2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது குறைப்பு - காரணம் என்ன?

2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு குறைப்பு - காரணம் என்ன?

பட மூலாதாரம், Kritchanut

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: "ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு குறைப்பு"

2016-ம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ரூ.2,000 நோட்டுகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நோட்டுகளை அச்சடிக்கும் எண்ணிக்கையை ரிசர்வ் வங்கி தற்போது குறைத்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"ரூ.500/1000 நோட்டுகளைத் தடை செய்த பிறகு கடும் பணப்பற்றாக்குறை ஏற்பட ரூ.2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. மீள் பணமதிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தும் முடிவுடன் புதிய ரூ.500 நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு புழகத்துக்கு விடப்பட்டன.

இந்நிலையில் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் அவ்வப்போது புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ முடிவெடுக்கும் என்றார்.

"ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளைக் குறைந்த அளவில் வைத்திருக்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல" என்று தெரிவித்தார்.

மார்ச் 2017 முடிவில் ஆர்பிஐ தகவல்களின்படி 3,285 மில்லியன் என்ற எண்ணிக்கையில் ரூ.2000 தாள்கள் புழகத்தில் இருந்தன. மார்ச் 31, 2018-ல் இது 3,363 மில்லியன் தாள்களாக அதிகரித்தது.

இந்நிலையில் மார்ச் 2018 முடிவில் மொத்தமாக புழக்கத்தில் இருந்த பணமதிப்பு ரூ.18,037 பில்லியன்களாகும். இதில் ரூ.2000 நோட்டுகள் 37.3% ஆகும். இது 2017-ல் இருந்த 50.2% என்பதிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தினத்தந்தி: "8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து"

8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து

பட மூலாதாரம், Getty Images

பள்ளிகளில் 8-ம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 'குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்', 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் 'பெயில்' ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. அதன்படி, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும் வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அம்மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்றுவிட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை 'பெயில்' ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்" என்று இதுகுறித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தினமணி: "மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீர் பேரவைக்குத் தேர்தல் நடத்தத் தயார்"

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ராஜ்நாத் சிங்

தேர்தல் ஆணையம் விரும்பினால், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில், மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் மாநில அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு, மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆளுநர் ஆட்சி கடந்த மாதம் 19-ஆம் தேதியோடு நிறைவடைந்ததையொட்டி, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையை மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்தார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: மாநிலத்தில் பிரிவினை குறித்த உணர்வை பாஜக ஏற்படுத்தவில்லை. சுதந்திரம் பெற்றது முதலே மக்களிடையே நிலவிவரும் அந்த உணர்வைக் குறைக்க பாஜக முயன்று வருகிறது. ஹுரியத் அமைப்புகளுடன் அனைத்துக் கட்சி உறுப்பினர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், மாநில கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்த அமைப்புகள் கூடத் தயாராக இல்லை.

முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியும் இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. தேர்தல் ஆணையம் விரும்பினால், வரும் மே மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. தேர்தல் நடத்தப்படுவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவும் மத்திய அரசு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை

தி இந்து (ஆங்கிலம்): "நீதிபதிகளின் பணி ஓய்வு வயதில் மாற்றமில்லை"

நீதிபதிகளின் பணி ஓய்வு வயதில் மாற்றமில்லை

பட மூலாதாரம், Getty Images

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை 65திலிருந்து 67 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை 62லிருந்து 65 ஆகவும் மாற்றுவதற்கு எந்த திட்டமும் இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதிகளின் பற்றாற்குறை, தேங்கி கிடக்கும் வழக்குகள் போன்றவற்றை குறைக்கும் வகையில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிகளின் பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சகம், காலியிடங்களை பூர்த்தி செய்வதற்கு பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தாலும், பணி ஓய்வு, விலகல் அல்லது பணி உயர்வு ஆகியவை காரணமாக காலியிடங்கள் தொடர்கின்றன என்று தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதுமுள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 1,079 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ள நிலையில் வெறும் 695 இடங்களே தற்போது நிரப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: