அயோத்தி வழக்கு இவ்வளவு ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைக்கப்பட்டு வந்தது எப்படி? - விரிவான தகவல்கள்

அயோத்தி
    • எழுதியவர், ஜெ.வெங்கடேசன்
    • பதவி, மூத்த சட்டவிவகார செய்தியாளர்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் மூலம், 70 ஆண்டு காலமாக இருந்த நில உரிமை வழக்கிற்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

சமாதானம் செய்யும் முயற்சியாக, 1993 பிப்ரவரியில் மத்திய அரசால் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்துக்கு வெளியே புதிய மசூதி கட்டிக் கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் உருவாக்கப்படும் தனித்தனி அறக்கட்டளைகள் மூலம் கோவில் மற்றும் மசூதி கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது அரசியல் கட்சிகளின், குறிப்பாக ஆளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அதன் சங் பரிவார் அமைப்புகள் மற்றும் சிறிய அமைப்புகளால் வாக்குகளை ஈர்ப்பதற்கான பிரச்சினையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஒவ்வொரு முறை அயோத்தி பிரச்சினையை மக்கள் மத்தியில் எழுப்பும் போதும், ரத்தக்களரியும், சமூக வெறுப்பு செயல்களும் நிகழ்ந்தன என்பது உண்மை. கடவுள் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டும் நோக்கம் நிறைவேறும் வரையில் இந்த விஷயம் மக்கள் மனதில் உயிர்ப்புடன் வைக்கப்பட்டு வருகிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, ஒய்.வி. சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டியுள்ளது. மத நம்பிக்கையை அரசியல் சட்ட உரிமையாக எடுத்துக் கொண்டு, இதில் இந்துக்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி

அந்த மசூதி 1528ல் கட்டப்பட்ட பிறகு, 325 ஆண்டுகளாக அதற்கு சொந்தம் கொண்டாடி வந்தமைக்கு முஸ்லிம் தரப்பினர் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், அந்த காலகட்டத்தில் அங்குத் தொடர்ச்சியாக `வழிபாடு' நடந்து வந்ததற்கு எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் 1045 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பங்குத் தந்தை ஜோஷப் டையபென்தாலர் மற்றும் மோன்ட்கோமெரி மார்ட்டின் ஆகியோர் எழுதிய பயணக் கட்டுரைகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ``கடவுள் ராமர் பிறந்த புனித இடம் என்று இந்துக்களின் நம்பிக்கை உள்ளது'' என்று அவற்றில் உள்ளதை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

இந்தியத் தொல்லியல் பராமரிப்புத் துறையின் விரிவான அறிக்கையையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. ``12 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த கட்டுமானங்கள் பூமிக்கடியில் இருந்தன'' என்றும், அது இந்து பூர்விகத்தைக் கொண்டவையாக இருந்தன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இந்துக் கோவில் இருந்ததா என்பதை தொல்லியல் துறை அறிக்கை உறுதியாகக் கூறவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

அங்கு மசூதி இருந்த நிலையிலும், சர்ச்சைக்குரிய இடத்தில் உள் மற்றும் வெளிப் பகுதிகளுக்கு இந்துக்கள் உரிமை கோரி வந்தனர் என்பதைக் காட்டுவதற்காக, பல்வேறு வாய்வழி சாட்சியங்கள் மற்றும் பயணிகளின் குறிப்புகள் என்ற வகையில், போதிய ஆதாரங்களை இந்து தரப்பினர் முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

``இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் இடத்தில் இஸ்லாமிய கட்டுமானம் இருந்தபோதிலும், 1856-57க்கு முன்பிருந்த கட்டுமான பகுதிக்குள், அவர்களுடைய வழிபாட்டைத் தடுப்பதாக இருக்கவில்லை'' என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

``நீண்டகாலம், தொடர்ந்து, தடைப்படாத வகையில் ராமர் `பீடத்தில்' வழிபாடு செய்து வந்ததன் மூலம் இந்த நிலத்திற்கு வெளிப்பகுதியில் உள்ள இடத்தையும், மத முக்கியத்துவம் வாய்ந்த மற்ற விஷயங்களையும் அனுபவித்து வந்ததை இந்துக்களின் தரப்பினர் தெளிவாக நிரூபித்துள்ளனர்'' என்று கூறி அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அயோத்தி

இருந்தபோதிலும் 1949 ஆம் ஆண்டில் மசூதியில் சிலைகளை நிறுவியது ``தீவிர சட்டவிரோத செயல்'' என்றும், அது ``புனிதத்தை அவமதிக்கும் செயல்'' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 1858 ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்பகுதிக்கு உரிமை கோரி சர்ச்சைகள் நிலவியபோதிலும், மசூதியை முஸ்லிம்கள் கைவிட்டுவிட்டதாகவோ அல்லது `நமாஸ்' செய்வதை நிறுத்திவிட்டதாகவோ நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை'' என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பூமிக்கு அடியிலிருந்த கட்டமைப்புகள் 12 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று முதன்மையான தொல்லியல் துறையின் கண்டறிதல்களைச் சார்ந்து நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. அந்தப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட மற்ற கோவில்கள் மற்றும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்த கோவில்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அங்குத் தோண்டி எடுக்கப்பட்ட கட்டுமானங்கள் மற்றும் மசூதியின் அஸ்திவாரங்கள் மற்றும் அதன் கட்டடக் கலை அம்சங்கள் இந்த மத பூர்விகத்தைக் கொண்டவையாக இருக்கலாம் என்று தெரிகிறது என்று தொல்லியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

``அங்கு மசூதி இருந்தது என்பதை ஆதாரங்கள் காட்டினாலும், அது கடவுள் ராமரின் பிறந்த இடம் என்பதால் அங்கு இந்து வழிபாட்டைத் தடுக்க முடியாது. இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் இடத்தில் முஸ்லிம் கட்டுமானம் இருப்பதால், 1856-57க்கு முந்தைய கட்டுமானத்திற்குள் இருந்த சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாட்டைத் தொடர்வதைத் தடுக்க முடியாது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை, இஸ்லாமிய மசூதி என்ற கட்டுமானத்தால் அசைத்துவிட முடியாது'' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இவ்வளவு ஆண்டுகளாக இந்த விஷயம் எப்படி உயிர்ப்புடன் வைக்கப்பட்டு வந்தது என்பதை இப்போது நாம் பார்ப்போம். ராம்ஜன்ம பூமி குறித்த முதலாவது சர்ச்சை 1853-55 காலக்கட்டத்தில் ஏற்பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. மசூதியை ஆக்கிரமித்துக் கொண்ட மஹந்த்கள் மற்றும் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு இடையில் பெரிய அளவில் ஆயுத மோதல் நடந்ததைத் தொடர்ந்து, அந்த இடத்தில் இரண்டு சமுதாயத்தினரும் வழிபாடுகளைத் தொடர்வது என்று மூத்தவர்கள் சேர்ந்து முடிவு செய்தனர். கட்டடம் மசூதியாக பயன்படுத்தப்பட்டது. மசூதிக்கு வெளியே இந்துக்கள் வழிபாடு நடத்தினர்.

Presentational grey line

Ayodhya Verdict: நிலம் இந்துக்களுக்கே ! Know the full details in 5 minutes | Babri Masjid

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

Presentational grey line

1857 கலகத்திற்குப் பிறகு, இரு தரப்பினரும் வழிபாட்டுக்குப் பயன்படுத்தும் இடங்கள், அதே நிலையில் தொடர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டது. 1857க்குப் பிறகு மசூதியின் கட்டுப்பாட்டை தங்களிடம் அளிக்க வேண்டும் என்று இரு தரப்பினருமே கோரியதால், பாபர் மசூதி - ராமஜன்ம பூமி விவகாரம் புதிய உத்வேகம் பெற்றது. 1900 வது ஆண்டுகளில் இந்து மற்றும் முஸ்லிம் தேசியவாத அமைப்புகள் உருவான நிலையில், சூழ்நிலை மோசமானது. 1912-13ல் அங்கு நிறைய சமூக மோதல்கள் நடந்தன.

1934ல் ஈத் தியாகத் திருநாளன்று மோதல்கள் ஏற்பட்டன. பசு ஒன்றைப் பலி கொடுத்த போது, ஹனுமன் கார்கி அமைப்பைச் சேர்ந்த பைராகிகள் மசூதியை ஆக்கிரமித்துக் கொண்டு, இரண்டு கோபுரங்களை அழித்தனர். மேற்கொண்டு எதுவும் இடிக்கப்படுவதற்கு முன்னதாக காவல் துறையினர் சென்று தடுத்துவிட்டனர். ஆனால் பதற்றம் வேகமாக அதிகரித்தது.

1949 டிசம்பரில் பீடத்துக்குள் கடவுள் ராமரின் சிறிய சிலையை வைத்து பூஜைகள் தொடங்கியதை அடுத்து நிலைமை மோசமானது. அதுவரை அது ராமர் பிறந்த இடமாக வழிபாடு செய்யப்பட்டது. அங்கு சிலை வைக்கப்பட்டதும், தற்காலிக கோவில் புனிதத்தன்மை பெற்றதாகக் கருதப்பட்டது.

சிலையை அகற்றுமாறு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவிட்டபோதிலும், 1950களின் தொடக்கத்தில் இதில் தலையிட்ட கீழமை நீதிமன்றம், அப்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு, அந்தப் பகுதிக்குள் முஸ்லிம்கள் செல்ல தடை விதித்தது.

அயோத்தி

அப்போதிருந்து, அந்தக் கோவிலில் குறுகிய இடைவெளியில் பூஜைகள் நடைபெற்று வந்தன. பக்தர்கள் தொடர்ச்சியாக வழிபாடு செய்ய அனுமதிக்கும் வகையில் கோவில் பூட்டைத் திறக்க பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 1986ல் அனுமதித்ததைத் தொடர்ந்து ராமர் கோவில் பிரச்சினையில் புதிய வேகம் ஏற்பட்டது.

ஜன சங் அமைப்பின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி, ராமச்சந்திர தாஸ், அசோக் சிங்கால் ஆகியோருடன் சேர்ந்து ராமர் கோவில் இயக்கத்தை திட்டமிட்டு உருவாக்கினார். கோவில் இயக்கத்தில் தீவிர செயல்பாட்டாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ள அத்வானி முன்வந்தார். இந்த இயக்கத்தின் முகமூடியாக வாஜ்பாயி இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், அத்வானி முன் வரிசையில் இருந்து செயல்பட்டார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 1989ல் பூமி பூஜை நடத்துவதற்கு அனுமதி அளித்ததன் மூலம் இந்த இயக்கத்துக்கு ராஜீவ் காந்தி வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்தனர். ஜெய் ஸ்ரீராம் என பொறிக்கப்பட்ட செங்கற்களை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். ஸ்ரீராம், ராமஜெயம் என பொறிக்கப்பட்ட 2500 செங்கற்களை தமிழகத்தில் இருந்து அனுப்பியதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.க்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆதரவை வெளிப்படுத்தினார்.

Presentational grey line

இது தொடர்பான செய்திகள்:

Presentational grey line

ஜன சங் அமைப்பு இதன் மூலம் பிரபலம் ஆனது. அதை அரசியல் கட்சியாக மாற்றி பாஜக உருவாக்கப்பட்டது.

ராமர் கோவில் இயக்கத்துக்கு ஆதரவாக 10000 கிலோ மீட்டர் ரத யாத்திரையை அத்வானி 1990ல் தொடங்கினார். ஆனால் பிகாருக்கு ரத யாத்திரை சென்ற போது, மாநில முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அதைத் தடுத்து அத்வானியை கைது செய்ததைத் தொடர்ந்து இடையிலேயே நிறுத்தப்பட்டது. 1992 டிசம்பரில் மசூதியை கரசேவகர்கள் இடித்த போது, அத்வானி முன்னணியில் இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட போதிலும், மசூதியை இடிப்பதற்கு அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் மறைமுக ஆதரவு அளித்தார். அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் ஒரு நாள் சிறைவாசம் என்ற தண்டனைக்கு ஆளானார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டன. குறிப்பாக மும்பையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் நாட்டில் நுழைவதை, மசூதி இடிப்புச் சம்பவம் காட்டியது.

அயோத்தி

2002 பிப்ரவரியில் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு சபர்மதி எஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இதனால் குஜராத்தில் பெருமளவில் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

ராமர் சிலை, இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு தலா மூன்றில் ஒரு பகுதி நிலத்தைப் பிரித்துக் கொடுக்குமாறு அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டு 2010ல் தீர்ப்பு அளித்தது. அதன் மீதான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் 40 நாட்கள் விசாரணை நடைபெற்றது.

முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே. பராசரன், மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆகியோர் இந்துக்கள் தரப்பிலான வாதங்களை முன் வைத்தனர். முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் ஆஜரானார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், கோவில் கட்டுவதற்கு வசதியாக சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

அதே சமயத்தில் பீடத்திற்குள் ராமர் சிலையை சட்டவிரோதமாக வைத்தது, 1992ல் சட்டவிரோதமாக மசூதியை இடித்தது ஆகிய செயல்களுக்காக இந்துக்களை நீதிமன்றம் விட்டுவிடவில்லை. அதற்கு மன்னிப்பாகவும், நஷ்டஈடு அளிக்கும் வகையிலும், 70 ஆண்டுகளாக போராடி வந்த சர்ச்சைக்குரிய நிலத்தைப் போல இரு மடங்கு நிலத்தில், 5 ஏக்கர் நிலத்தில் புதிய மசூதி கட்டப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமர் கோவில் இயக்கத்தில் பாஜக தொடர்ந்து தீவிரம் காட்டி வந்த போக்கு, அதன் தேர்தல் அறிக்கைகள் மூலம் வெளிப்பட்டது. வடக்கில் பல மாநிலங்களிலும், இந்தி பேசும் மாநிலங்களிலும் அதன் அடிப்படையில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. 1999ல் மத்தியிலும் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியின்போதும், ராமர் கோவில் கட்டுவது என்ற அடிப்படைக் கொள்கையை பாஜக ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை.

ராமர் கோவில் கட்டுவோம் என்ற கோஷத்தை முன்வைத்து, நரேந்திர மோதி தலைமையில் 2014 ஆம் ஆண்டிலும், மீண்டும் 2019 ஆம் ஆண்டிலும் பாஜக ஆட்சிக்கு வந்தது. இப்போது நீதிமன்ற தலையீடு மூலம் அதற்குப் பலன் கிடைத்துள்ளது.

Presentational grey line

Ayodhya இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக ஆகிறதா?| BBC Tamil Report

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :