ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: விசாரணை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்

பட மூலாதாரம், Twitter
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்துவந்த மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, சந்தேக மரணமாக அவரது இறப்பை வழக்காகப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .
கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு மாற்றி, விசாரணையை தொடங்கியுள்ளதாக ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். விசாரணை குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட, சிபிஐ-யில் பணிபுரிந்த இரண்டு உயரதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார் விஸ்வநாதன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் கூடுதல் துணை ஆணையர் மேகாலினா இந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். புலன் விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கு தொடர்பான பிற விவரங்களை தற்போது தெரிவிக்கமுடியாது என்றார்.
மாணவி பாத்திமா லத்தீப் இறப்புக்கு நீதிவேண்டும் எனக் கோரி இந்திய மாணவர் சங்கம், தமிழக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஐஐடி வளாகத்தின் முன் போராட்டம் நடத்தினர்.

பாத்திமாவின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வேதனையளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
பாத்திமா லத்தீப்பின் பெற்றோரிடம் பேசியதாக கூறிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மாணவி பாரபட்சமாக நடத்தப்பட்டதாக பெற்றோரிடம் ஏற்கனவே கூறியுள்ளதாக தெரிவித்தார். ''பாத்திமாவுக்கு மத ரீதியான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. அவர் சிறப்பாக படிக்கும் மாணவியாக எல்லா பாடங்களிலும் நன்றாக தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் திடிரென தற்கொலை செய்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அவரது மரணத்திற்கு நீதிவேண்டும்,'' என அவர் தெரிவித்துள்ளார்.
ஐஐடி மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் தலைவர் உமாகாந்த் தாஸ் மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் பாத்திமா வகுப்பில் எல்லோரிடமும் நன்றாக பழகக்கூடியவராக இருந்தார் என்கிறார்.
மாணவியின் மரணத்தால் அவரது வகுப்பைச் சேர்ந்த சகமாணவர்களும் கவலையில் இருப்பதாக தெரிவித்தார் உமாகாந்த் தாஸ் வழக்கு மீதான விசாரணை நடந்து வருவதால், வேறு தகவல்களை தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












