கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை, சாகும் வரை சிறையில் இருக்கவேண்டும் - மற்றவர்களுக்கு என்ன தண்டனை?

யுவராஜ்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் 2015ல் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டகாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் முன்பாக குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோகுல்ராஜின் தாய் கூறியது என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்தை நீதிபதி கேட்டபோது, யுவராஜ் உள்ளிட்ட 10பேரும் தாங்கள் நிரபராதி என்றும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

கோகுல்ராஜின் தாயார் சித்ராவின் கருத்தை நீதிபதி கேட்டபோது, தன்னுடைய ஒரே மகன் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். தன் மகனுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நேரக்கூடாது. ஆகவே குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இருதரப்பினரின் கருத்தையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப் பட்டவர்களுக்கான தண்டனை பிற்பகலில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

யார் யாருக்கு என்ன தண்டனை?

இன்று மார்ச் 8-ம் தேதி பிற்பகல் மூன்றரை மணியளவில் நீதிபதி தண்டனை விவரங்களை அறிவித்தார். அதன்படி யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு தண்டனைக் குறைப்பு அளிக்கப்படக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு அருண், குமார், சதீஷ், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகிய ஆறு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

12வது குற்றவாளியான சந்திரசேகருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை பெற்றுத் தந்த வழக்குரைஞர் ப.பா.மோகன் மற்றும் அவரது வழக்குரைஞர் குழுவினர்.

பட மூலாதாரம், MOHAN ADVOCATE/FACEBOOK

14வது குற்றவாளி பிரபு, 15வது குற்றவாளி கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தாண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சம்பவம் என்ன?

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியலின பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜும் அவரோடு படித்துவந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்துவந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அந்த இளம்பெண்ணுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்ற கோகுல்ராஜ் வீடுதிரும்பவில்லை.

இதற்கு அடுத்த நாள் அவரது சடலம், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம்

முதலில் இந்த வழக்கை திருச்செங்கோடு காவல்துறையினர் நடத்திவந்தனர். திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா இது தொடர்பாக விசாரித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து வழக்கின் விசாரணை 2015 செப்டம்பர் 19ஆம் தேதி சி.பி.சி.ஐ,டிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, தேடப்பட்டுவந்தார். தேடப்பட்டுவந்த யுவராஜ் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசில் சரணடைந்தார். அவரோடு சேர்த்து 17 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பதினேழு பேரில் சந்திரசேகரன், ஜோதிமணி ஆகிய இருவர் இறந்துவிட்டனர்.

மீதமுள்ள 15 பேர் மீதான வழக்கின் விசாரணை நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன் பிறகு 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்குரைஞர் ப.பா. மோகன்

வழக்கறிஞர் மோகன்

பட மூலாதாரம், MOHAN ADVOCATE/FACEBOOK

இது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு என்பதால், பாதிக்கப்பட்டவர் சார்பில் அரசு வழக்குரைஞரைத் தேர்வு செய்ய முடியும். இதன்படி

கொல்லப்பட்ட கோகுல்ராஜின் தாய் கேட்டுக்கொண்டதன் படி இந்த வழக்கின் சிறப்பு அரசு வழக்குரைஞராக புகழ்பெற்ற மனித உரிமை வழக்குரைஞர் ப.பா.மோகன் நியமிக்கப்பட்டார்.

1,318 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் பிப்ரவரி 9ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பளிப்பதற்காக மார்ச் மாதம் 5ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டபோது, யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படுமென நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: