திருவாரூர் இடைத்தேர்தல்: கெளரவப் போரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி ஜனவரி 28-ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை 31-ஆம் தேதியும் நடக்கவுள்ளது.
தமிழக அரசியலில் கடந்த 30 ஆண்டுகளாக கோலோச்சி வந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் மறைந்த நிலையில் தமிழகம் சந்திக்கும் முதல் சட்டமன்ற தொகுதி தேர்தல் இது என்பதால், இந்த இடைத்தேர்தல் மிகவும் கவனத்தை பெறுகிறது.
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அத்தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் மறைந்த நிலையில், திருப்பரங்குன்றத்துடன் இந்த தொகுதிகளுக்கும் சேர்த்து மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் எஞ்சிய 19 சட்டமன்ற தொகுதி தேர்தல்கள் நடக்கும் சூழலில் அவற்றுக்கு திருவாரூர் சட்டமன்ற தேர்தல் முடிவு முன்மாதிரியாக அமையலாம் என்று கருதப்படுகிறது.
திருவாரூரில் நடந்த கடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில் , திமுக 6 முறை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறை வென்றுள்ள நிலையில், அதில் மூன்று முறை திமுக கூட்டணியில் அக்கட்சி வென்றுள்ளது.
மேலும் கடந்த 1996 முதல் 2016 வரை நடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக திமுகவே வென்றுள்ளது.
2011 மற்றும் 2016 தேர்தல்களில் கருணாநிதி இங்கு வென்றார். 2011 சட்டமன்ற தேர்தலில் 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். 2016-இல் இத்தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியசாத்தில் கருணாநிதி வென்றார்.
இத்தரவுகள் இந்த தொகுதியில் திமுக வலிமையாக இருந்து வருவதையே காட்டுகின்றன.

திருவாரூர் இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது, முக்கிய அரசியல் ஆளுமைகள் இல்லாத நிலையில் தமிழகம் எதிர்கொள்ளும் தேர்தல் போன்றவை குறித்து மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன் பிபிசி தமிழிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
''கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவ்விரு கட்சிகளிலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இது தமிழகஅரசியல் களத்திலும் பிரதிபலிக்கிறது. அந்த வகையில் தற்போதைய இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது''என்று இளங்கோவன் தெரிவித்தார்.
''Mother of all battles என்றழைக்கப்படும் உச்சகட்ட அரசியல் போராக திருவாரூர் இடைத்தேர்தல் அமைய வாய்ப்புண்டு. திமுக, அதிமுக, மற்றும் தினகரனின் அமமுக ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனை போட்டி இருந்தாலும் தற்போதைய சூழலில் பிரதான போட்டி திமுக மற்றும் அமமுக இடையேதான்'' என்று இளங்கோவன் குறிப்பிட்டார்.
''திமுகவுக்கு வலுவாக இருக்கும் தொகுதி என்று கருதப்பட்டாலும் இங்கு வெற்றி திமுகவுக்கு எளிதாக இருக்காது. இத்தொகுதி அடங்கிய மாவட்டம் மற்றும் அருகாமை மாவட்டங்களில் தினகரனின் கட்சிக்கும் செல்வாக்கு உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்'' என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், அனைத்து தரப்புகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தபிறகு கள நிலவரம் மாறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கஜ புயல் பாதிப்பு நிவாரணம் தொடர்பாக ஆளும் அரசின் செயல்பாடுகள் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதால், அது அக்கட்சிக்கு இந்த தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பெரும் அளவு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், இம்முறை அரசியல் கட்சியினரும், மக்களும் அதனை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்று கேட்டதற்கு, ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல் தற்போது நடக்க வாய்ப்பில்லை. இத்தேர்தலிலும் பணம் சிறிய அளவு பங்காற்றக்கூடும். ஆனால் தேர்தல் முடிவை பாதிக்கும் வகையில் அது இருக்காது என்று நம்புகிறேன்'' என்று அவர் தெரிவித்தார்.
''கருணாநிதி வென்ற தொகுதி, கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதி என்ற காரணத்தால் திருவாரூரில் வெல்வது திமுகவுக்கு கௌரவ பிரச்சனை, ஆளும் அதிமுகவுக்கு இங்கு வெல்வது அவர்களின் ஆட்சிக்கு மக்கள் வழங்கும் ஒப்புதல். தினகரனின் அமமுகவுக்கு இங்கு வெல்வது கட்சி தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்பட அவசியம். ஆக மூன்று கட்சிகளுக்கும் மூன்று வெவ்வேறு முக்கிய காரணங்கள்'' என்று இளங்கோவன் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், TWITTER
ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகள் குறித்த விமர்சனத்தை அதிகப்படுத்திய சூழலில், கருணாநிதி வென்ற தொகுதியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய அரசியல் அழுத்தம் ஸ்டாலினுக்கும், திமுகவும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை, ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி குறித்த குற்றச்சாட்டுகளை பொய்யென நிரூபிக்க வேண்டியுள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் குறித்த நீதிமன்ற தீர்ப்பு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அண்மைய கட்சி தாவல் ஆகியவை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் உண்டாகியுள்ளது.
அதேவேளையில், திருவாரூரை உள்ளடக்கிய கஜ புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணி குறித்த அதிருப்தி , ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு, எட்டுவழி சாலை திட்டத்துக்கு மக்களிடையே எழுந்த எதிர்ப்பு மற்றும் பல போராட்டங்கள் ஆளும்கட்சிக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று அரசியல் பார்வையாளர்கள் கவனிக்கின்றனர்.
கருணாநிதியின் சிலை திறப்பையொட்டி அண்மையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிவதாக அறிவித்து மக்களவைத் தேர்தலில் திமுக -கா ங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக போன்ற கட்சிகளும் திமுகவுக்கு இந்த தேர்தலில் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில், இதுவரை அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோரின் சிறிய கட்சிகள் அல்லது இயக்கங்கள், தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை என்று கூறப்படும் நிலையில், அது எந்த அளவில் அந்தக் கட்சிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கவனிக்கப்படுகிறது.
இன்னமும் தங்களின் கூட்டணி நிலையை அறிவிக்காத பாஜக, பாமக போன்ற கட்சிகளுக்கு இந்த தொகுதியின் தேர்தல் முடிவு வரும் மக்களவைத் தேர்தலில் அவர்கள் செல்ல வேண்டிய திசையை முடிவு செய்வதற்கு உதவிகரமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லை சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்பது போல், தற்போது தமிழக அரசியல் களத்தில் மையம் கொண்டிருக்கும் 'திருவாரூர் இடைத்தேர்தல்' என்ற புயலை நோக்கியே தமிழகத்தின் பார்வை உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












