சபரிமலையில் பெண்கள் நுழைவது இதுதான் முதல்முறையா? உண்மை என்ன?

சபரிமலை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விக்னேஷ்.அ
    • பதவி, பிபிசி தமிழ்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ள 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைந்துள்ளதாக, கோயிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்புத் தெரிவிப்பவர்களால் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

எனினும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டின் அனுமதியுடனே, மாதவிடாய் உண்டாகும் வயதுள்ள பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன..

இதற்கு அப்பெண்களிடம் நுழைவுக் கட்டணம் வாங்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது, அதை திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பிலேயே நீதிமன்றத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்தபின், அங்கு பல பெண்கள் செல்ல முயற்சித்த பின்னரும் பலத்த எதிர்ப்பு, போதிய பாதுகாப்பின்மை மற்றும் தாக்குதல் சம்பவங்களால் அவர்கள் பாதியிலேயே திரும்பி வரவேண்டி இருந்தது.

ஜனவரி 2-ஆம் தேதியன்று அதிகாலை சுமார் 03:45 மணியளவில் காவல்துறை பாதுகாப்புடன் கோயிலை அடைந்த பிந்து, கனகதுர்கா என்ற 50 வயதுக்கும் குறைவான இரண்டு பெண்கள் பதினெட்டாம் படி வழியாகச் செல்லாமல் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியாக ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டனர்.

இந்த இரு பெண்களும் கோயிலுக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து கேரளா மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளிலும், கோயில் நுழைவுக்கு எதிரான மற்றும் ஆதரவான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

சமீபத்திய போராட்டங்கள் அனைத்திலும் இதுவரை சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவது முதல் முறை என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சில ஊடகங்களும் மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் நுழைவது இது வரலாற்றிலேயே முதல் முறை என்று செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மைதானா என்று ஆராய்ந்தது பிபிசி.

1990ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதி வெளியான ஜன்மபூமி மலையாள நாளிதழில், தேவசம் போர்டின் ஆணையராக இருந்த சந்திரிகா என்பவரின் பேரக்குழந்தைக்கு முதல்முறை உணவூட்டும் நிகழ்வில், அக்குழந்தையின் தாயான சந்திரிகாவின் மகள் இருக்கும் படம் வெளியானது.

இதையடுத்து பெண்கள் நுழைய தாங்கள் ஆதரவளிக்கவில்லை என 2016இல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராக எஸ் .மகேந்திரன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். (S Mahendran vs The Secretary, Travancore Devaswom Board and Others - AIR 1993 Ker 42)

சபரிமலை

பட மூலாதாரம், Getty Images

அந்த மனு உயர் நீதிமன்றத்தால், பொது நலன் வழக்காக மாற்றப்பட்டது. தேவசம் போர்டு மீது அந்த வழக்கில் அவர் சாட்டியிருந்த குற்றம், இளம் பெண்கள் சபரிமலை கோயிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர் என்பதுதான்.

தாம் ஆணையர் பதவியில் இருந்தபோது அந்த நிகழ்வு நடந்ததை சந்திரிகாவும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அவர் ஆணையர் பதவியில் இருந்தார் என்பதால் முறைகேடாக மாதவிடாய் வயதில் உள்ள பெண் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நாளில் பிற குழந்தைகளுக்கும் முதல் முறை உணவூட்டும் நிகழ்வு நடந்தது என்று அப்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த சடங்குகள் நடத்த தேவசம் போர்டால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அனைவரிடமும் வசூலிக்கப்பட்டது.

பொதுமக்களின் உரிமை எதுவும் பாதிக்கப்படவில்லை என்பதால், இந்த மனுவைத் தாக்கல் செய்த மனுதாரரின் உரிமையை தனது எதிர்மனுவில் கேள்வி எழுப்பிய தேவசம் போர்டு, அந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரியது..

அந்த வழக்கின் விசாரணையின்போது, திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமானப் பாத்திரத்தில், 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் குழந்தைகளுக்கு முதல் முறை உணவூட்டும் நிகழ்வில் கலந்துகொள்ள சபரிமலை கோயிலுக்குள் அனுமதி வழங்கப்பட்டது ஒப்புக்கொள்ளப்பட்டது.

அவர்களுக்கான கட்டணங்களுக்கு தேவசம் போர்டு தரப்பில் ரசீதும் வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும், சில அரிதான நேரங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவது தெரிய வருகிறது என அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு கூறியது.

சபரிமலை

பட மூலாதாரம், A S SATHEESH

படக்குறிப்பு, காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலையில் வழிபடும் திருநங்கைகள்.

மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மற்றும் மலையாளப் புத்தாண்டு நாளான விஷூ ஆகிய சமயங்களில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்படாவிட்டாலும், மாதாந்திர பூஜைகளுக்காக கோயில் திறக்கப்பட்ட சமயங்களில், கோயில் நிர்வாகத்தால், எந்த வயது வேறுபாடும் இல்லாமல் பெண்கள் அனுமதிக்கப்பட்டது அந்த வழக்கு விசாரணையில் தெரியவந்தது.

எனினும், நீண்ட காலமாக பின்பற்றப்படும் வழக்கம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் சபரிமலைக்குள் நுழைய கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

10 முதல் 50 வயதுள்ள பெண்கள் நுழையத் தடை விதிக்கப்படுவது அரசியல் சாசன சட்டத்துக்கு முரணானதல்ல என கேரள உயர்நீதிமன்றம் அந்த வழக்கின் தீர்ப்பில் கூறியிருந்தாலும், மாதாந்திர பூஜைகளுக்காக கடந்த 20 ஆண்டுகளாகவே பெண்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என அதே தீர்ப்பில் கூறியிருந்தது.

"மலையாள ஆண்டு 1115இல் (ஆங்கில ஆண்டு 1940) திருவாங்கூர் மன்னர் மற்றும் அரசி அந்தக் கோயிலுக்குச் சென்றதாகக் குறிப்பிடும் இந்தத் தீர்ப்பு, பண்டைய நாட்களில் பெண்கள் கோயிலுக்குச் செல்ல தடை இல்லை; எனினும் அதிக எண்ணிக்கையில் கோயிலுக்குப் பெண்கள் செல்லவில்லை," என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில், குறிப்பாக 1950க்குப் பிறகு, பெண்கள் கோயிலுக்குச் செல்லும் முறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று 1991இல் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மாதவிடாய் வயதில் உள்ள பெண்களையும் கட்டணம் வாங்கிக்கொண்டு சபரிமலைக்குள் நுழைய அனுமதித்த அதே சபரிமலை தேவசம் போர்டு, 2016இல் பெண்கள் நுழைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

1990இல் ஒரு நிலை எடுத்திருந்த தேவசம் போர்டு அதற்கு மாறாக 2016இல் உச்ச நீதிமன்றத்தில் கூறியது, அதன் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இருக்கலாம்.

சபரிமலை

பட மூலாதாரம், A.S.SATHEESH

படக்குறிப்பு, டிசம்பர் 2018இல் சபரிமலை செல்ல முயன்ற பெண்கள் குழுவினர் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

விரதம் இருக்காத பெண்களும் கடந்த காலங்களில் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் நுழைய தேவசம் போர்டால் அனுமதி வழங்கப்பட்டியிருந்தாலும், 41 நாட்கள் தொடர் விரதம் இருக்கும் பெண்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என 2016 -ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.

நவம்பர் 27, 1956 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, ஏற்கனவே உள்ள வழக்கங்கள் மற்றும் கோயிலின் புனிதத் தன்மையைக் காரணம் காட்டி, 10 முதல் 55 வயதுள்ள பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய திருவாங்கூர் தேவசம் போர்டு தடை விதித்திருந்து.

ஆனால், 1969ஆம் சபரிமலை கோயிலில் ஒரு கொடிமரம் நடப்பட்ட நிகழ்வில் பழைய வழக்கங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகவும், கே.பரிபூர்ணன் மற்றும் கே.பி.மாரார் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது கோயில் வழக்கங்களில், சபரிமலை தந்திரியின் ஆலோசனையின் பேரில் அப்போது பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்தத் தீர்ப்பு கூறுகிறது.

எனவே, 2018 செப்டம்பர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே மாதவிடாய் வயதுள்ள பெண்கள் முதல் முறையாக சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தனர் என்பது உண்மையான தகவல் அல்ல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: