மு.க. ஸ்டாலினின் திடீர் உத்தரவால் அதிர்ந்த திமுகவினர் - கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வென்றவர்களுக்கு எச்சரிக்கை

அன்னவாசல் பேரூராட்சி

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மார்ச் 2-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். இதில், மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பல இடங்களில் சண்டைகள், தகராறுகள் ஏற்பட்டன.

சில இடங்களில் கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அது கூட்டணி கட்சியினர் இடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தங்களுடை மன வருத்தத்தை வெளிப்படையாகவே செய்தியாளர்கள் சந்திப்பைக் கூட்டி வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர்கள் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்றும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், இந்த உத்தரவுக்கு சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் கீழ்படிவதை திமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அப்படி உத்தரவை மதிக்காத திமுகவினர் கட்சியின் ஒழுங்கை மீறியதாகக் கருதி கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

ஸ்டாலின்

பட மூலாதாரம், MKSTALIN

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

இதைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மகிழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.

பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக, மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்க விட்டு தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்.

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வு எந்தக் காலத்திலும் உருக்குலைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத்தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகி விட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த காவல்துறை

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக மற்றும் அதிமுக போட்டியிட்டன. ஆனால், அதிமுக தரப்பில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் இருந்தனர்.

பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. அதில், திமுக, அதிமுக தரப்புக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டுமென்று திமுகவினர் போராட்டம் செய்தனர்.

அப்போது அங்கு காவலில் இருந்த போலீசார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடைய தூண்டுதலின் பேரில், அதிமுகவுக்குச் சாதகமாக நடந்துகொண்டதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.

இந்தச் சம்பவத்தின் போது அதிமுக மற்றும் திமுக தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு திமுகவினருக்கு மண்டை உடைந்தது. மேலும் ஒரு பெண் காவலர் உட்பட 8 போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து திமுகவினர் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, "எங்கள் மீது அதிகமுகவினர் தூண்டுதலின் பேரில் தான், எங்கள் மீது இந்தத் தாக்குதலை காவல்துறையினர் நடத்தியுள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, அன்னவாசல் பேரூராட்சித் தலைவர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும்," என்று மறியலில் ஈடுபட்டிருந்த திமுகவினர் கூறினர்.

அவர்களுக்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர், "இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் வரை கொண்டு சென்று, இந்தச் சம்பவம் உண்மையாகவே முன்னாள் அமைச்சர் தூண்டுதலின் பேரில் நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் ஆலோசிப்போம்," என்று கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திமுகவினர் கலைந்து சென்றனர்.

இதற்குப் பிறகு மீண்டும் அன்னவாசல் பேரூராட்சியின் தேர்தல் நடைபெற்ற போது, அதிமுகவைச் சேர்ந்த சாலை பொன்னம்மாள் என்பவர் பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய பகுதியில் திமுக போட்டி

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் ரேணுப்பிரியா வெற்றி.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன.

இதில் திமுக 19 வார்டுகளிலும், அதிமுகவினர்7 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சியினர் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். அவர்களைத் தொடர்ந்து, அமமுக மற்றும் சுயேட்சை தலா இரண்டு வார்டுகள், பாஜக ஒரு வார்டு என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர்.

தேனி - அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேனி - அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அந்தக் கட்சி சார்பாக 22வது வார்டு கவுன்சிலர் சற்குணம் என்பவர் நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற நகர் மன்ற தலைவர் பதிவுக்கான மறைமுக தேர்தலில் 10வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா மனுத்தாக்கல் செய்தார்.

அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாலை பொன்னம்மாள்
படக்குறிப்பு, அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாலை பொன்னம்மாள்

இதனால் நகர்மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் போட்டியிட இருந்த காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் தேர்தலை புறக்கணித்து வெளியே வந்தார்.

பின்னர், நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததில் திமுக வேட்பாளர் ரேணுப்பிரியா வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.

மறைமுகத் தேர்தலுக்கு வராத திமுக கவுன்சிலர்கள்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளிலும் அதிமுக 7 வார்டுகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற தேர்தலின்போது அதிமுக வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். திமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் ஆகிய 8 பேரும் வரவில்லை. போதிய எண்ணிக்கையில் வார்டு உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான மயில்வாகனன் அறிவித்தார்.

மேலும் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிக்கும் மற்றொரு தேதியில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மறைமுக தேர்தல் நிலவரம்

தேர்தல் ஒத்திவைப்பு

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் நடைபெற இருந்த இன்று அதிமுக, திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் தேர்தல் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் அதிமுக வென்ற ஒரே பேரூராட்சி வெள்ளலூர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேனியில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு போட்டியாக நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு.

உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில், திமுக அறிவித்த வேட்பாளர் க.செல்விக்கு எதிராக மற்றுமொரு திமுக வேட்பாளர் சகுந்தலா விருப்ப மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் திமுக அறிவித்த செல்வியின் ஆதரவாளர்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் ஏற்பட்ட கூட்டணி குழப்பம்

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

கோவை மாவட்ட சிபிஎம் உறுப்பினர்கள்

பட மூலாதாரம், CPM

ஆனால் இன்று திமுகவினர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து தலைவராக அறிவித்துக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தாக்கப்பட்டதாகவும் கட்சி உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டதாகவும் அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய தொகுதி பங்கீட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நகராட்சி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான தேர்தல் இன்று நடைபெற இருந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுகவின் சூலூர் ஒன்றிய பொறுப்பாளர் மனோகரன் போட்டியிட்டார்.இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த மனோகரன் 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 8 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக 4க்கு 4 என்ற விகிதத்தில் சம பலத்தில் உள்ளன.

இந்நிலையில் பேரூராட்சி தலைவர் தேர்தலை திமுக புறக்கணித்த காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலூரில் மேயர் பதவிக்காக கட்சிக்குள்ளேயே போட்டிபோட்ட திமுக

கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை திமுக தலைமை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் மேயர் பதவிக்கு 20-வது வார்டின் திமுக கவுன்சிலர் சுந்தரி என்பவரையும் துணை மேயர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 34-வது வார்டின் கவுன்சிலர் தாமரைச் செல்வனையும் திமுக தலைமை அறிவித்தது.

இதனால் மேயர் பதவியை எதிர்பார்த்திருந்த மற்றொரு திமுக உறுப்பினரான கீதா குணசேகரன் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தங்களுக்கு ஆதரவாக கவுன்சிலர்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நேற்று மாலை திமுகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களைக் காணவில்லை. அவர்களுடைய தொலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் திமுகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தங்க வைக்கப்பட்டது தெரியவந்தது. இதில் சுமார் 4 கவுன்சிலர்கள் அங்கிருந்து மீண்டு மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். இந்தத் தகவலை அடுத்து தனியார் நட்சத்திர விடுதியில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் இன்று நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கான வேட்புமனுவை திமுக தலைமை தேர்வு செய்த வேட்பாளர் சுந்தரி ராஜா மற்றும் அதிருப்தியடைந்த திமுக தரப்பைச் சேர்ந்த 2வது வார்டு கவுன்சிலர் கீதா குணசேகரன் ஆகிய இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இந்த மறைமுக தேர்தலில் 45 கவுன்சிலர்களில், 32 பேர் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அதிமுகவை சேர்ந்த 6 பேர் மறைமுக தேர்தலுக்கு வராமல் புறக்கணித்தனர். மேலும் திமுகவைச் சேர்ந்த 7 கவுன்சிலர்கள் தனியார் நட்சத்திர விடுதியில் இருந்ததால் வாக்களிப்பில் பங்கேற்க முடியவில்லை.

இதையடுத்து நடைபெற்ற மேயர் தேர்தலுக்கான மறைமுக தேர்தலில், திமுக தலைமை தேர்வு செய்த வேட்பாளர் சுந்தரிக்கு 19 பேர் வாக்களித்தனர். மற்றொரு திமுக தரப்பினரான கீதா குணசேகரனுக்கு 12 பேர் வாக்களித்தனர். இதையடுத்து 19 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக வேட்பாளர் சுந்தரி ராஜா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விசிகவிற்கு ஒதுக்கிய இடத்தில் திமுக போட்டியிட்டு வெற்றி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில், விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக போட்டியிட்டு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றியது. ராஜினாமா செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் திடீர் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு‌ ஏற்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மேயர், துணை மேயர், நகரமன்ற தலைவர் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நகரமன்ற தலைவர் பதவிக்கு கிரிஜா திருமாறன் என்பவர் வேட்பு மனு செய்தார். திமுக சார்பில் போட்டி வேட்பாளராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் என்பவர் போட்டியிட்டார்.

ஜெயந்தி ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 3 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் பதவிக்கு ஜெயந்தி ராதாகிருஷ்ணன் இருபத்தி மூன்று வாக்குகளும், கிரிஜா திருமாறன் மூன்று வாக்குகளும் பெற்றார்.

விசிக போட்டி

இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகர்மன்ற தலைவராக ஜெயந்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற துணை தலைவர் பதவியை விசிகவிற்கு அளிக்க வேண்டும் எனவும், திமுக சார்பில் யாரும் போட்டியிட கூடாது எனவும் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அதையும் மீறி திமுக சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளராக ஜெயப்பிரதா என்பவர் போட்டியிட்டு 22 வாக்குகளை பெற்றார். இதில் கிரிஜா திருமாறன் 6 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இதனால் அதிர்ப்தி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திமுக கண்டித்து கோஷங்களை எழுப்பினர். திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் காரை விசிக வினர் மடக்கி தாக்குதலில் ஈடுபட முயன்றனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் களமிறங்கி வெற்றி பெற்றிருப்பது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மங்கலம்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனை கண்டித்து விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் திமுக அரசைக் கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: