சபரிமலை வழக்கு: இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்டு வழங்கிய தீர்ப்பு

Kerala's Sabarimala

பட மூலாதாரம், SAM PANTHAKY/ getty images

சபரிமலையில் பெண்களை வயது வித்தியாசமில்லாமல் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீதான மறு ஆய்வு மனுக்கள் குறித்து 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தெரிவித்துள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். பிற இரண்டு நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பு அதிக எண்ணிக்கையிலான நீதிமன்ற அமர்வுக்கு பரிந்துரைக்கவில்லை. ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றவும் இல்லை.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், ஏ. எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்திரா ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.

ரஞ்சன் கோகோய், கான்வில்கர், இந்து மல்கோத்திரா ஆகிய பெரும்பான்மையான மூன்று நீதிபதிகளின் முடிவு தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, மாற்றும் முயற்சிகளை அரசியலமைப்பின் நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்க முடியாது என்றும், ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை ஏற்க வேண்டும் என்பதை சற்றே மறைமுகமாகவும் தெரிவித்துள்ள இரண்டு நீதிபதிகள், கேரள மாநில அரசுக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர்.

சபரிமலை பக்தர்கள்

பட மூலாதாரம், Getty Images

"தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் அது இறுதியானது. எல்லோரையும் கட்டுப்படுத்தக்கூடியது. தீர்ப்பை மீற செய்யப்படும் முயற்சிகள்,ஒருங்கிணைந்த முறையில் உறுதியாக முறியடிக்கப்படவேண்டும். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு," என்று தமது உத்தரவில் இந்த நீதிபதிகள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

அந்த இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பின் சுருக்கம்:

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நல்ல நோக்கத்தோடு விமர்சிக்கலாம் என்றாலும், அந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் அல்லது ஆணைகள் அமலாவதை தடுப்பதும், தடுப்போருக்கு ஊக்கமளிப்பதும், நமது அரசியல் சாசன முறைகளின்படி பொறுத்து கொள்ள முடியாது.

நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
படக்குறிப்பு, நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

இந்திய அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ளபடி, சட்டப்படியான ஆட்சி நடைமுறையாக்குவதே நமது நோக்கம். இந்தியாவின் "புனித நூல்" அரசியல் சாசனம் என்பதை ஒவ்வோர் இந்தியரும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மகா சாசனத்திலுள்ள குறிக்கோள்களை நனவாக்குவதற்கு, எல்லா மனித முயற்சிகளோடும் முன்செல்ல, இந்திய குடிமக்கள் நாம் ஒரு நாடாக நடைபோடுகிறோம்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை எல்லா அதிகாரிகளும் நடைமுறைப்படுத்தும் கடமை உள்ளது என இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது.

இந்தியாவில் சட்டப்படியான ஆட்சி நடைபெறுவதற்கு, அதிகாரிகள் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது.

இந்த கடமையை விருப்பப்படி செயல்படுத்துவதும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதும் சட்டபடியான ஆட்சி நடைபெறுவதற்கு முட்டுக்கட்டையாக அமையும்.

தீர்ப்பு வழங்கப்படும் முன்னரும், வழங்கப்பட்ட பின்னரும் வழக்கின் பங்குதாரார்களுக்கு நீதித்துறையின் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில்தான், இந்த வழக்கின் மறு ஆய்வு நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்திய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

அதனால், அனைத்து தரப்பின் வாதங்களும் கேட்கப்பட்டன. இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் நீதிமன்றம் முறையாகவும் நேர்மையுடனும் அணுகியது.

சட்ட வரையறைகளுக்கு உட்பட்டே பாதிக்கப்படக்கூடிய மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நீதித்துறை மூலம் தீர்வுகள் வழங்கப்படுகிறது.

இந்தசட்ட நடைமுறைகள் நிறைவடைந்து, நீதிமன்றத்தின் முடிவு தெரிவிக்கப்பட்ட பின்னர், இது உச்ச நீதிமன்றத்தின் தீர்மானமாக இருக்கும். எல்லாரும் இந்த தீர்மானத்திற்கு கட்டுப்பட வேண்டும்.

இந்த தீர்மானத்திற்கு இணங்க வேண்டுமென்பது அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்யக்கூடிய விஷயம் அல்ல.

அவ்வாறு இருக்குமானால், இந்த நீதிமன்றத்தின் அதிகாரம், தீர்ப்பை கடைபிடிக்க வேண்டியவர்களின் விரும்பத்திற்கு ஏற்க அமைவதாக மாறிவிடும்.

தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்கள் மூலம் இந்த தீர்ப்பை கேரள மாநில அரசு விளம்பரப்படுத்த வேண்டும்.

இந்திய அரசியல் சாசன மதிப்பீடுகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய இந்த சமூகத்தின் நம்பகத்தன்மையை பெற மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சபரிமலை கோயில்

பட மூலாதாரம், Google

நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்படும் முறைமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், பாதிக்கப்படுவோரின் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் நேர்மையான கவலைகளையும் கவனத்தில் எடுத்துகொள்ளுவதற்கும், பல குழுக்களில் கலந்தாய்வுகளை மாநில அரசு நடத்தலாம்.

இந்த தீர்ப்பு அமலாகுவதற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் நடவடிக்கைகள் உறுதியாக தடுக்கப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமலாக்கத் தேவையான முறைகளை வகுப்பதும், நீண்டகால அமைதியை ஏற்படுத்தும் தீர்வுகளை வழங்குவதும், அதேநேரத்தில் அரசியல் சாசன மதிப்பீடுகளின் அடிப்படையில் மனித மாண்பை மறுபடியும் உறுதிசெய்யப்படும் வகையிலும் கேரள அரசின் செயல்கள் அமைய வேண்டும்.

அதிலுள்ள கடமைகளுக்கு ஏற்ப, சட்டப்படியான ஆட்சியை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். அதன்படி எல்லா புகார்களும் விசாரிக்கப்படும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :