யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
ஆப்ரிக்காவை சேர்ந்த குட்டி யானைகளை அவற்றின் இயற்கையான வன சூழலில் இருந்து பிரித்து உயிரியல் பூங்காக்களுக்கு விற்பனை செய்வதை ஏறக்குறைய முழுமையாக தடை செய்யும் தீர்மானத்துக்கு ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அருகி வரும் உயிரினங்களை வைத்து சர்வதேச அளவில் நடக்கும் வர்த்தகம் குறித்த இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகள் மற்றும் அமைப்புகள் பல நாட்கள் நடந்த விவாதத்திற்குப் பிறகு இது குறித்த விதிகளை கடுமையாக்க முடிவு செய்தன.
குட்டி யானை விற்பனைக்கு தடை விதிக்கும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 87 வாக்குகளும், எதிராக 29 வாக்குகளும் பதிவாகின.
ஆனால், குட்டி யானை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள ஜிம்பாப்வே இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து. அதேபோல் அமெரிக்காவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது என்பது குறிப்பிடதக்கது.
மற்ற ஆப்ரிக்க நாடுகளை காட்டிலும் ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானா ஆகிய இரு நாடுகளிலும் யானைகளின் எண்ணிகை கணிசமான அளவில் உள்ளது.
மேலும் இந்த இரு நாடுகளுக்கும் ''பொருத்தமான மற்றும் ஏற்றுக்கொள்ளும் வகையில்'' உள்ள இடங்களுக்கு யானைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யானைகள் விற்பனை குறித்து உலக அளவில் கவலை தெரிவிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், செவ்வாய்க்கிழமையன்று எடுக்கப்பட்ட முடிவு யானை விற்பனை குறித்த தடையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

அமேசான் தீ: உதவி வழங்கும் ஜி 7, நிபந்தனை விதிக்கும் பிரேசில்

பட மூலாதாரம், Getty Images
அமேசான் பிரேசிலுக்கு சொந்தமானது இல்லை என்று பிரான்ஸ் அதிபர் மக்ரூங் கூறிய கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டால் மட்டுமே, அமேசான் தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் 22 மில்லியன் டாலர் உதவியை ஏற்றுக் கொள்ள முடியும் என பிரேசில் அதிபர் போல்சனாரூ தெரிவித்துள்ளார்.
மக்ரூங்கின் கருத்து 'அவமதிப்பானது' என்று போல்சனாரூ தெரிவித்துள்ளார்.
போல்சனாரூவின் இந்த அறிவிப்பு, ஜி7 மாநாட்டில் அமேசான் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வழங்க முடிவு செய்த 22 மில்லியன் டாலர்களை பிரேசில் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என போல்சனாரூவின் தலைமை அலுவலர் தெரிவித்த பிறகு வந்துள்ளது.

காஷ்மீர் மக்களுக்காக ஐஏஎஸ் பதவியை உதறியது ஏன்?

பட மூலாதாரம், FACEBOOK/KANNAN GOPINATHAN
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தபோது, அரசின் முடிவுகளை செயல்படுத்துவதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட ஏராளமான அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மட்டும் அரசின் முடிவால் அதிர்ந்து போய், தனது பதவியைத் தூக்கியெறியத் துணிந்துவிட்டார். அவர்தான், கண்ணன் கோபிநாதன்.
தற்போது, தாதரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின்சாரத்துறையில் செயலராகப் பணிபுரியும் கண்ணனைத் தொடர்பு கொண்டது பிபிசி தமிழ்.
"நான் வெளிப்படையாகப் பேசுவதை தடுக்கும் இடத்தில் இருந்து வெளியேற விரும்புகிறேன்" என்பதே அவர் சொல்லும் காரணம்.

மலேசியாவுக்கு ராணுவத் தளவாடங்கள் தந்தால் பாமாயில்

பட மூலாதாரம், NURPHOTO/GETTY IMAGES
மலேசியாவிடம் இருந்து பாமாயில் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக ராணுவத் தளவாடங்களை வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் ஆறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மலேசியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மொஹமத் சாபு தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, துருக்கி, ஈரான் ஆகியவையே மலேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நாடுகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளியல் கொண்ட நாடான மலேசியா, தனது பாதுகாப்பு திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பழைய ராணுவத் தளவாடங்களுக்கு மாற்றாக புதியவற்றை வாங்க விரும்புவதாக அமைச்சர் மொஹமத் சாபு தெரிவித்தார்.
நவீன, புதிய ராணுவத் தளவாடங்களை தனது ராணுவத்தில் இணைப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே மலேசியா சிரமப்பட்டு வருகிறது.

"திராவிடர் கழகத்திற்கான தேவை முன்னெப்போதையும்விட இப்போதுதான் அதிகம்"

திராவிடர் கழகம் தனது பவள விழாவை இன்று (ஆகஸ்ட் 27) கொண்டாடும் நிலையில், அந்த இயக்கத்தின் தற்போதைய தேவை, சாதனைகள், எதிர்கால லட்சியங்கள், அக்கட்சி மீதான விமர்சனங்கள் குறித்து விரிவாகப் பேசினார் அந்த அமைப்பின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து:
கே. இந்த இயக்கம் துவங்கப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. திராவிடர் கழகம் என்ற இந்த அமைப்புக்கு இனிமேலும் தேவை இருப்பதாக நினைக்கிறீர்களா?
ப. கண்டிப்பாக. திராவிடர் கழகத்தின் அடிப்படையான கொள்கைகள் ஒன்று ஜாதி ஒழிப்பு. மற்றொன்று பெண்ணடிமைத் தனம் ஒழிப்பு. இதுதான் அடிப்படை. இதில் ஜாதி பிரச்சனை எந்த அளவுக்கு இருக்கிறதென்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












