சான்றிதழை கேட்கவில்லை என விளக்கம் அளித்த பின்தான் அவர்கள் சான்றிதழ் அளித்தார்கள்" என்கிறார் ஸ்நேகா.
வாழ்வியல் முறை
என் பெற்றோர் சாதி, மதங்களை துறப்பதை வெறும் நடவடிக்கையாக பார்க்கவில்லை. அதனை ஒரு வாழ்வியல் முறையாகதான் பார்த்தார்கள், அப்படிதான் வாழவும் செய்தார்கள், எங்களையும் அப்படிதான் வளர்த்தார்கள் என்று கூறும் ஸ்நேகா, தங்கள் பிள்ளைகளையும் அப்படிதான் வளர்ப்பதாக கூறுகிறார் ஸ்நேகா.
ஆதிரை நஸ்ரின், ஆதிலா அய்ரின், ஹாரிஃபா ஜெஸ்ஸி என்று தங்களது பிள்ளைகளுக்கு பெயரிட்டு இருக்கிறார்.
ஸ்நேகா, "என் கணவர் பார்த்திபராஜாவும் சாதி, மத மறுப்பாளர். பெண்ணிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சுயத்தை மதிப்பவர். எங்கள் திருமணமே சாதி மறுப்பு திருமணம்தான். இதனை சாத்தியப்படுத்தியதில் அவரது பங்கு பெரிது" என்று குறிப்பிடுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













