அரிசி ராஜா: “ஆண் யானைகள் கும்கி ஆக்கப்படுவதால், இனப்பெருக்கம் பாதிக்கப்படும்”

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மனித - மிருக மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ஆனைகட்டி, வால்பாறை, மதுக்கரை ஆகிய பகுதிகளில் யானைகள் காட்டிலிருந்து மனிதர்களின் வாழ்விடத்திற்குள் வருவதால் உயிரிழப்புகளும், விபத்துகளும், விவசாய நிலங்களில் சேதமும் ஏற்படுகின்றன.

இந்த ஆண்டு 'சின்னத் தம்பி' என்ற பெயர் சூட்டப்பட்ட யானை மிகுந்த சிரமங்களுக்கு பின்னர் வனத்துறையால் பிடிக்கப்பட்டு தற்போது கும்கி யானையாக மாற்ற பயிற்சி பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கடந்த மூன்று மாதங்களாக சுற்றி வந்த காட்டு யானையை வனத்துறை இன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் இருந்த அரிசியை விரும்பி சாப்பிட்டதால் இந்த யானைக்கு 'அரிசி ராஜா' என ஊர் மக்கள் பெயர் சூட்டியிருந்தனர்.

இந்த யானை தாக்குவதால் அப்பகுதியில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, ஞாயிற்றுகிழமை முதல் யானையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

அரிசி ராஜா

காட்டு யானையைப் பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகள் அா்த்தநாரிபாளையம் பகுதிக்கு லாரிகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை வரவழைக்கப்பட்டன.

யானையைப் பிடிக்க மயக்க ஊசி செலுத்த மருத்துவா் குழுவினரும் அா்த்தநாரிபாளையதில் முகாமிட்டிருந்தனர்.

முதற்கட்டமாக, காட்டு யானை எங்குள்ளது, மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

காட்டு யானையைப் பிடிக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் வனத் துறையினா் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அப்பகுதியில் மலைக் குன்றுகள், பள்ளங்கள் போன்றவை அதிக அளவில் இருப்பதால் காட்டு யானையைப் பிடிக்கும் பணி சவாலாக இருந்தது. மேலும், மழை பெய்ததாலும் யானையை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சுமார் மூன்று நாட்கள் முயற்சிக்கு பிறகு இன்று வியாழக்கிழமை அதிகாலை யானை இருக்குமிடம் கண்டு பிடிக்கப்பட்டு, மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர், கும்கி யானைகளின் உதவியோடு வாகனத்தில் ஏற்றப்பட்ட “அரிசிராஜா” யானை வால்பாறையில் உள்ள முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாசன்
படக்குறிப்பு, ஓசை காளிதாசன்

யானை பிடிக்கப்பட்டதை அடுத்து ஊர் மக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்தாலும், தொடர்ந்து இதுபோன்று ஆண் யானைகள் இடம்மாற்றப்படுவதால் யானைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாசன், ''வளர்ந்த யானைகள் ஒரு நாளுக்கு சுமார் 250 கிலோ அளவிற்கு உணவு உட்கொள்ளும், 150 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும். எனவே, உணவைத் தேடி பல மைல் தூரம் இவை நடந்து செல்லும். காட்டில் பெருகிவரும் களைச் செடிகளின் தாக்கத்தாலும், வாழ்விடங்கள் சுருக்கப்பட்டதாலும், வாழ்விடங்களை இணைக்கும் வலசைப்பாதைகள் அழிக்கப்பட்டதாலும் உணவு தேடி விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் நோக்கி விலங்குகள் வருகின்றன. அதனால் உயிர் சேதமும் பயிர் சேதமும் ஏற்படுகின்றன. உயிர் சேதங்களையும், பயிர்கள் அழிக்கப்படுவதை தடுக்கவும் வனத்துறையினர் யானைகளை பிடித்து முகாம்களுக்கு கொண்டு செல்கின்றனர்.''

''பொதுவாக, இவ்வாறு பிடிக்கப்படுபவை ஆண் யானைகளாகவே உள்ளன. சமீபத்திய கணக்கெடுப்புகளில் இந்தியாவில் உள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கை 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இருப்பதாக கண்டறியபட்டுள்ளது. இவற்றில், ஆண் யானைகளின் எண்ணிக்கை வெறும் மூவாயிரம் மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இதுபோன்று, தொடர்ந்து ஆண் யானைகள் காட்டிலிருந்து முகாம்களுக்கு கொண்டு செல்வது, யானைகளின் இனப்பெருக்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, யானைகள் பாதுகாப்பிற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, முறையான நிதியை ஒதுக்கி மனித மிருக மோதல்களை தடுத்துநிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :