சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் முக்கிய திருப்பம்

ஜமால் கஷோக்ஜி

பட மூலாதாரம், Getty Images

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார்.

பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த வருடம் அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்தபின்னர் உயிருடன் வெளியே வரவில்லை.

சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அரசு வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்தான்புல்லுக்குச் சென்று கொலை செய்த 15 சந்தேக ஊழியர்கள் உள்பட கஷோக்ஜி கொலை வழக்கு விசாரணைக்காக 18 சந்தேக நபர்களை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்திருந்த கோரிக்கையை சௌதி அரேபியா நிராகரித்துள்ளது .

இந்த விசாரணை தொடர்பாக இதுவரை தெரிந்ததென்ன?

அரசு ஊடகம் சிறிதளவு தகவலை மட்டுமே வெளியிட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து குற்றவியல் நீதிமன்றத்தில் முதல் அமர்வு விசாரணை தொடங்கியது மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்களும் அங்கிருந்தார்கள்.

ஆதாரம் குறித்து துருக்கிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு இதுவரை பதில் வரவில்லை என சௌதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய அறிக்கையில் மேலும் 10 பேர் மீது விசாரணை நடப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதுவரை சௌதி கூறியது என்ன?

நவம்பர் மாதம், அரசின் துணை வழக்குரைஞரான ஷாலான் பின் ரஜி ஷாலான் கூறுகையில் '' உளவுத்துறை அதிகாரி ஒருவர் தூதரகத்துக்குள் ஆளை கொல்லும் ஊசியொன்றை செலுத்தி கஷோக்ஜியை கொள்ள ஆணையிட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்'' என்றார்.

கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் அப்பத்திரிகையாளரை சௌதி திரும்ப இணங்க வைக்கும் பணி அந்த உளவுத்துறை அதிகாரிக்கு கொடுக்கப்பட்டிருந்தது என அவர் கூறினார்.

''தூதரகத்துக்குள் கஷோக்ஜியின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு துருக்கியிலுள்ள உள்ளூர் 'ஒத்துழைப்பாளர்களிடம்' உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டன'' என்கிறார் ஷாலான்.

கொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் கஷோக்ஜியின் உடல் இன்னமும் கிடைக்கவில்லை.

துருக்கியின் சிசிடிவியில் பதிவானவர்களில் சந்தேக நபர்களில் சிலர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, துருக்கியின் சிசிடிவியில் பதிவானவர்களில் சந்தேக நபர்களில் சிலர்

குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்து எதாவது துப்பு கிடைத்துள்ளதா?

கஷோக்ஜி கொல்லப்பட்ட சமயத்தில் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்துக்கு சௌதியின் ஊழியர்கள் 15 பேர் வந்திறங்கி வேலை முடிந்தவுடன் பின்னர் மீண்டும் சௌதிக்கு சென்றுவிட்டதாக சந்தேகப்படும் துருக்கி, அவர்கள் யார் என அடையாளம் கண்டுள்ளது.

ஆனால் துருக்கி சந்தேகப்படும் 15 பேரில் யாராவது ரியாத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் இடம்பெற்றுள்ளார்களா என்பது தெரியவில்லை.

ஆனால் வழக்கு விசாரணையில் இல்லாத ஒரு நபர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என்பது உறுதி. கஷோக்ஜியை கொலை செய்ததன் பின்னணியில் சௌதி அரசரின் மகனான முகமது பின் சல்மான் மீது சில மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டின.

தூதரகத்தில் நடைபெற்ற இப்படியொரு நடவடிக்கைக்கு இளவரசரின் அனுமதி நிச்சயம் தேவைப்பட்டிருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

''இத்தகைய மிகவும் கொடிய குற்றத்தை யாரும் நியாயப்படுத்தவே முடியாது'' எனத் தெரிவித்திருக்கும் இளவரசர் சல்மான், இக்கொலையில் பங்கு இருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அமெரிக்கா 17 சௌதி அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. இதில் இளவரசர் சல்மானின் முன்னாள் ஆலோசகரான சௌத்-அல்-கதானியும் அடக்கம்.

ஜமால் கஷோக்ஜி

பட மூலாதாரம், AFP

யார் இந்த ஜமால் கஷோக்ஜி?

பிரபல பத்திரிகையாரான கஷோக்ஜி ஆப்கானிஸ்தானில் சோவியத்தின் படையெடுப்பு, ஒசாமா பின்லேடனின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கட்டுரைகளை வெவ்வேறு சௌதி செய்தி நிறுவனங்களுக்காக எழுதியுள்ளார்.

பல தசாப்தங்களாக சௌதி அரச குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்த கசோக்ஜி அரசுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

ஆனால் கடந்தவருடம் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் இதழில் சௌதி இளவரசரின் திட்டங்கள் மீது கடும் விமர்சனங்களை வைத்து கட்டுரைகளை தீட்டினார்.

தனது முதல் கட்டுரையில் இளவரசரின் மேற்பார்வையில் சௌதியில் தான் கைது செய்யப்படப்போவதாக அச்சத்தில் இருந்ததாக எழுதியிருந்தார்.

தனது கடைசி கட்டுரையில் யேமெனில் நடக்கும் போரில் சௌதி அரசின் ஈடுபாடு குறித்து விமர்சித்து எழுதியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: