300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

(கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் நேற்று காலை தவறி விழுந்தான். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் உடனடியாக சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பத்திரமாக மீட்டனர்" இவ்வாறு அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தின் இறுதியில், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் என்ற குழந்தையை மீட்பதற்கு 82 மணி நேரம் போராடிய பிறகு, குழந்தை இறந்ததாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

இந்து தமிழ்: ஐடியா-வோடஃபோன் மிகப் பெரும் வருமான இழப்பு

வோடஃபோன்

பட மூலாதாரம், Getty Images

ஏர்டெல் தொலைபேசி சேவை நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடியா-வோடஃபோன் தொலைபேசி சேவை நிறுவனமும் செப்டம்பர் 30ம் தேதி முடிவடைந்த 2ம் காலாண்டில் ரூ.50.921 கோடி என்று பெரும் இழப்பு ஏற்பட்டதை தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"சமீப காலங்களில் எந்த ஓர் இந்திய நிறுவனமும் காலாண்டில் இத்தகைய பெரும் இழப்பு ஈட்டியதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் இதுதொடர்பாக பேசிய வோடஃபோன் நிறுவனத்தின் பிராந்திய தலைவர், அரசு கைகொடுக்கவில்லை எனில் நிச்சயம் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் கடினமே என்று தெரிவித்திருந்தார்.

ஜூலை - செப்டம்பர் 2019, காலாண்டில் இந்தியாவின் பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது ரூ.23,045 கோடி நஷ்டமடைந்துள்ளது ஏர்டெல்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: சந்திரயான்-3 விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

சந்திரயான்-3

பட மூலாதாரம், Getty Images

சந்திரயான்-3 விண்கலத்தை 2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"பெங்களூருவில் இஸ்ரோ அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திரயான்-3 திட்ட உயா்நிலைக் குழு கூட்டத்தில், இதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை லேண்டா் மற்றும் ரோவா் ஆகிய இரு அமைப்புகளை மட்டும் விண்கலம் மூலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி ஒருவா் கூறுகையில், சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைக்கும் பணிகளை 2020 நவம்பருக்குள் நிறைவு செய்வது என இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், சந்திரயான்-2 ஆா்பிட்டா் தொடா்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், சந்திரயான்-3 விண்கலம் மூலம் லேண்டா் மற்றும் ரோவா் ஆகிய இரு அமைப்புகளை மட்டும் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன், இம்முறை அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்தச் சூழலிலும் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :