இ-வாடகை: டிராக்டர், அறுவடை, நடவு இயந்திரங்களை வாடகைக்கு விடும் திட்டத்தில் பயன் பெறுவது எப்படி?

இ.வாடகைத் திட்டம்

பட மூலாதாரம், TN Agri Engineering Dept

படக்குறிப்பு, நெல் நடவு இயந்திரம்
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

நவீன வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடும் வகையில் தமிழ்நாடு அரசு இ-வாடகைத் திட்டத்தை அறிமுகம் செய்து ஒரு மாதமாகிறது. வீட்டில் இருந்தபடியே இ-வாடகை செயலியில் பதிவு செய்து இந்த திட்டத்தின் கீழ் வேளாண் கருவிகளை விவசாயிகள் வாடகைக்கு எடுக்க முடியும்.

இந்த திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது?

விவசாயத்தில் நவீனமயத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்க மானியம் அளிக்கிறது தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை. இந்த துறை சார்பில் வட்டார அளவில் வாடகை மையங்கள் அமைக்கப்படுகின்றன. முன்னோடி விவசாயிகள், வட்ட விவசாயிகள் சங்கத்தினர், தொழில்முனைவோர் ஆகியோரைக் கொண்டு வேளாண் இயந்திர மையங்களை அமைக்கவும் நிதியுதவி அளிக்கபடுகிறது.

சிறு, குறு விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாத நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த கட்டணத்தில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் இயந்திரங்களை வீட்டில் இருந்தபடியே வாடகைக்கு பதிவு செய்ய இ.வாடகை எனும் பிரத்யேக ஆன் லைன் செயலியை (ஆப்) தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 08.01.2022 அன்று தொடங்கி வைத்தார். அப்போது, 230 வேளாண் வட்டாரங்களில் ரூ. 50.73 கோடியில் 2, 118 இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் பெறும் திட்டமும் தொடங்கப்பட்டது. இ வாடகை செயலி மூலம், வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொண்டு, புதிய திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை, பயனாளிகளின் தகுதி உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.

விண்ணப்பிக்கும் முறை

இ-வாடகைத் திட்டத்தில் குறைந்த கட்டணத்தில், இயந்திரங்களைப் பெற முன்பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் அலைச்சலைத் தவிர்க்கும் வகையில் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு, முதலில் 'உழவன்' செயலிக்கு செல்ல வேண்டும். அதில், முகப்பு பக்கத்தில் 'வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு' என்பதை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, 'வேளாண் பொறியியல் துறை - இயந்திரங்கள் வாடகைக்கு' என்பதையும் அதைத் தொடர்ந்து 'முன்பதிவிற்கு' என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து 'வேளாண் இயந்திரங்கள் வாடகை விபரம்' திரையில் வரும். அதை க்ளிக் செய்து, வேளாண் பணிக்கான இடத்தின் மாவட்டம், வட்டம், வட்டாரம், கிராமம், முகவரி, நிலத்தின் புல எண், தேவைப்படும் தேதி, நேரம் ஆகிய விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.

இ.வாடகைத் திட்டம்

பட மூலாதாரம், TN Agri Engineering Dept

இதையடுத்து தேவைப்படும் இயந்திரங்களின் பட்டியல் வெளியாகும். அதில், நமக்கு தேவையான இயந்திரத்தை தேர்வு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவைப்படும் கால அளவிற்கு ஏற்ப கட்டணம் விவரம் திரையில் வரும். பின்னர், வாடகைக்கான நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்து, முன்பதிவை உறுதி செய்ய வேண்டும். முன்பதிவு விபரத்தினை சரிபார்த்த பின்னர், 'பணத்தை செலுத்துக' என்கிற பொத்தானை அழுத்த வேண்டும். அதில், நெட் பேங்கிங், கிரடிட் கார்டு மூலம் வாடகைக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதையடுத்து முன்பதிவிற்கான ஒப்புகைச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நாம் தேர்வு செய்த நாளில், தேர்வு செய்த பணியிடத்திற்கு இயந்திரம் அனுப்பி வைக்கப்படும்.

நிபந்தனைகள்

இத்திட்டத்தின்படி, புல்டோசர் மற்றும் ட்ரக் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் குறைந்தது 8 மணி நேரமும் அதிகபட்சம் 30 மணி நேரமும் வழங்கப்படும். டிராக்டர், மினி டிராக்டர் மற்றும் சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் குறைந்தபட்சம் 2 மணி நேரமும் அதிகபட்சம் 20 மணி நேரமும் வழங்கப்படும்.

வாகனத்துடன் கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரம் குறைந்தது 2 மணி நேரம், அதிகபட்சம் 20 மணி நேரம். டிரக் மற்றும் சக்கர வகை நெல் அறுவடை இயந்திரம் குறைந்தது 1 மணி நேரம் அதிகபட்சம் 20 மணி நேரம் வழங்கப்படும்.

ஒரு மணி நேர வாடகை டிராக்டர்கள், மினி டிராக்டர்கள் ரூ. 400, புல்டோசர் ரூ. 970, சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் - ரூ 760, டிரக் வகை மண் அள்ளும் இயந்திரம் ரூ. 1, 660, டிரக் வகை நெல் அறுவடை இயந்திரம் ரூ.1,630, சக்கர வகை நெல் அறுவடை இயந்திரம் ரூ. 1,010, கரும்பு அறுவடை இயந்திரம் மற்றும் இன்பில்டர்கள் ரூ. 4, 450, வாகனத்துடன் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் ரூ. 650, நடவு இயந்திரம் ரூ. 1, 025 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இ.வாடகைத் திட்டம்

பட மூலாதாரம், TN Agri Engineering Dept

சிறுபாசனத் திட்டக் கருவிகளையும் இ-வாடகை செயலி வழியாக பெறலாம். இதன்படி, ஒரு மீட்டர் தூரத்திற்கு சுழல் விசைத் துளை கருவிகள் (ரோட்டரி ட்ரில்லர்ஸ்) ரூ. 130, சிறு விசைத்துளை கருவிகள் (மினி ட்ரில்லர்ஸ்) ரூ. 70, கைத்துளை கருவிகள் (ஹேண்ட் போரிங் செட்ஸ்) ரூ. 30 எனவும் பாறை வெடி கருவிகள் (ராக் ப்ளாஸ்டிங் யூனிட்) ஒரு வெடிப்பிற்கு ரூ. 250, நிலத்தடி நீர் ஆய்வுக் கருவிகள் - ஒரு ஆய்விற்கு ரூ. 500, மின்னியல் ஆய்வுக் கருவிகள் - ஒரு துளை கிணறுக்கு ரூ. 1, 000, பெர்குஷன் துளைக் கருவிகள் ஒரு நாளைக்கு ரூ. 300 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இ-வாடகைக்கு வரவேற்பு

இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்ய விவசாயிகளிடம் வரவேற்பும் ஆர்வமும் உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை, உழவர் நலத்துறை செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் சி.சமயமூர்த்தி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இ. வாடகை ஆன் லைன் செயலி மூலம் குறைந்த கட்டணத்தில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் ஆர்வமாக முன்பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். குறிப்பாக, இ.வாடகை செயலி 08.01.2022 அன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது வரை 2, 548 விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் அரசுக்கு 1.59 கோடி ரூபாய் முன்பணமாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.'' என்றார்.

இ.வாடகைத் திட்டம்

பட மூலாதாரம், TN Agri Engineering Dept

ஆள்பற்றாக்குறையால், வேளாண்மை பணிகள் தடைபடாமலும் விரைந்தும் பணிகளைச் செய்ய இயந்திரமயமாக்கல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு குறைந்த கட்டணத்தில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு தருவதும், அதை ஆன் லைன் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே முன் பதிவு செய்வதும் பெரிதும் பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

கருவிகள் வாங்கவும் உதவி

25 லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் வாங்க அரசு மானியமாக 10 லட்ச ரூபாயும் விவசாயிகள் குழுவின் பங்களிப்பு நிதியாக 15 லட்சத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமங்களில் அமைக்கப்படும் குழுவிற்கு 10 லட்ச ரூபாய் வரை இயந்திரங்கள் வாங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு 8 லட்ச ரூபாய் அரசு மானியமும் 2 லட்ச ரூபாய் குழு பங்களிப்பு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இ.வாடகைத் திட்டம்

பட மூலாதாரம், CMOTamilNadu

படக்குறிப்பு, இ.வாடகை ஆன் லைன் செயலியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்

குறிப்பாக, உழவு கருவிகள், பவர் டில்லர், ட்ரெய்லர், அறுவடை இயந்திரம், நடவு இயந்திரம், உலர் இயந்திரம். வைக்கோல் கட்டும் இயந்திரம், களை வெட்டும் கருவிகள், கரும்பு தோகை, தென்னை ஓலைகள் துகளாக்கும் கருவி, உள்ளிட்டவை வாங்க மானியம் அளிக்கப்படுகின்றன. மேலும், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் இயந்திரங்கள் , கருவிகள் வாங்கும் திட்டத்தில், ஆதி திராடவிடர்களுக்கு 50 சதவீத மானியத்திலும், இதர பிரிவினர்களுக்கு 40 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் நிதியுதவியோடு நடைமுறைப்படுத்தப்படும் இயந்திரங்கள் வாங்குவதற்கான திட்டத்திற்கு agrimechinary.nic.in என்கிற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வயலூர் ராஜேந்திரன்
படக்குறிப்பு, வயலூர் ராஜேந்திரன்

இந்த திட்டத்தின் கீழ் வேளாண் கருவிகளைப் பயன்படுத்திய அனுபவம் எப்படி இருந்தது என்று ஒரு விவசாயியிடம் கேட்டோம். திருச்சி மாவட்டம் வயலூர் ராஜேந்திரன் என்ற விவசாயி, இது தொடர்பாக பிபிசி தமிழிடம் கூறுகையில், ''வேளாண்மைத் துறையின் இயந்திர வாடகை ரொம்ப நல்லத் திட்டம். நான் உட்பட பலர் எங்கள் பகுதியில் பயன்படுத்தியுள்ளோம். டிராக்டர் வாடகைக்கு எடுத்தேன். அதற்க்கு 1, 500 ரூபாய் செலவானது. ஆனால், இதை தனியாரிடம் வாடகைக்கு எடுத்திருந்தால், 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகியிருக்கும். இதேபோல் அறுவடை இயந்திரமும் வாடகைக்கு எடுத்தேன். வெளியில் 5 ஆயிரத்துக்கு மேல் செலவாகும் நிலையில், 3 ஆயிரத்திற்குள்தான் கொடுத்தோம். எனவே, பயனுள்ள இந்த திட்டம் தொடர வேண்டும்.''என்கிறார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: