பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியை இந்த ஆண்டு பிபிசி நடத்துகிறது. இதற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் 2021ஆம் ஆண்டிற்கான ஐந்து போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
''விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை அறிவிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதின் ஒவ்வொரு பதிப்பும் சில புதிய பெயர்களைக் கொண்டுள்ளது. கோல்ஃப் வீராங்கனை முதல் பாராலிம்பிக் வீராங்கனை வரை விளையாட்டின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்திய விளையாட்டுத் துறையில் மின்னும் நட்சத்திரங்கள் இங்கே கொண்டாடப்படுகிறார்கள்,'' என்று பிபிசி நியூசின் இந்திய தலைவர் ரூபா ஜா தெரிவித்துள்ளார்.
''திறமை மிக்க விளையாட்டு வீராங்கனைகளை மேம்படுத்துவதற்காக இந்தியா போதுமான அளவு செயல்பட்டு வருகிறது. தற்பொழுது அனைத்தும் மாறிவருகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன, என்றாலும் நமக்கு திறன் வாய்ந்த பயிற்சியாளர்கள் தேவை; பெற்றோரும் தங்களது குழந்தைகளை விளையாட்டு துறையில் பங்கெடுக்க வைக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்களின் பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன,'' என்று கடந்த ஆண்டு பிபிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கிய விளையாட்டு வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தற்போதைய இந்திய விளையாட்டுத்துறை குறித்து நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இந்த விருது, இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் நாட்டிற்கு அளித்த பங்களிப்பை கெளரவிப்பதாகும். மேலும், விளையாட்டில் சாதனை படைக்கும் பெண்களை கொண்டாடும் வகையிலும் அமைந்துள்ளது.
பிபிசியின் இந்திய மொழிகள் இணையதளங்களில் அல்லது பிபிசி ஸ்போர்ட் இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், இந்த ஆண்டின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு உங்களை கவர்ந்த வீராங்கனைக்கு வாக்களிக்கலாம்.
இந்திய நேரப்படி, பிப்ரவரி 28ம் தேதி இரவு 11:30 மணி வரை இணையதளம் வாயிலாக வாக்களிக்க முடியும். மார்ச் 28, 2022 அன்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறும். இதுகுறித்த அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும், தனியுரிமை அறிவிப்புகளும் இணையதளத்தில் உள்ளன.
பிபிசி இந்திய மொழி இணையதளங்களும், பிபிசி ஸ்போர்ட் இணையதளத்திலும் விருது முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதிக வாக்குகளைப் பெற்ற விளையாட்டு வீராங்கனையே பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனையாக அறிவிக்கப்படுவார்.

பரித்துரைப்பட்டவர்களின் விவரங்கள்:
அதிதி அசோக்

ஒரு தொழில்முறை வீராங்கனை ஆனது முதல், பெண்கள் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அடையாளமாக இருந்து வருகிறார் அதிதி அசோக்.
2016ஆம் ஆண்டு, ரியோ ஒலிம்பிக் போட்டியில் 18 வயதில், இந்தியக் குழுவில் இருந்த இளம் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார் அதிதி.
23 வயதான அவர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தனது ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். கோல்ஃப் விளையாட்டில் அதிதியின் வெற்றி, இந்தியாவில் பெண்கள் கோல்ஃப் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. உலக அளவில், இந்தியா குறைந்த வெற்றிகளைக் கண்ட விளையாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு, பெண்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் போட்டியில் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார் அதிதி.
அவனி லெகரா

அவனி லெகரா பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான 20 வயதான அவனி லெகரா. டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் SH1 பிரிவில், புதிய சாதனையைப் படைத்தார்.
அதே போட்டியில், பெண்களுக்கான 50மீ ரைபிள் 3-பொசிஷன்ஸ் SH1 பிரிவில் அவனி வெண்கலப் பதக்கமும் வென்றார்.
அவருக்கு பத்து வயதாக இருக்கும் போது நடந்த ஒரு பெரிய கார் விபத்து, அவரது இடுப்புக்கு கீழ் பகுதிகள் செயலிழந்தது. இந்த விபத்துக்குப் பிறகு, அவரது தந்தை அவரை துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு, அவனியின் வாழ்க்கை மாறியது. விளையாட்டில் கொண்ட பேரார்வத்துடன் சேர்ந்து, சட்டப்படிப்பும் படித்து வருகிறார்.
லவ்லினா போர்கோஹெய்ன்

டோக்யோ விளையாட்டுப் போட்டியில், லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்று, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
லவ்லினா பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் 2018ஆம் ஆண்டு நடந்த தொடக்க இந்திய ஓபனில், அவர் தங்கம் வென்ற பிறகு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு, அவர் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடினார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் பிறந்த 24 வயதான லவ்லினா, தனது இரண்டு மூத்த சகோதரிகளிடமிருந்து கிடைத்த உத்வேகத்தால், குத்துச்சண்டை வீராங்கனையாக உருவாகினார்.
மீராபாய் சானு

2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சாய்கோம் மீராபாய் சானு.
இதன் மூலம், அவர் விளையாட்டு வரலாற்று பக்கங்களில் தனது பெயரைப் பதித்தார்.
2016ஆம் ஆண்டு, ரியோ விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்க தவறியதில் இருந்து, அவர் வெகுதூரம் வந்திருக்கிறார். அப்போது, விளையாட்டிலிருந்து கிட்டத்தட்ட விடைபெறும் நிலையில் இருந்தார்.
2017ஆம் ஆண்டு, உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், தேநீர் கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்த மீராபாய், தனது விளையாட்டு வாழ்க்கையின் தொடக்க காலத்தில், பல நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டார். ஆனால், அவர் ஒலிம்பிக் சாம்பியனாவதற்கு அனைத்து இடையூறுகளையும் முறியடித்தார்.
பி.வி. சிந்து

பேட்மிண்டன் வீராங்கனை புசர்லா வெங்கட சிந்து ஒலிம்பிக் போட்டியில், தனிநபருக்கான இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண். டோக்யோ விளையாட்டு போட்டியில் வென்ற வெண்கலம், அவரது இரண்டாவது ஒலிம்பிக் வெற்றியாகும் - அவர் 2016ஆம் ஆண்டு, ரியோ விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றார்.
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் (BWF) உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்துடன் 2021 ஆம் ஆண்டை நிறைவு செய்தார் பிவி சிந்து. இந்த ஆண்டு, ஜனவரி 22ஆம் தேதியன்று, சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் பட்டத்தையும் வென்றார்.
2019ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வரலாற்று சிறப்புமிக்க தங்கம் பதக்கம் வென்ற முதல் இந்தியரானார் சிந்து. 2012 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், தனது 17 வயதில் பி.டபள்யூ. எஃப் (BWF) உலக தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தவர் பி.வி.சிந்து
மார்ச் மாதம் 28ம் தேதியன்று நடக்கும் விருது நிகழ்ச்சியில், வரலாறு படைத்த விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு பிபிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், இளம் விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு வளர்ந்து வரும் வீராங்கனைகான விருதும் வழங்கப்படும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனா தொற்றுநோய் நம் வாழ்வின் அனைத்து நிலையிலும் பாதித்த கடுமையான காலக்கட்டத்துக்கு முன், இந்த விருதின் தொடக்க பதிப்பை பிபிசி அறிமுகப்படுத்தியது. இந்த விருது நிகழ்ச்சி, அதன் மூன்றாவது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த ஆண்டு, சதுரங்க விளையாட்டு வீராங்கனை கொனேரு ஹம்பி, 2020 ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார்.
ஊடகவியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் விளையாட்டு குறித்து எழுதுபவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தனித்துவமிக்க நடுவர் குழுவால் மேற்கண்ட ஐந்து பேரும் பிபிசியின் 2021ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்த நடுவர் குழுவால் அதிகபட்ச பரிந்துரைகளைப் பெற்ற விளையாட்டுப் வீராங்கனைகளே பொது வாக்களிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













