சென்னை, மதுரை மேயர்கள் யார்? காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுக்கு எந்தெந்த மேயர், துணை மேயர் இடங்கள்? திமுக பட்டியல்

பட மூலாதாரம், CHENNAI CORPORATION
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான இடப்பங்கீட்டை தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர் பதவியும் சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், புதன்கிழமை காலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, `மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகள் யார் யாருக்கு வந்து சேரும்?' என்ற விவாதம் கிளம்பியது.
குறிப்பாக, கடந்த சில நாட்களாக தி.மு.க கூட்டணி கட்சிகள், தங்களின் செல்வாக்குக்கு ஏற்ப தாங்கள் கேட்கும், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளின் பட்டியலை தி.மு.க.வுக்கு அளித்தன.
இந்தப் பட்டியலை தி.மு.கவின் முதன்மை நிலைய செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து வந்தனர். இவர்கள் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி இறுதி முடிவுக்கு வந்தனர்.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பட்டியலை வெளியிட்ட திமுக தங்களுக்கு ஒதுக்கிக்கொண்ட மேயர், துணைமேயர் உள்ளிட்ட இடங்களுக்கு யாரை தேர்வு செய்துள்ளது என்ற பட்டியலையும் வெளியிட்டது.
திமுக பட்டியல்: சென்னை, மதுரை, கோவை மேயர்கள் யார் யார்?
திமுக தங்களுக்கு ஒதுக்கிக்கொண்ட மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல்:
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு எம்.காம் பட்டதாரியான ஆர்.பிரியாவும் துணை மேயர் பதவிக்கு மு.மகேஷ்குமாரும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு இந்திராணியும் திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு மு.அன்பழகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு திவ்யா தனக்கொடி நிறுத்தப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பி.எம்.சரவணனும் துணை மேயர் பதவிக்கு கே.ஆர்.ராஜூவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனாவும் துணை மேயர் பதவிக்கு இரா.வெற்றிச்செல்வனும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாநகராட்சிக்கு ஏ.ராமச்சந்திரனும் திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு தினேஷ்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு நாகரத்தினமும் துணை மேயர் பதவிக்கு செல்வராஜ் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு என்.பி.ஜெகனும் துணை மேயர் பதவிக்கு ஜெனிட்டா செல்வராஜ் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி மேயர் பதவிக்கு ஜி.உதயகுமார் பெயரும் தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு வசந்தகுமாரி கமலக்கண்ணன் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு ஜி.காமராஜ் பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு மகாலட்சுமி யுவராஜ் பெயரும் வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு சுஜாதா அனந்தகுமார் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு துணை மேயர் பதவிக்கு சுனில் என்பவரின் பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு சுந்தரியும் தஞ்சாவூர் மேயர் பதவிக்கு ராமநாதன் பெயரும் இங்கு துணை மேயர் பதவிக்கு அஞ்சுகம் பூபதி பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவிக்கு தமிழழகன் பெயரும் கரூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கவிதா கணேசன் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் துணை மேயர் பதவிக்கு தாரணி பி.சரவணன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
அடுத்ததாக, ஒசூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு எஸ்.ஏ.சத்யா என்பவரின் பெயரும் துணை மேயர் பதவிக்கு சி.ஆனந்தைய்யா என்பவரின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவிக்கு இளமதியின் பெயரும் துணை மேயர் பதவிக்கு இராஜப்பா பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சி மேயர் பதவிக்கு சங்கீதா இன்பம் என்பவரின் பெயரும் துணை மேயர் பதவிக்கு விக்னேஷ் பிரியா என்பவரின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு மகேஷ் என்பவரின் பெயரும் துணை மேயர் பதவிக்கு மேரி பிரின்சி என்பவரின் பெயரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு...
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விவரத்தை தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், நகராட்சிகளைப் பொறுத்தவரையில் தேவகோட்டை, தேனி, காங்கேயம், சுரண்டை, கருமத்தம்பட்டி, கோபிச்செட்டிபாளையம் ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், கூடலூர், ஆரணி, நரசிங்கபுரம், காரமடை, குடியாத்தம், திருவேற்காடு, குன்னத்தூர், தாராபுரம், உசிலம்பட்டி ஆகிய ஒன்பது நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் மங்களம்பேட்டை, சின்னசேலம், வடுகபட்டி, பூலாம்பட்டி, பிக்கட்டி, பேரையூர், பட்டிவீரன்பட்டி, ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சி.பி.எம். என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியைப் பெறுகிறது.
திருமுருகன்பூண்டி, கொல்லன்கோடு ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளும் திருத்துறைப்பூண்டி, சிதம்பரம், பழனி ஆகியவற்றின் நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளும் பெரியநாயக்கன் பாளையம், வீரவநல்லூர், அந்தியூர் ஆகிய பேரூராட்சித் தலைவர் பதவிகளும் இந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சிபிஐ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியும் கூத்தாநல்லூர் நகராட்சித் தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளன. பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடிநாயக்கனூர் ஆகியவற்றின் நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளும் சி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள்

பட மூலாதாரம், THIRUMAOFFICIAL
இறுதியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவியும் ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளும் பெண்ணாடம், காடையாம்பட்டி, பொ.மல்லபுரம் ஆகிய பேரூராட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. நகராட்சித் துணைத் தலைவர் பதவியைப் பொறுத்தவரையில் திண்டிவனம், பெரியகுளம், ராணிப்பேட்டை ஆகியவை வி.சி.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மதிமுக
ம.தி.மு.கவுக்கு ஆவடி துணை மேயர் பதவியும் மாங்காடு நகராட்சித் தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகியவற்றின் நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளும் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திருவேங்கடம், ஆடுதுறை, சென்னசமுத்திரம் ஆகிய பேரூராட்சிகளும் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












