முத்தலாக் மசோதாவுக்கு முஸ்லிம் ஆண்கள் பயப்பட வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜகியா சோமன்
- பதவி, சமூக செயற்பாட்டாளர்
(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல.)
முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதா தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் ஆதரவாக வாக்களிக்க,இதற்கு எதிராக 11 பேர் வாக்களித்தனர். பல எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில் மசோதாவின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை. நமது நாட்டில் நீதியை விட அரசியலுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது துரதிர்ஷ்டமானது.
முஸ்லிம் பெண்களுக்கு பாலின நீதி பற்றிய பிரச்சனை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. இது நமது ஆணாதிக்க சமூகத்தில் அதிகமாகவே காணப்படுகிறது. அரசியலமைப்பு வழங்கும் நீதியை முஸ்லிம் பெண்கள் பெறுவதை இது தடுக்கிறது.
1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய புனித நூலான குர்-ஆனில் கூறப்பட்டிருப்பதற்கு எதிரானதாக முத்தலாக் இருந்தாலும், 2017 ஆம் ஆண்டுக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு முத்தலாக்கை சட்டவிரோதம் என்று கூறினாலும், நம் நாட்டில் தொடரும் கொடுமை இது.
முத்தலாக் நடைமுறையை குற்றச்செயலாக பார்ப்பதுதான் இந்த சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கணவனை எப்படி இணங்கச் செய்வது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. எனவே, நாடாளுமன்றம் முஸ்லிம் விவாகரத்து நடைமுறையை ஒழுங்குபடுத்துவதுன் நிறுத்திக்கொள்ளாமல், முஸ்லிம் குடும்ப சட்டத்தை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
முத்தலாக் தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டாலும், முஸ்லிம் கணவன்கள் ஒருதலைப்பட்சமாக மூன்று முறை தலாக் என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லி விவாகரத்து செய்வதும் தொடர்கிறது, பாதிக்கப்பட்ட மனைவி வீடற்று, ஆதரவற்று நிற்கும் அவலநிலையும் தொடர்கிறது.
அதைத்தவிர, இங்கு ஒரு நாடகப்போக்கும் தென்படுகிறது. முத்தலாக் கூறி கணவன் விவாகரத்து செய்துவிட்டால், அதை போலீசில் கூறி, கணவன் கைது செய்யப்பட்டால், அந்த மனைவியை தவறிழைத்தவராகப் பார்க்கும் போக்கும் நிலவுகிறது.
இதுவரை பதிவாகியிருக்கும் தரவுகளை பார்க்கும்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் எந்தவித மாற்றமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர் மீது குற்றவியல் வழக்கு தொடுக்கக்கூடாது என்று சில சமூக செயற்பாட்டாளர்களும் குரல் எழுப்புகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என்று வியப்பு மேலிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள், குடும்ப வன்முறைச் சட்டங்கள், குழந்தை திருமணச் சட்டம், இருதார திருமணத்திற்கு எதிரான சட்டங்கள், வன்கொடுமைச் சட்டங்கள் போன்ற சட்டங்கள் அனைத்திற்கும் சிறைதண்டனை விதிக்கப்பட்டபோது அதில் ஏன் இவர்கள் திருத்தங்களை கோரவில்லை? இப்போது மட்டும் ஏன் இந்த அக்கறை என்ற கேள்வி எழுகிறது.
இந்த சட்டமசோதாவை தங்கள் சொந்த விருப்பங்களை நிறைவேற்றும் கருவியாக பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துவது போல் தெரிகிறது. மத்திய அரசால் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியவில்லை, எதிர்க்கட்சியோ ஒத்துழைப்பு தரும் மனோநிலையில் இல்லை. பொருத்தமான சட்டங்களை உருவாக்கி, பாலின நீதியை செயல்படுத்தவேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பு.
அனைத்து சமூகங்களுக்கும் தனிப்பட்ட சட்டங்கள் முஸ்லிம் தனிப்பட்ட சட்டங்கள் தவிர பிற சமூகங்களின் சட்டங்கள் நாடாளுமன்றத்தால், நெறிமுறைப்படுத்தப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 1937இன் ஷரியத் சட்டத்தில் திருமண வயது, முத்தலாக், ஹலலா, பலதாரமணம், குழந்தைகளின் பாதுகாவலர், சொத்துக்களில் பெண்களின் பங்கு போன்ற முக்கிய பிரச்சனைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
முஸ்லிம் பெண்கள் தாங்களாகவே முன்வந்து, தங்களுக்கான தனிப்பட்ட சட்ட பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சியில் கடந்த தசாப்தத்தில்தான் ஈடுபட்டனர். நடத்தை விதிகள் தொடர்பான முஸ்லிம் குடும்பச் சட்டம், முத்தலாக் ரத்து செய்யப்பட வேண்டும், என்று ஆணாதிக்க அமைப்புக்கு எதிராக குரல் எழுப்பினர்.
குர்-ஆனின் போதனைகளையும் பாலின நீதி தொடர்பான அரசியலமைப்பு விதிகளையும் புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகள், மகளிர் ஆணையங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பிற ஜனநாயக அமைப்புகளிடம் கோரிக்கைகளும் முறையீடுகளும் முன்வைக்கப்பட்டன.
2012ஆம் ஆண்டில் மும்பையில் முத்தாலக்குக்கு எதிரான தீர்ப்புக்கு பத்திரிகை உட்பட பல ஊடகங்களும் சிறப்பு கவனம் கொடுத்தன. நாளடைவில் முத்தலாக்குக்கு எதிரான பொதுமக்களின் கருத்து வலுப்பெற்றது. இதன் அடிப்படையிலேயே சாதாரண முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று ஆதரவுக் குரல்கள் எழுந்தன.
அவ்வப்போது முற்போக்கான கருத்துக்களைச் சொல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, அரசியல்வாதிகள் மற்றும் பழமைவாத மத குருமார்களும் முத்தலாக் விவகாரத்தில் அலட்சியமாக இருந்த்தோடு, தங்கள் கருத்துக்களையும் மாற்றிக் கொள்ளவில்லை.
குர்-ஆன் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள், சமத்துவம் மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில், தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யவேண்டும் என்ற முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகள், அவர்களுடைய கவனத்தை ஈர்க்கவில்லை.

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA
பாலின நீதி வேண்டும் என்ற இஸ்லாமிய பெண்களின் சட்டபூர்வமான கோரிக்கைகளை அவர்கள் புறக்கணித்தனர். முத்தலாக்குக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நாடு முழுவதும் ஆதரவுக் குரல் எழுந்தாலும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் என்று தங்களை கூறிக் கொள்ளும் இதர அரசியல் கட்சிகளும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இத்தகைய சூழலில், ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி, முத்தலாக்குக்கு எதிராக மசோதாவை நிறைவேற்ற விரும்புகிறது.
மசோதா தொடர்பாக எதிர்க் கட்சிகளுடன் மத்திய அரசு போதுமான ஆலோசனை நடத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால், முஸ்லிம் பெண்களின் இந்த முத்தலாக் எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிர்க்கட்சிகளும் பெரிய அளவில் ஆதரவு காட்டவில்லை.
பல அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் இரட்டை நாக்கைக் கொண்டுள்ளன. இந்து, கிறித்துவ, சீக்கிய, ஜெயின் பெண்களுக்கு சட்டபூர்வமாக சம உரிமை இருப்பதால், முஸ்லிம் பெண்களும் அந்த தனிநபர் சட்ட தனிப்பட்ட உரிமையை பெறவேண்டும் என்று அரசியல் கட்சிகள் வாதாட முன்வரவில்லை.
முத்தலாக் சட்ட மசோதா மீதான ஒருமுகப்படுத்தப்பட்ட இதுபோன்ற விவாதங்கள் பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுத்துகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 45 பெண்கள் எங்களை அணுகினார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, அவர்கள் கணவர்கள், முத்தலாக் நடைமுறையை பயன்படுத்தி மனைவிகளை விவகாரத்து செய்துவிட்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images
முத்தலாக் என்ற சிறப்புரிமையை பெற்றிருக்கும் இஸ்லாமிய ஆண்களின் அதிகாரத்தின் மீதும், பொதுபுத்தியின் மீதும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்று முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான். ஆனால் அதிலும் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது? தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு உண்மையில் எதாவது முகமையோ அமைப்போ இருக்கிறதா என்று சொல்லுங்கள்?
அப்படியே ஏதாவது நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு முன்பே, முத்தலாக் கூறி விவாகரத்து செய்யப்பட்ட பெண் கணவனுக்கு `ஹராம்` ஆகிவிடுகிறாள்; கணவன் மனைவியிடம் இருந்து `விடுதலை` பெற்று விடுவதால், மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இதுபோன்ற சூழ்நிலையில், சட்டத்தின் மீது அச்சம் ஏற்பட்டால், கணவனிடம் பேசி சமரசம் ஏற்படுத்தவோ, அல்லது உரிய இழப்பீடை பெறவோ அல்லது வேறு எதாவது விதத்தில் ஆதரவு பெறவோ பேரம் பேசும் வாய்ப்பாவது அந்த மனைவிக்கு கிடைக்கும்.
ஏனெனில், ஒருதலைப்பட்சமாக தலாக் என்ற வார்த்தையை மூன்று முறை சொன்னாலும் விவாகம் ரத்து ஆகிவிட்டது என்ற தற்போதைய நிலை பெண்களுக்கு மிகவும் அபாயமானது.
தவறுதலாகவோ விளையாட்டாகவோ அல்லது கோபத்திலோ தலாக் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலும், அதை திரும்பப் பெற முடியாது என்ற நிலையில் பெண்களுக்கு ஏற்படும் கடும் மன உளைச்சலை புரிந்துகொள்ள வேண்டும். திருமணம் போன்ற ஒரு தீவிர உறவில் பொறுப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது.

பட மூலாதாரம், EPA
நீதிமன்ற தீர்ப்புகளே சட்டமாக செயல்படும் என்றால், நமக்கு ஐ.பிசி. குற்றவியல் நடைமுறை சட்டங்கள், ஏன், நாடாளுமன்றம்கூட தேவையில்லையே?
பல வழக்குகளில் பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளும்,கொலைகாரர்களும் நீதிமன்ற தீர்ப்பின்படி தண்டனை பெற்ற பிறகுகூட தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்களே? உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முத்தலாக் நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டது என்ற காரணத்தை கூறி மசோதாவை நிராகரிப்பது என்பது சரியல்ல.
மசோதா தவறாக பயன்படுத்தப்படும் என்ற அச்சம் ஆதாரமற்றது. மசோதாவின்படி, பாதிக்கப்பட்ட மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான், முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யமுடியும்.
இந்த பிரச்சனையை பாலின சமத்துவம் என்ற கண்ணோட்டத்தில் இருந்து அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியலை புறந்தள்ளி, பெண்களின் நலனை கருத்தில் கொள்ளவேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












