'பிரதமர் நரேந்திர மோதி மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிக்க முன்வரவில்லை' - அதிமுக எம்.பி

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் போராடிய அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கினை காட்டுவதாகத் தெரிவித்தார் அதிமுக மக்களவைக் குழுத் தலைவர் வேணுகோபால்.

நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் கடந்த டிசம்பர் 16-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 17-ம் தேதி முதல் அதிமுக எம்.பி.க்கள் மக்களவையில் தட்டி ஏந்தியும், முழக்கம் எழுப்பியும் தங்கள் கோரிக்கைக்காக போராடி வருகின்றனர்.

மேகேதாட்டு அதிமுக போராட்டம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்துக்கு எதிரே போராடிய அதிமுக எம்.பி.க்கள்.

இந்நிலையில், மக்களவையில் உள்ள அதிமுக-வின் 37 உறுப்பினர்களில் 24 பேர் அவை விதிகள் 374ஏ-வின் கீழ் ஐந்து நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 7 பேர் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதவிர, மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 தமிழக எம்.பி.க்கள் இதே பிரச்சனைக்காக புதன்கிழமை ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழக எம்.பி.க்கள் மட்டுமில்லாமல், ஆந்திர எம்.பிக்கள் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், காங்கிரஸ் எம்.பி.க்கள் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் பிரச்சனையில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை கோரியும் நாடாளுமன்றத்துக்குள் இந்தக் கூட்டத் தொடர் முழுதும் போராடிவந்தனர்.

எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.

பட மூலாதாரம், https://loksabha.nic.in/

படக்குறிப்பு, எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.

இந்நிலையில் தமிழக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்தது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மக்களவை அதிமுக குழுத் தலைவர் வேணுகோபால், "எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இத்தனை நாள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடிவருகிறோம். இது ஓரிரு மாநிலங்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. ஆனால், தொடர்புடைய துறை அமைச்சரோ, பிரதமரோ இது குறித்து விளக்கம் அளிக்கவோ, விவாதிக்கவோ முன்வரவில்லை. மத்திய அரசு எல்லா மாநிலங்களையும் ஒன்று போல் நடத்தவேண்டும். ஒரு மாநிலத்துக்கு பாதகமாக மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடந்துகொள்வது சரியல்ல. அத்துடன், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று போராடி வந்த காங்கிரசுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக அரசு கூறியவுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். உடனே மக்களவையில் அதிமுக எம்.பிக்களை இடைநீக்கம் செய்து உத்தரவிடுகிறார்கள்" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: