சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18,000 ஆண்டுகள் முந்தைய விலங்கினம்: நாயா, ஓநாயா? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், SERGEY FEDOROV
சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குட்டி விலங்கு ஒன்று நாய்க்குட்டியா அல்லது ஓநாய்க் குட்டியா என்று விஞ்ஞானிகள் கண்டறிய முயன்று வருகிறார்கள்.
ரஷ்யாவின் உறைபனி பகுதியில், இறந்தபோது இரண்டு மாதமே ஆகியிருந்த இந்த குட்டி விலங்கின் முடி மற்றும் பல் அனைத்தும் அப்படியே இருக்கும் அளவுக்கு இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது எந்த விலங்கினத்தை சேர்ந்தது என்று இதுவரை நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளால் சரியாக முடிவு செய்ய முடியவில்லை.

பட மூலாதாரம், LOVE DALEN
ஓநாய்களுக்கும், நவீன கால நாய்களுக்கும் இடையிலான பரிணாம வளர்ச்சியின் தொடர்பை இந்த விலங்கினம் வெளிப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கார்பன் பரிசோதனை இந்தக் குட்டி விலங்கினம் எந்த வயதில் இறந்தது என்றும், உறைநிலையில் எவ்வளவு காலம் பாதுகாக்கப்பட்டது என்றும் கண்டறிய உதவியது. மரபணு வரிசை ஆய்வுகள் இது ஆண் விலங்கினம் என்பதை உறுதி செய்துள்ளது.

பட மூலாதாரம், SERGEY FEDOROV
நாய்களுக்கும், ஓநாய்களுக்கும் பொதுவான மூதாதையரிடம் இருந்து இந்த விலங்கினம் தோன்றியிருக்கலாம் என இதன் டிஎன்ஏ வரிசையில் நடத்தப்பட்ட ஆய்வு வெளிப்படுத்துவதாக ஸ்வீடனின் மரபணு ஆய்வு மையத்தின் விஞ்ஞானி டாவ் ஸ்டான்டன் என்பவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த மையத்தை சேர்ந்த இன்னொரு ஆய்வாளர் லவ் டாலன், "இந்த விலங்கினம் ஓநாய்க்குட்டியா அல்லது இதுவரை கண்டறியப்பட்ட முற்கால நாய்குட்டியாக இருக்கலாம்" என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், LOVE DALEN
இந்த விலங்கினத்தின் மீது மேலதிக மரபணு வரிசை ஆய்வுகளை விஞ்ஞானிகள் தொடர்வர். அவர்களின் கண்டுபிடிப்புகள் நாய்களின் பரிணாம வளர்ச்சி பற்றி அதிக தகவல்களை வெளிப்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

ரயில்வே வேலைக்கான தேர்வில் தமிழ் மொழியை தேர்வு செய்தோர் எத்தனை பேர்?

பட மூலாதாரம், HINDUSTAN TIMES/GETTY IMAGES
ரெயில்வே பணிகளுக்கான நேரடி தேர்வில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தெலுங்கு மொழியை தங்கள் முதன்மை மொழியாக தேர்வு செய்கின்றனர்.
இந்திய ரயில்வே பணிகளுக்கான நேரடி தேர்வில் எத்தனை பேர் தங்கள் மொழியை பயன்படுத்துகின்றனர் என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர், சுரேஷ் அங்காடி, 2017ஆம் ஆண்டிலிருந்து 47.18 லட்சம் தேர்வர்கள் 13 மாநில மொழிகளை பயன்படுத்தியதாக பதிலளித்துள்ளார்.
செய்தியை விரிவாக வாசிக்க: ரயில்வே வேலைக்கான தேர்வில் தமிழை தேர்வு செய்தோர் எத்தனை பேர்?

மகாராஷ்டிர முதல்வரானார் உத்தவ் தாக்கரே: மதச்சார்பற்ற ஆட்சி நடத்த உறுதி

பட மூலாதாரம், DD
மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றிலும் இருந்து தலா இரண்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மும்பை சிவாஜி பூங்காவில் நடந்த கோலாகல விழாவில் பல மாநில அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி), காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து அமைத்துள்ள வளர்ச்சிக் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் 18வது முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
செய்தியை விரிவாக வாசிக்க: மகாராஷ்டிர முதல்வரானார் உத்தவ் தாக்கரே: "மதச்சார்பற்ற முறையில் ஆட்சி"

'எனை நோக்கி பாயும் தோட்டா' நாளை பாய்கிறது; 4 ஆண்டுகள் காத்திருந்த சினிமா

பட மூலாதாரம், ENAI NOKI PAAYUM THOTA/YOUTUBE GRAB
'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாகிறது. 2016ம் ஆண்டு இந்த திரைப்படத்தின் பணிகள் தொடங்கினாலும் பல்வேறு காரணங்களால், சர்ச்சைகளால் வெளியீடு தாமதமாகி வந்தது.
இந்த திரைப்படம் பற்றிய 10 சுவாரசிய தகவல்களை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
செய்தியை விரிவாக வாசிக்க: 'எனை நோக்கி பாயும் தோட்டா' நாளை பாய்கிறது; 4 ஆண்டுகள் காத்திருந்த சினிமா

கோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா?

பட மூலாதாரம், Getty Images
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி இடம்பெற்ற இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றமை யாவரும் அறிந்ததே.
தேர்தல் முடிவுகளின் முக்கியமானதொரு பரிமாணம் தமிழ் பிரதேசங்களில் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகள் ஆகும். தமிழ் மக்கள் பெரும்பன்மையாக வாழும் பிரதேசங்களில் அவர் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.
செய்தியை விரிவாக வாசிக்க: கோட்டாபயவின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவை பகைத்துக் கொள்ளாத சீனச் சார்பா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












