தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கவுன்சிலர்கள் ஆகும் 2K கிட்ஸ் முதல் வயோதிக தம்பதிவரை - சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ்நாட்டில் குடும்பம், குடும்பமாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள். கட்சி சார்பாகவும் சுயேச்சையாகவும் போட்டியிட்டு வென்ற 22 வயது இளம்பெண்கள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பதிவாகியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (22.02.2022) நடைபெற்றது.
தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை திமுக பெரும்பாலான இடங்களில் வென்றும் முன்னிலை வகித்தும் வருகிறது.அத்துடன் அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் இந்தப் போட்டியில் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில் கவனிக்க வேண்டிய சில வெற்றிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக கணவன்-மனைவி, அண்ணன்-தங்கை, மாமியார்-மருமகள் என குடும்பம் குடும்பமாகவும் மாணவிகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என ஊக்கமளிக்கும் விதமான வெற்றிகளும் பதிவாகியுள்ளன.
யார் அந்த வெற்றியாளர்கள்? வெற்றி பெற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? இங்கே பார்க்கலாம்.
கணவன் மனைவி வெற்றி:
சாயல்குடி பேரூராட்சியில் சுயேச்சையாக வார்டு 1இல் போட்டியிட்ட மாரியப்பன் மற்றும் வார்டு 2இல் போட்டியிட்ட அவரது மனைவி பானுமதி ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.
திருவாரூர் நகராட்சியில் அதிமுக சார்பில் 1வது வார்டில் போட்டியிட்ட கலியபெருமாள் மற்றும் 2வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி மலர்விழி வெற்றி பெற்றனர்.

முதுகுளத்தூர் பேரூராட்சியில் அமமுக சார்பாக 6வது வார்டில் போட்டியிட்ட கருப்பணன் மற்றும் 5வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி மீனாள் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அதேபோல, அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் 4ஆவது வார்டில் போட்டியிட்ட மனைவி ரேணுகா ஈஸ்வரி, 5வது வார்டில் போட்டியிட்ட கணவர் கோவிந்தராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தாய் - மகன் வெற்றி
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 13, 8ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட தாய் வள்ளிமயில், மகன் மருதுபாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் சி.பி.எம். சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் விஜயா (18 ஆவது வார்டு), அவரது மகன் ஜோதிபாசு (27ஆவது வார்டு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட தாய் பாத்திமாகனி (5ஆவது வார்டு), மகன் ஜாகிர் உசேன் (6ஆவது வார்டு) வெற்றி பெற்றுள்ளனர்.

மாமியார் மருமகள் வெற்றி
விருதுநகரில் 26, 27வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மருமகள் சித்தேஸ்வரி, மாமியார் பேபி வெற்றி பெற்றனர்.
இளம் வயது மாணவிகள்

கோவை மாநகராட்சியின் 97வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான நிவேதா சேனாதிபதி வெற்றி பெற்றுள்ளார். 22 வயதான நிவேதா சேனாதிபதி கோவை மாநகராட்சியின் இளம் உறுப்பினராக உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை 7,786 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் 21 வயது ரேவதி வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் 22 வயதான சுயேச்சை வேட்பாளர் ஸ்னேகா 496 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை மாநகராட்சி 136வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதான பி.காம் பட்டதாரி நிலவரசி வெற்றி பெற்றார்.

நிலவரசி துரைராஜ் பிபிசி தமிழிடம் கூறுகையில், "எனக்கு வாய்ப்பளித்த தலைமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் 9 மாத நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது. முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு தொண்டர்களின் தீவிர வாக்கு சேகரிப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
நிச்சயம் ஒரு முன்மாதிரி கவுன்சிலராக செயல்படுவேன். என் மீது கட்சியும் வாக்களித்த மக்களும் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்" என்றார்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சி 5 ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 22 வயது இளம்பெண் ரதியா வெற்றி பெற்றார்.

தற்போது இளங்கலை மண்ணியல் படித்துக் கொண்டிருக்கும் ரதியா பிபிசி தமிழுடன் பேசியபோது "படிப்பு வேறு பொது சேவை வேறு. படிப்பால் இந்த பொது சேவைக்கு எந்தவித இடர்பாடும் இருக்காது. மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன். வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.
திருநங்கை வெற்றி
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37வது வார்டில், திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.

49 வயதான கங்கா, 2002ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளராகவும் இருக்கிறார்.
மாற்றுத்திறனாளி வெற்றி
நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி 7வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட மாற்றுத்திறனாளி நியாஸ் வெற்றிபெற்றார்.
பூஜ்ஜிய வாக்கு வேட்பாளர்:
சிவகங்கை நகராட்சி 1ஆவது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஒரு ஓட்டு கூட பெறாமல் டெபாசிட் இழந்தார்.

அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் அதிமுக வேட்பாளர் இப்ராம்சா ஒரு வாக்கு கூட பெறவில்லை.
அதே கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி வேட்பாளர் தர்மராஜ் என்பவரும் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
ஒரு வாக்கு வேட்பாளர்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் 11ஆவது வார்டில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
செங்கல்பட்டு நகராட்சி 9 ஆவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கண்ணன் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றார்.
வெற்றிக்குப் பின் கட்சித் தாவல்
ஆவடி மாநகராட்சி 14 ஆவது வார்டில் அதிமுக சார்பில் வென்ற ராஜேஷ் திமுகவில் இணைந்தார்.
மதுரை மேலூர் நகராட்சி 9ஆவது வார்டில் அதிமுக சார்பில் வென்ற அருண்பிரபு திமுகவில் இணைந்தார்.
பிற செய்திகள்:
- திருச்சியின் முதல் 'மாநகரத் தந்தை' ஆகப்போவது யார்? - மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக வியூகம்
- குரு கோல்வல்கர்: 'வெறுப்பின் தலைவனா' இந்து தேசியவாதத்தின் மாபெரும் ரசிகரா?
- கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதல்
- உடலுறவில் இன்பமும் பாதுகாப்பும் - உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
- பாகிஸ்தானை ஒதுக்கிவிட்டு செளதி அரேபியா இந்தியாவை நெருங்கி வருவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













