எம்பிக்கள் இடைநீக்கம்: "பாஜக மாற்றாந்தாய் மனப்போக்கினை காட்டுகிறது" - அதிமுக எம்பி

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Mikhail Klimentyev

படக்குறிப்பு, நரேந்திர மோதி

எம்பிக்கள் இடைநீக்கம்: "பாஜக மாற்றாந்தாய் மனப்போக்கினை காண்பிக்கிறது"

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் போராடிய அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கினை காட்டுவதாகத் தெரிவித்தார் அதிமுக மக்களவைக் குழுத் தலைவர் வேணுகோபால்.

நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் கடந்த டிசம்பர் 16-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 17-ம் தேதி முதல் அதிமுக எம்.பி.க்கள் மக்களவையில் தட்டி ஏந்தியும், முழக்கம் எழுப்பியும் தங்கள் கோரிக்கைக்காக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவையில் உள்ள அதிமுக-வின் 37 உறுப்பினர்களில் 24 பேர் அவை விதிகள் 374ஏ-வின் கீழ் ஐந்து நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 7 பேர் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதவிர, மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 தமிழக எம்.பி.க்கள் இதே பிரச்சனைக்காக புதன்கிழமை ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்தது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மக்களவை அதிமுக குழுத் தலைவர் வேணுகோபால், "மேகேதாட்டு அணை தொடர்பான எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இத்தனை நாள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடிவருகிறோம். இது ஓரிரு மாநிலங்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. ஆனால், தொடர்புடைய துறை அமைச்சரோ, பிரதமரோ இது குறித்து விளக்கம் அளிக்கவோ, விவாதிக்கவோ முன்வரவில்லை. மத்திய அரசு எல்லா மாநிலங்களையும் ஒன்று போல் நடத்தவேண்டும். ஒரு மாநிலத்துக்கு பாதகமாக மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடந்துகொள்வது சரியல்ல" என்று கூறினார்.

"அத்துடன், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று போராடி வந்த காங்கிரசுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக அரசு கூறியவுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். உடனே மக்களவையில் அதிமுக எம்.பிக்களை இடைநீக்கம் செய்து உத்தரவிடுகிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கை

முத்தலாக் மசோதாவுக்கு முஸ்லிம் ஆண்கள் பயப்பட வேண்டுமா?

முத்தலாக் மசோதாவுக்கு முஸ்லிம் ஆண்கள் பயப்பட வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images

முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதா தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் ஆதரவாக வாக்களிக்க,இதற்கு எதிராக 11 பேர் வாக்களித்தனர். பல எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில் மசோதாவின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை. நமது நாட்டில் நீதியை விட அரசியலுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது துரதிர்ஷ்டமானது.

முஸ்லிம் பெண்களுக்கு பாலின நீதி பற்றிய பிரச்சனை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. இது நமது ஆணாதிக்க சமூகத்தில் அதிகமாகவே காணப்படுகிறது. அரசியலமைப்பு வழங்கும் நீதியை முஸ்லிம் பெண்கள் பெறுவதை இது தடுக்கிறது.

1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய புனித நூலான குர்-ஆனில் கூறப்பட்டிருப்பதற்கு எதிரானதாக முத்தலாக் இருந்தாலும், 2017 ஆம் ஆண்டுக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு முத்தலாக்கை சட்டவிரோதம் என்று கூறினாலும், நம் நாட்டில் தொடரும் கொடுமை இது.

பல அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் இரட்டை நாக்கைக் கொண்டுள்ளன. இந்து, கிறித்துவ, சீக்கிய, ஜெயின் பெண்களுக்கு சட்டபூர்வமாக சம உரிமை இருப்பதால், முஸ்லிம் பெண்களும் அந்த தனிநபர் சட்ட தனிப்பட்ட உரிமையை பெறவேண்டும் என்று அரசியல் கட்சிகள் வாதாட முன்வரவில்லை.

முத்தலாக் என்ற சிறப்புரிமையை பெற்றிருக்கும் இஸ்லாமிய ஆண்களின் அதிகாரத்தின் மீதும், பொதுபுத்தியின் மீதும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

இலங்கை

'கடும்போக்கு புலம்பெயர் தமிழர்கள் செயல்பாடு செல்வாக்கு செலுத்தாது'

ISHARA KODIKARA

பட மூலாதாரம், ISHARA KODIKARA

கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டனை, நேற்று, புதன்கிழமை மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திய சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளமையை இரா.சம்பந்தன் எடுத்துக்காட்டினார்.

மேலும் கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தெரிவித்த இரா.சம்பந்தன் இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும்போக்காளர்களை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை

திருவாரூர் இடைத் தேர்தல்: கெளரவப் போரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

திருவாரூர் இடைத் தேர்தல்: கெளரவப் போரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி ஜனவரி 28-ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை 31-ஆம் தேதியும் நடக்கவுள்ளது.

தமிழக அரசியலில் கடந்த 30 ஆண்டுகளாக கோலோச்சி வந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் மறைந்த நிலையில் தமிழகம் சந்திக்கும் முதல் சட்டமன்ற தொகுதி தேர்தல் இது என்பதால், இந்த இடைத்தேர்தல் மிகவும் கவனத்தை பெறுகிறது.

டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அத்தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் மறைந்த நிலையில், திருப்பரங்குன்றத்துடன் இந்த தொகுதிகளுக்கும் சேர்த்து மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக அரசியலை பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் எஞ்சிய 19 சட்டமன்ற தொகுதி தேர்தல்கள் நடக்கும் சூழலில் அவற்றுக்கு திருவாரூர் சட்டமன்ற தேர்தல் முடிவு முன்மாதிரியாக அமையலாம் என்று கருதப்படுகிறது.

இலங்கை

மாயமான வட கொரிய தூதர்

ஜோ சோங்-கில்

பட மூலாதாரம், WWW.KIMJONGUN.IT

படக்குறிப்பு, ஜோ சோங்-கில்

இத்தாலிக்கான வடகொரியாவின் தூதர் மாயமாகிவிட்டதாக தென் கொரியாவை சேர்ந்த உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியாவின் தூதர் பெயர் தெரியாத மேற்குலக நாடொன்றிடம் தஞ்சம் கோரியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலிக்கான வடகொரியாவின் தூதராக இருக்கும் ஜோ சோங்-கில் என்பவரின் தந்தையும், மாமனாரும் வடகொரிய அரசின் உயர் பதவிகளில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: