திமுக வேட்பாளர் பட்டியல் சர்ச்சை: 'கட்சிப் பணிக்காக கசக்கிப் பிழிந்தார்கள்' குமுறும் தொண்டர்கள்

ஸ்டாலின்

பட மூலாதாரம், DMK

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

12.03.2021. நேரம்: மதியம் மணி. 12.30 இடம்: சென்னை அண்ணா அறிவாலயம்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்தப் பட்டியல் வெளியானதும் சென்னைத் தொகுதி வேட்பாளர்கள், ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.

` மிக்க நன்றி தலைவரே..' - விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா

` சிறப்பாகத் தேர்தல் பணியாற்றுங்கள்.. கே.கே.நகரில் தனசேகரனையும் பார்த்துருங்க' என ஸ்டாலின் கூறவே, `சரிங்க தலைவரே'.. எனக் கூறிவிட்டு, 1.30 மணியளவில் கே.கே.நகரை நோக்கி வேட்பாளரின் கார் விரைந்தது. கூடவே, தெற்குப் பகுதிச் செயலாளர் கண்ணனும் உடன் இருந்தார்.

ஐயப்பன் கோவில் அருகில் உள்ள தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் வீட்டின் முன் கார் நின்றதும், ` இங்க எதுக்கு வந்தீங்க' எனக் கூறிவிட்டு தாறுமாறான வார்த்தைகளில் தனசேகரன் அர்ச்சிக்கத் தொடங்கிவிட்டார். அருகில் இருந்த சுமார் 15 பேர், பிரபாகர் ராஜா வந்த காரை செங்கற்களால் தாக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் மிகுந்த அதிர்ச்சியோடு அங்கிருந்து வெளியேறினார் பிரபாகர் ராஜா.

இதன்பின்னர், அறிவாலயம் வந்த தனசேகரன், சீட் கிடைக்காததால் கூண்டோடு ராஜினாமா செய்வதாகவும் எச்சரித்துவிட்டுக் கிளம்பினார்.

முதல் சால்வை!

`` தி.மு.க தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னால் பிரபாகர் ராஜாவும் தனசேகரனும் நல்லமுறையில் பேசி வந்தனர். `உனக்கு சீட் கொடுத்தால் முதல் சால்வையை நான்தான் போர்த்துவேன். அதேபோல், எனக்கு சீட் கொடுக்கப்பட்டாலும் நீ வீட்டுக்கு வர வேண்டும்' என தனசேகரன் கூறினார். இந்நிலையில், பிரபாகர் ராஜாவுக்கு சீட் அறிவிக்கப்பட்டதை தனசேகரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதே தொகுதியில் இரண்டு முறை சீட் கொடுத்தும் தனசேகரனால் வெற்றி பெற முடியவில்லை. அவரைச் சுற்றி ஏராளமான சர்ச்சைகள் இருப்பதால் தலைமை சீட் கொடுக்கவில்லை" என்கின்றனர் கே.கே.நகர் உடன்பிறப்புகள்.

திமுக

பட மூலாதாரம், DMK

எண்ணம் ஒன்றுதானா?

- விருகம்பாக்கம் மட்டுமல்லாமல், தி.மு.க அறிவித்த வேட்பாளர் பட்டியலை எதிர்த்து திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர் எனப் பல இடங்களில் தொண்டர்கள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், விரிவான மடல் ஒன்றை உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ` இந்த வெற்றிப் பட்டியல் 173 என்ற எண்ணிக்கையுடன் நிறைவடைந்துவிடவில்லை. தோழமைக் கட்சியினர் போட்டியிடும் 61 தொகுதிகளையும் உள்ளடக்கியதுதான். 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே கழக வேட்பாளர்கள்தான். சில தொகுதிகளில் சின்னங்கள் மாறியிருக்கலாம். ஆனால் ஒருங்கிணைந்த வலிமை மிகுந்த நமது எண்ணம் ஒன்றுதான்' எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அந்தக் கடிதத்தில், ` ஏழாயிரத்துக்கும் அதிகமான உடன்பிறப்புகள் தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கொடுத்திருந்த நிலையில், ஒவ்வொரு தொகுதிக்குமாக நேர்காணல் செய்து, கள நிலவரங்களை ஆய்வுக்குட்படுத்தி, நமது வலிமை, மாற்றார் நிலைமை ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்து இந்த வெற்றிப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்களைக் கொண்ட தி.மு.க எனும் அரசியல் பேரியக்கத்தில், ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் விருப்பமனு அளித்திருந்தாலும், கழகம் நேரடியாகப் போட்டியிடுகின்ற தொகுதிகள் 173 என்பதால், ஒரு தொகுதிக்கு ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பையும் கொண்டவனாக உங்களில் ஒருவனான நான் இருக்கிறேன். அந்த நெருக்கடி எத்தகைய தன்மையது என்பதை உடன்பிறப்புகளான நீங்களும் அறிவீர்கள்.

ஸ்டாலின்

பட மூலாதாரம், DMK

எப்போது சுற்று வரும்?

கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தகுதி வாய்ந்தவர்கள்தான். அடுத்தடுத்து இன்னும் பல களங்களும் வாய்ப்புகளும் இருக்கின்றன. அப்போது உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வேன் என்ற உறுதியினை வழங்குகிறேன். `உன்னுடைய சுற்று வரும்வரை, நீ காத்திருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று அண்ணா சொன்னதை அறிந்திருப்பவர்கள் நீங்கள். அப்படிப் பிடிவாதம் பிடித்தால் கலைஞரின் உடன்பிறப்புகள் எனும் உயர்ந்த தகுதியை பெருமளவு இழந்துவிடுகிறார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

`மு.க.ஸ்டாலின் மடல் எழுதும் அளவுக்கு வேட்பாளர் பட்டியலில் அப்படியென்ன சிக்கல் இருக்கிறது?' என தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசிய அவர், `` அ.தி.மு.கவில் உள்ள 3 அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் சிலரைத் தவிர, அனைவரையும் வேட்பாளராக அறிவித்தனர். அதை அப்படியே தி.மு.க தலைமையும் கடைபிடித்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது" என்கிறார்.

இவர்களா புதுமுகங்கள்?

தொடர்ந்து பேசுகையில், ` கடந்த சில மாதங்களாகவே தி.மு.கவில் மாவட்டச் செயலாளர்கள் உள்பட யாருடைய பரிந்துரையையும் ஏற்காமல் தலைமை முடிவெடுப்பதாகவே தகவல் வெளியானது. இதனால் நீண்டகாலமாக பதவியில் உள்ள நிர்வாகிகள் பலரும் உற்சாகப்பட்டனர். அவர்களும், தலைமை வெளியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால், பத்மநாபபுரத்தில் தொடங்கி கொளத்தூர் தொகுதி வரையில் சிலரைத் தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

இதில் புதுமுகம் என்றால் உதயநிதி, எழிலன் நாகநாதன், பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் உள்பட சிலர் மட்டும்தான். பேராசிரியர் மறைந்த பிறகு வெற்றியழகனுக்கு வர்த்தக அணியில் பதவி கொடுத்தனர். சில மாதங்களில் அவரை வேட்பாளராகவும் அறிவித்துவிட்டனர். தொண்டாமுத்தூரில் போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாபதியும் அண்மையில்தான் சுற்றுச்சூழல் அணியில் மாநிலப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் டாக்டர் சரவணன் போட்டியிட்டிருக்க வேண்டும். அவருக்கு செக் வைப்பதற்காக கூட்டணிக்கு இடத்தைக் கொடுத்துவிட்டனர்.

அரியலூர் தொகுதியில் போட்டியிட வேண்டிய எஸ்.எஸ்.சிவசங்கரை, குன்னம் தொகுதிக்கு மாற்றிவிட்டார்கள். இளைஞரணியைச் சேர்ந்த பிரபாகர் ராஜாவுக்கும் ஜே.ஜே.எபனேசருக்கும் சீட் கொடுத்துள்ளனர். எழும்பூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ ரவிச்சந்திரனுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பதில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு உறுதியாக இருந்தார். அதற்காக தொகுதிக்குள் அறிமுகம் இல்லாத பரந்தாமனை வேட்பாளராகக் கொண்டு வந்துள்ளார். தேர்தலில் யார் போட்டியிட வேண்டும், யாரெல்லாம் போட்டியிடக் கூடாது என முடிவெடுத்து அறிவித்துள்ளதாகவே இந்தப் பட்டியலைப் பார்க்கிறோம்" என்கிறார்.

ஓரம்கட்டப்பட்ட சீனியர்கள்!

திமுக

பட மூலாதாரம், DMK

படக்குறிப்பு, கோப்புப்படம்

`` புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் கட்சிக்காக நன்றாக உழைத்து வந்தார். அங்கு வேறு ஒருவருக்கு சீட் கொடுத்துவிட்டார்கள். அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்த ராஜகண்ணப்பன், விழுப்புரம் லட்சுமணன், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, மார்க்கண்டேயன் ஆகியோருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் முன்னாள் திட்டக்குழு தலைவர் நாகநாதனின் மகன் எழிலன் போட்டியிட உள்ளார். இதே தொகுதியில் அன்பகம் கலை 40 வருடங்களுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றி வருகிறார். ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் மா.பா.அன்புதுரையும் கட்சியில் சீனியராக இருக்கிறார். இவர்களுக்கெல்லாம் எந்தப் பதவிகளும் வழங்கப்படுவதில்லை" எனவும் வேதனைப்படுகிறார்.

எவ்வளவு செலவு செய்வது?

இதனைத் தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய தென்மண்டல தி.மு.க நிர்வாகி ஒருவர், `` கடந்த 5 ஆண்டுகளாக மாதம்தோறும் 2 ஆர்ப்பாட்டங்களை தலைமை நடத்தியது. இதற்காக ஆள்களைத் திரட்டுவது, பணம் செலவு செய்வது எனக் கட்சி நிர்வாகிகள் கடன் வாங்கி செலவு செய்தனர். இதற்காக கூட்டத்துக்கு தலா 25 லட்சம் வரையில் செலவு செய்தோம். அதிலும், கடந்த ஒரு வருடத்தில் ஒன்றிணைவோம் வா.. கிராம சபைக் கூட்டம், விடியலை நோக்கி, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் நிர்வாகிகளை கசக்கிப் பிழிந்துவிட்டனர்.

வேட்பாளர் பட்டியலில் எப்படியாவது மாற்றம் வரும் என நினைத்தால், சீனியர்கள் வரிசை அப்படியே இருக்கிறது. வாரிசுகளுக்கும் சீட்டுகளை வாரிக் கொடுத்துள்ளனர். ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், `உங்கள் சுற்று வரும் வரையில் காத்திருங்கள்' என அண்ணாவின் வரிகளை மேற்கோள் காட்டினார். அது எப்போது வரும் எனத் தெரியவில்லை" என்கிறார்.

தொடர்ந்து, `` திருவொற்றியூர், தி.நகர், விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் உள்ள அதிருப்தியாளர்களை வளைக்கும் வேலைகளை பா.ஜ.கவினர் தொடங்கிவிட்டனர். தஞ்சை மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், நெல்லை மாவட்டச் செயலாளர் துரை, தென்காசி சிவபத்மநாதன், பொங்கலூர் பழனிசாமி, சி.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் அரசு கொறடா முபாரக் உள்பட பலருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் என்பவர், ஆண்டுக்கொரு முறை கிறிஸ்துவ விழா நடத்தி வருபவர். இவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

தி.நகர் தொகுதியில் ஜெ.அன்பழகன் தம்பி கருணாநிதிக்கு நல்ல பெயர் இல்லை. அவர் எப்படிப் பட்டியலில் வந்தார் எனவும் தெரியவில்லை. இந்தத் தேர்தலில் பெரிய அலை அடித்தால் மட்டுமே, தலைமை நிறுத்தியுள்ள புதிய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இல்லாவிட்டால் தொண்டர்களின் அதிருப்தி அவர்களைக் கரை சேர்க்காது" என்கிறார்.

அனைத்தும் சரியாகும்!

`வேட்பாளர் பட்டியல்' அதிருப்தி குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` விருகம்பாக்கம் சம்பவத்தைத் தவிர வேறு எந்த அதிருப்திகளும் இல்லை. சொல்லப்போனால், தனசேகரனைத் தவிர வேறு யாரும் அதிருப்தியில் இல்லை. இது மிகப் பெரிய கட்சி. வேட்பாளர் பட்டியலால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அதிருப்தியிருக்கும். ஒரு சில நாள்களில் அனைத்தும் சரியாகிவிடும்" என்கிறார்.

மேலும், `` அ.தி.மு.கவில் நடப்பதைப் போல இங்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடப்பதற்கு வாய்ப்பில்லை. ராஜினாமா செய்வதாக தனசேகரன் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். இதற்கு முன்பு வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது நிறைய பிரச்னைகள் வரும். இப்போது அப்படி எந்தவிதச் சர்ச்சைகளும் இல்லை. 30 பேர் சீட் கேட்கும்போது ஒருவருக்கு சீட் கொடுத்தால் 29 பேர் அதிருப்தியடைவார்கள். அவர்களுக்காக தலைவர் மடல் எழுதியிருக்கிறார். விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :