தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்

கோவை அதிமுக
    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை மாவட்டம், கொங்கு மண்டல அதிமுக கோட்டையின் தலைமையிடமாகவே பார்க்கப்படுகிறது. இதை நிரூபிக்கும்விதமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், 9 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. அதுமட்டுமின்றி அதிமுகவில் எடப்பாடி.கே.பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடுத்த நிலையில் கட்சியின் முக்கிய நிலை வகிக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியும் கோவையில் தான் உள்ளது. இதனால் முக்கியத்துவம் மிக்க கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் பெரும்பாலும் அதிமுகவிற்கே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், 'கொங்கு மண்டலத்தில் பாஜக வலுவாக இருப்பதாகவும், வரும் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிக தொகுதிகளில் பாஜக போட்டியிடும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

இதனால், கூட்டணியில் இருந்த போதும் கோவை மாவட்ட அதிமுக - பாஜக தொண்டர்களிடையே முரண்பட்ட கருத்துகள் எழுந்து வந்தது.

இரு கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகளின் பட்டியலை அதிமுக தலைமை நேற்று வெளியிட்டது. அதில், கோவை மாவட்டத்தில் அதிமுக வசமிருந்த தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், 2 அல்லது 3 தொகுதிகளை எதிர்பார்த்திருந்த பாஜகவினர் ஏமாற்றமடைந்தனர்.

மேலும், அதிமுக செல்வாக்குமிக்க தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதால் அக்கட்சியின் தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

"கோவை தெற்கு - அதிமுகவுக்கு வேண்டும்"

அதிமுக ஆர்ப்பாட்டம்

பாஜக போட்டியிடும் தொகுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில், கோவையில் உள்ள இதயதெய்வம் மாளிகையில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு செயலாளர்களும், நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் அம்மன்.கே.அர்ஜூனன், மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார். கடந்த 5 வருடங்களாக கவுன்சிலர்கள் இல்லாத குறையை தீர்க்கும் வகையில் குடிநீர், மின்சாரம் என தெற்கு தொகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தந்துள்ளார். அவரைப் போன்ற மிக யதார்த்தமான, உண்மையான சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் கண்டதில்லை. இந்த தொகுதியை பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கோவை தெற்கு தொகுதியை அதிமுகவிற்கு ஒதுக்கவில்லை என்றால் தெற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்வோம்' என தெரிவிக்கிறார் அதிமுக இளைஞர்பாசறை மாவட்டத் தலைவர் கோவை ராஜன்.

சுமார் 20க்கும் மேற்பட்ட வார்டு செயலாளர்கள், தங்களது ராஜினாமா கடிதத்தோடு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 'அதிமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தெற்கு தொகுதி மக்களை நேரில் சந்தித்து களத்தில் செய்த பணிகள் அனைத்தும் கூட்டணி கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியதால் வீணாகி விடும்' என அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்எல்ஏக்கள்

இந்த நிலையில், அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது, தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை மேலும் அதிகமாக்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதியில் 2006 முதல் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் ஓ.கே.சின்ராஜூக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு மற்றும் வால்பாறை தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம் மற்றும் கஸ்தூரி வாசு ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால், அதிமுகவின் உயர்மட்ட நிலையில் உள்ள நிர்வாகிகள் மத்தியிலேயே முரண்பட்ட கருத்துக்கள் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

வால்பாறை தொகுதியில் கஸ்தூரி வாசுவிற்கு வாய்ப்பு வழங்கப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்ற நிர்வாகிகளின் ஆதரவாளர்களும் அதிருப்தியான மனநிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

பாஜகவிற்கு ஒரு தொகுதி மட்டுமே

பாஜக

சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் பாஜகவிற்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனவும், வானதி சீனிவாசன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மற்றும் ஜி.கே.நாகராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என தகவல் வெளிவந்திருந்தது. ஆனால், இறுதி தொகுதி பட்டியலில் ஒரு தொகுதி மட்டுமே பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளிடம் பேசுகையில், 'மூன்று தொகுதிகளை எதிர்பார்த்திருந்த நிலையில், ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதற்கும் அதிமுக தொண்டர்கள் கண்டனம் தெரிவிப்பது, கூட்டணி தர்மத்தை சீர்குலைப்பது போன்ற செயலாகும். தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வந்துவிட்டது, இதற்குமேல் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் இணைந்து செயல்பட்டு நமது வேட்பாளரை வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டும்' என்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் அதிமுக போட்டியிடும் 9 தொகுதிகளில், மேட்டுப்பாளையம் தொகுதியில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சூலூர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவும், சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.பி.கந்தசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் தொகுதியில், தற்போதைய வடக்கு தொகுதி எம்எல்ஏவும், புறநகர் மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோவை வடக்கு தொகுதிக்கு தற்போதைய தெற்கு தொகுதி எம்எல்ஏவும், மாநகர் மாவட்டச் செயலாளருமான அம்மன்.கே.அர்ஜுனன், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு தற்போதைய எம்எல்ஏவும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, சிங்காநல்லூர் தொகுதிக்கு கோவை மாநகர மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம், கிணத்துக்கடவு தொகுதிக்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான தாமோதரன், பொள்ளாச்சி தொகுதிக்கு கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளரும், சட்டப் பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை தொகுதிக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருமான அமுல் கந்தசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என தெரிய வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :