பெஞ்சமின் ஹென்றி மில்லர் - இலங்கை தமிழர்களுக்கு 70 ஆண்டுகள் உழைத்த அமெரிக்கர்

பட மூலாதாரம், SAYAN
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு தசாப்தங்களாக வாழ்ந்து, மக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த, அமெரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர், 94ஆவது வயதில், செவ்வாய்க்கிழமை, புத்தாண்டு பிறந்த நாளன்று மரணித்தார்.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிறந்தவர் அருட்தந்தை மில்லர். இலங்கை சுதந்திரம் பெற்று சில மாதங்களே ஆகி இருந்தபோது, இலங்கைக்கு வந்தார்.
மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகவும், அந்தக் கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியினுடைய பயிற்றுவிப்பாளராகவும், பணியாற்றி வந்த அருட்தந்தை - புனித மைக்கல் கல்லூரியின் யேசு சபை இல்லத்திலேயே மரணித்தார்.

1873ஆம் ஆண்டு அமெரிக்க யேசு சபை மிசனரியினர் - மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியை உருவாக்கினர். தனியார் பாடசாலையாக இயங்கி வந்த புனித மைக்கல் கல்லூரி, இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அரச பாடசாலையாக்கப்பட்டது.
இலங்கையைச் சேர்ந்தவரும், இந்தியாவில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கியவருமான பாலு மகேந்திரா, புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது, உபரித் தகவலாகும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
"சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில், இலங்கையிலுள்ள மிசனரிப் பாடசாலைகளை அரசு கையகப்படுத்தியது. ஆனால், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு அருட்தந்தை மில்லர் மறுத்து, தொடர்ந்தும் தனியார் பாடசாலையாகவே சில காலம் நடத்தி வந்தார். அதன் பிறகுதான் சில நன்மைகள் கருதி அரசிடம் பாடசாலையை ஒப்படைத்தார்" என்று, பழைய நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார், புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஐ.ஜே. சில்வஸ்டர்.

பட மூலாதாரம், The National Peace Council of Sri lanka
"ஆனாலும், மீண்டும் அமெரிக்க யேசு சபையின் மிசனரி நிர்வாகத்தின் வசம், புனித மைக்கல் கல்லூரியை எடுக்க வேண்டும் என்பதே அருட்தந்தையின் விருப்பமாக இருந்தது. அவர் மரணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணல் ஒன்றில், இந்த விருப்பத்தை தெரிவித்திருந்தார். தனது அடுத்த கனவும் அதுதான் என்றும் அருட்தந்தை கூறியிருந்தார்," என சில்வஸ்டர் மேலும் கூறினார்.
பொதுமக்களை உறுப்பினர்களாகக் கொண்டு, 'மட்டக்களப்பு சமாதான குழு' எனும் அமைப்பை இவர் உருவாக்கினார். இலங்கையில் யுத்தம் நிலவிய காலப் பகுதியில் இந்த சமாதானக் குழுவினூடாக அருட்தந்தை மில்லர் ஆற்றிய பணிகள் நேர்மறையானவை.யாகும். அப்போது ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டமை, ராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றவர்களைக் கண்டுபிடிக்க உதவியமை, யுத்தத்தின் போது ராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்கியமை என, அருட்தந்தை மில்லரின் பணிகள் பரந்து விரிந்தவையாக இருந்ததன.

சமாதானத்துக்காக அருட்தந்தை மில்லர் ஆற்றிய பணிகளைக் கௌரவித்து, அவருக்கு 2014ஆம் ஆண்டு, பிரஜைகள் சமாதான விருதினை வழங்கி, இலங்கை தேசிய சமாதானப் பேரவை கௌரவித்தது.
இலங்கையில் 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்த கால கட்டத்தில், இலங்கையின் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான உறுப்பினராக, அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லரை, இலங்கை அரசாங்கம் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சமாதான மற்றும் மனித உரிமைச் செயற்பாடுகள் உள்ளிட்ட தனது பணிகளின்போது, அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர் நடுநிலையாகச் செயற்பட்டு வந்தார். அவர் ஒருபோதும் நடுநிலை தவறியதில்லை என்பதை, அவரின் இறுதிக் கிரியைகளின்போது உரையாற்றியவர்களும் நினைவுபடுத்தியிருந்தனர்.
தமிழ் மொழியில் பேசுவதை அருட்தந்தை மில்லர் விளங்கிக்கொள்வார். அதனால், உள்ளுர் மக்களுக்கும் அவருக்கும் இடையில் நல்ல நெருக்கம் இருந்தது. மக்களுக்கான பணியை அவர் விருப்புடன் செய்து வந்தார். அதனால், அவரின் மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று புதன்கிழமை ஏராளமானோரின் பங்குபற்றுதலுடன் அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லரின் நல்லடக்கம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
"அருட்தந்தை இலங்கையில் ஆற்றிய பணியில் திருப்தி கொண்ட அமெரிக்க யேசு சபையினர், அவரை சொந்த நாட்டுக்குச் சென்று அவரின் குடும்பத்தினருடன் வாழுமாறு சில வருடங்களுக்கு முன்னர் கூறியது. முதலில் அருட்தந்தை அதனை மறுத்தார். பின்னர் யேசு சபையின் வற்புறுத்தலுக்கு அமைவாக அவரின் சொந்த இடமான அமெரிக்காவின் லூசியானாவுக்கு சென்றார். ஆனால், அங்கு அவரின் சொந்தங்கள் எவரையும் அவர் காணவில்லை. அதனால் எனது சொந்தங்கள், உறவுகள் மட்டக்களப்பில்தான் இருக்கின்றார்கள் என்று கூறி, அவர் மீண்டும் இங்கேயே வந்து விட்டார்" என்றார் சில்வஸ்டர்.
புனித மைக்கல் கல்லூரியிலுள்ள யேசு சபை இல்லத்தில் தங்கியிருந்த அருட்தந்தை மில்லர், அந்தப் பாடாலையின் கல்வி வளர்ச்சிக்காகவும், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதிலும் அயராது உழைத்தார்.
"புனித மைக்கல் கல்லூரியையும், அதன் மாணவர்களையும் ஃபாதர் மிகவும் நேசித்தார். சில இரவுகளில் தூக்கம் வராமல் பாடசாலை வராந்தாவில் ஃபாதர் நடந்து கொண்டிருப்பாராம். அது பற்றி அவரிடம் அங்குள்ளவர்கள் கேட்டபோது மாணவர்களின் சத்தத்தைக் கேட்காமல் தூக்கம் வரவில்லை என்று அவர் கூறுவாராம்," என பிபிசி யிடம் அந்தக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் சில்வஸ்டர் கூறி நெகிழ்ந்தார்.
ஒரு சாய்வு நாற்காலி, கொஞ்சம் புத்தகம், சில ஆடைகள், நிறைய அன்பு; அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர் தனக்காகச் சேர்த்து வைத்தவை இவை மட்டும்தான்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












