திருச்சியின் முதல் 'மாநகரத் தந்தை' ஆகப்போவது யார்? - மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக வியூகம்

திருச்சி மலைக்கோட்டை

பட மூலாதாரம், Trichirappalli city corporation

    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

திருச்சி 'மாநகரத் தந்தை' வாய்ப்பு முதல்முறையாக உருவாகியுள்ளது. பல்லாண்டு காலமாக மாநகராட்சியாக உள்ள திருச்சிக்கு இதுவரை பெண்கள் மட்டுமே திருச்சியின் மேயராக இருந்துள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த மேயர் பதவியை பிடிக்க, திமுக, அதிமுக கட்சிகளில் பலத்த போட்டி நிலவுகிறது. மாநகராட்சி கவுன்சிலர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, மறைமுகத் தேர்தல் மூலம்தான் மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆகையால், மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், இவருக்குத்தான் வாய்ப்பு என்று கட்சியினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் மையப் பகுதியாக உள்ள திருச்சிராப்பள்ளி 'மலைக்கோட்டை மாநகரம்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த, 1866ம் ஆண்டு ஜூலை, 8ம் தேதி திருச்சி நகராட்சியானது. இதையடுத்து 128 ஆண்டுகளுக்கு பிறகு, 1994ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

அருகில் இருந்த ஸ்ரீரங்கம், பொன்மலை நகராட்சிகள், கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம் பேரூராட்சிகள் திருச்சி மாநகராட்சியில் இணைக்கப்பட்டன. ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் என நான்கு கோட்டங்களில், மொத்தம் 60 வார்டுகள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மொத்த பரப்பளவான, 167.23 ச.கி.மீட்டரில், 3,857 தெருக்களில், 12 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சியாகி, 25 ஆண்டுகளைக் கடந்து வெள்ளி விழா கொண்டாடியுள்ளது.

திருச்சி நகராட்சியாக இருந்தபோது, திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன், கடைசி நகர்மன்றத் தலைவராக இருந்தார். மாநகராட்சியாகிய பிறகு, மேயர் பதவி பெண்களுக்கு என தொடர்ந்து ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக கூட்டணியில், தமாகா, காங்கிரஸுக்கு அந்தப் பதவி ஒதுக்கப்பட்டது. முதல் மேயராக புனிதவள்ளி பழனியாண்டி, அவரைத் தொடர்ந்து, எமிலி ரிச்சர்ட், சாருபாலா தொண்டைமான், சுஜாதா ஆகியோர் மேயராக இருந்தனர். கடந்த முறை திருச்சி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றியது. அக்கட்சியின் ஜெயா என்பவர் மேயராகினார்.

முதல் மாநகரத் தந்தை யார்?

கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி

பட மூலாதாரம், K.N.Nehru

படக்குறிப்பு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மற்றும் மு.அன்பழகன்

இந்நிலையில், திருச்சி மேயர் பதவியை பொதுப் பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதன் மூலம், மாநகராட்சி ஆகி 25 ஆண்டுகளுக்கு பிறகு, ஆண் ஒருவர் திருச்சி 'மாநகரத் தந்தை' ஆகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த மேயர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக கட்சிகளில் பலத்த போட்டி நிலவுகிறது. மாநகராட்சி கவுன்சிலர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, மறைமுகத் தேர்தல் மூலம்தான் மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், இவருக்குத்தான் வாய்ப்பு என்று கட்சியினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பில்லை

அந்தவகையில், திருச்சி மாநகராட்சித் தேர்தலில், 65 வார்டுகளில், 50 இடங்களில் போட்டியிடும் திமுக, மீதம் உள்ள 15 இடங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மேயர் பதவி தங்களுக்கு தான் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.

அதற்கேற்ப வியூகம் வகுத்து வருகிறது. மேயர் பதவிக்கு அக்கட்சியின் மாநகரச் செயலாளர், முன்னாள் துணை மேயர் அன்பழகன், மலைக்கோட்டைப் பகுதிச் செயலாளர் மதிவாணன் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு. இதில், திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் ஆசியும் ஆதரவும் அன்பழகனுக்கும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவு மதிவாணனுக்கும் உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.

யார் மேயர் - கே.என்.நேரு சூசகம்

திருச்சி மாநகராட்சி

பட மூலாதாரம், K.N.Nehru

படக்குறிப்பு, திமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசும் அமைச்சர் கே.என்.நேரு

அண்மையில் திருச்சி தென்னூரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ''திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். முன்னாள் துணை மேயர் அன்பழகனுக்கு மேயர் பதவி வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்கும் இடத்தில் நான் உள்ளேன். எனவே, அன்பழகன் மேயராக வாய்ப்புள்ளது'' என்று பேசி அன்பழகனுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

எதிர்க்கட்சியான அதிமுகவைப் பொருத்தவரை முன்னாள் துணை மேயர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவகர், வனிதா, பாஸ்கர், அரவிந்தன் இவர்களில் ஒருவர் மேயர் வேட்பாளராக இருப்பார்கள் என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.

மற்ற கட்சிகளின் நிலை

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் பொறுப்பு வகித்த சுஜாதா, மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் ஆகியோர் மேயர் பதவியை குறி வைத்துள்ளனர். கூட்டணி ஒதுக்கீட்டில் தங்களுக்கு மேயர் அல்லது துணை மேயர் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர்.

இந்த இரண்டு கட்சிகள் தவிர அமமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அக்கட்சியின் மேயர் வேட்பாளர் குறித்த பேச்சும் இல்லை. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

மேயர் தேர்தல் எப்போது ?

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு மார்ச் 2ம் தேதியும், மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதியும் நடைபெறுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டு உறுப்பினர்கள், 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர்கள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: