கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம்

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சேலம் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் 2015ல் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியலின பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜும் அவரோடு படித்துவந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்துவந்தனர். இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அந்த இளம்பெண்ணுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்ற கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
முதலில் இந்த வழக்கை திருச்செங்கோடு காவல்துறையினர் நடத்திவந்தனர். திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா இது தொடர்பாக விசாரித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து வழக்கின் விசாரணை 2015 செப்டம்பர் 19ஆம் தேதி சி.பி.சி.ஐ,டிக்கு மாற்றப்பட்டது.
இதற்குப் பிறகு இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, தேடப்பட்டுவந்தார். தேடப்பட்டுவந்த யுவராஜ் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசில் சரணடைந்தார். அவரோடு சேர்த்து 17 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் பதினேழு பேரில் சந்திரசேகரன், ஜோதிமணி ஆகிய இருவர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 15 பேர் மீது வழக்கு நடந்துவந்தது.
இதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன் பிறகு 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 1318 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் பிப்ரவரி 9ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பளிப்பதற்காக மார்ச் மாதம் 5ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
அதன்படி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சம்பத்குமார் இன்று அறிவித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள் வசந்தம், செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படுமென நீதிமன்றம் கூறியுள்ளது.
வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ப.பா. மோகன், "தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்கள் வேறு சாதியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்ற எண்ணமுடையவர் யுவராஜ். கோகுல்ராஜும் அந்தப் பெண்ணும் கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த யுவராஜ், அவர்களது சாதி குறித்து விசாரித்திருக்கிறார். அந்தப் பெண் தன்னுடைய சாதி என்பதையும் கோகுல்ராஜ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதையும் அறிந்துகொண்ட யுவராஜ், அவர்களிடமிருந்து செல்போனைப் பறித்துக்கொண்டு, அந்த இளம்பெண்ணை தன்னோடு வந்திருந்த சந்திரசேகர், ஜோதிமணி என்ற தம்பதியோடு அனுப்பிவிட்டார்.
இதற்குப் பிறகு, கோகுல்ராஜின் கண்ணைக் கட்டி சங்ககிரிக்கு காரில் கடத்திச் சென்றனர். அங்கு தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக கோகுல்ராஜையே மிரட்டி பேச வைத்து பதிவுசெய்தார். பிறகு அதை எழுத்து மூலமாகவும் எழுதிவாங்கினார். அதன் பிறகு வேறொரு காரில், நம்பர் பிளேட்டை மாற்றி, அதில் கோகுல் ராஜை ஏற்றி பள்ளிப்பாளையம் ரயில்வே டிராக் அருகில் கொண்டுவந்தனர். அங்கே யுவராஜ், அருண், சங்கர், குமார் ஆகியோர் கோகுல்ராஜின் தலையை வெட்டினர். பிறகு உடலை ரயில்வே டிராக்கில் வீசினர். சுவாதியின் செல்போனை ஆற்றில் வீசினர். கோகுல்ராஜின் போனை அவரது பாக்கெட்டிலேயே வைத்துவிட்டனர்.
கோகுல்ராஜின் உடலை புலனாய்வு செய்தபோது அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலைசெய்யப்பட்டார் என்பது தெரியவந்தது" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












