திருவண்ணாமலையில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கம்பிகள்: விவசாயிகள் இழப்பீடு பெற்றது எப்படி?

- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு முழுவதும் பவர் கிரிட் கார்ப்பரேஷன், டான்டிரான்ஸ்கோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் உயர் அழுத்த மின் கம்பிகளை 14 மாவட்டங்களில் அமைக்கின்றன. இந்த மின் கம்பிகள், அதற்கான உயர் மின் கோபுரங்கள் விவசாயிகளின் விளை நிலங்களில் அமைகின்றன.
ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததால் அவர்களால் இழப்பீடு வாங்க முடியவில்லை, வாங்கிய சிலரும் சொற்ப அளவிலேயே இழப்பீடு பெற்றுள்ளனர். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் விழிப்போடு போராடிய காரணத்தால் அவர்களில் பலர் பல லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளனர் என்கிறார் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.பலராமன்.
இங்கே இழப்பீடு பெற்றது எப்படி? மற்ற இடங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய முறையில் இழப்பீடு பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று பிபிசி தமிழின் சார்பில் அவரிடம் கேட்டோம்.
சத்தீஸ்கர் மாநிலத்தையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் வகையில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனமும், தமிழ்நாட்டின் டான்டிரான்ஸ்கோ நிறுவனமும் உயர் அழுத்த மின் கம்பிகளை அமைக்கின்றன. தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் வழியாக இந்த மின் பாதைகள் செல்கின்றன. ஆங்காங்கே பிரம்மாண்டமான டவர்கள் விவசாயிகள் நிலங்களில் நிறுவப்பட்டு 60-70 மீட்டர் அகலத்துக்கு செல்லும் மின் கம்பிகளும் அவர்கள் நிலங்கள் வழியாகச் செல்கின்றன. டவர்களில் இருந்து பல நூறு அடிகள் நீளத்துக்கு கம்பி அடிக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் இது மாதிரி டவர்களையும், 60-70 மீட்டர் அகல மின் பாதைகளையும் அமைக்கத் தொடங்கினார்கள். முதலில் அவர்கள், விவசாயிகளை மிரட்டியும், போலீசை வைத்து அடக்குமுறை செய்தும் அவர்கள் நிலங்களில் நுழைந்து இந்த வேலைகளை மேற்கொண்டார்கள். முதலில் விவசாயிகளிடம் பயத்தை விளைவித்தார்கள். சிலருக்கு 10 ஆயிரம் - 20 ஆயிரம் என்று சொற்ப இழப்பீடுகளை மட்டுமே கொடுத்தார்கள்.
ஆனால், இப்படி மின் டவர்களை நிறுவும் இடங்களில் பயிர் ஏதும் செய்ய முடியாது. மின் பாதை போகும் இடங்களில் மரங்களை நடமுடியாது. இருக்கும் மரங்களும் வெட்டப்படும். கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளை பயன்படுத்துவதில் சிக்கல். காரணம் அதில் இருந்து குழாய்களை உயர்த்தினால், மேலே போகும் உயர் மின் பாதையில் இருந்து இன்டக்ஷன் ஆகி மின்சாரம் தாக்கும் ஆபத்து இருக்கிறது. கிணறுகள் தூர்ந்து போனால், அங்கே கிணறு தோண்டும் வண்டிகளை நிறுத்தி தூர் வார முடியாது, வெடி வைக்க முடியாது.
இதனால், கணிசமான அகலத்தில் நிலங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதுடன், இப்படி மின்பாதை செல்கிற நிலத் துண்டுகள் முழுவதுமே சந்தை மதிப்பையும் இழக்கின்றன.
இந்தப் பிரச்சனையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலையிட்டு விவசாயிகளை இணைத்துக் கொண்டு போராடியது.
அவர்கள், 1885 டெலிகிராப் ஆக்ட் என்ற தந்திச் சட்டத்தின் அடிப்படையில் நிலங்களில் நுழைந்து டவர், கம்பி அமைப்பதாக கூறினார்கள். நாங்கள் அந்த சட்டத்தை ஆராய்ந்து அந்த சட்டத்தின் சில பிரிவுகளே, நில உரிமையாளர் ஆட்சேபனை தெரிவித்தால், அவர்கள் வெளியேறிவிட வேண்டும் என்று கூறியதை சுட்டிக் காட்டினோம். போலீசிடமும் இதைக் காட்டி போராடினோம்.
பல இடங்களில் தங்கள் வாழ்வாதாரமே பறிபோவதை அறிந்த விவசாயிகள் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த டவர்களில் ஏறியும், கிணறுகளில் குதித்தும் போராடினார்கள்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, தென்னை மரத்துக்கு ரூ.32 ஆயிரம், தேக்கு மரத்துக்கு 20 ஆயிரம், கிணற்றுக்கு ரூ.4 லட்சம், ஆழ்துளைக் கிணறுகளுக்கு ரூ.2 லட்சம் என்று இழப்பீடு பெற்றுத் தந்தோம். கிணறு, ஆழ்துளை இழப்பீட்டுக்கு மாவட்ட ஆட்சியர் செயல்முறை பிறப்பிக்கப்பட்டது. இது போல வேறு மாவட்டங்களில் செய்யப்படவில்லை. கிணற்றுக்கு, ஆழ்துளைக் கிணற்றுக்கு இழப்பீடே இல்லை என்றுதான் கூறினார்கள். ஆனால், இன்றைக்கு ஆழ்துளைக் கிணறு தோண்ட வேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் அளவில் செலவாகும் என்பதை எடுத்துச் சொல்லி, வாதிட்டும் போராடியும்தான் இந்த இழப்பீட்டை பெற்றுத் தந்தோம்.

"10 ஆயிரம், 20 ஆயிரம் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட விவசாயிகளுக்கு 10 லட்சம் 20 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பீடு பெற்றுத் தந்திருக்கிறோம். இன்னமும் நியாயமான இழப்பீடு கிடைக்கப் போராடுகிறோம்.
ஏனெனில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஒப்பிடும்போது இது சொற்பமானதே. நிலத்தடி கேபிள்கள் மூலம்தான் மின்சாரத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஆனால், மாறாக உயர் மின் கோபுரங்கள் வழியாகத்தான் கொண்டு செல்வது எனில், விவசாயிகள் நிலத்தைப் பயன்படுத்துவதற்கு இழப்பீடு, வாடகை, லாபப் பங்கு ஆகியவற்றைத் தரவேண்டும் என்பதை எங்கள் கோரிக்கை" என்றார் பலராமன்.
விவசாயிகளின் இந்தப் போராட்டங்களின் போது சட்டரீதியிலான உதவிகளைச் செய்யும் அகில இந்திய வழக்குரைஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.அபிராமனிடம் விவசாயிகள் தங்கள் உரிமைகளை சட்டப்படி வெல்வதற்கான வாய்ப்புகளைப் பற்றி, அவர்கள் என்னவிதமான சட்டப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதைக் கேட்டோம்.
"1885 டெலிகிராஃப் ஆக்ட் படிதான் அவர்கள் நிலங்களில் நுழைந்து டவர், மின் பாதை அமைக்கிறார்கள். அதே சட்டம் விவசாயிகள் ஆட்சேபித்தால், வெளியேறிவிடவேண்டும் என்றும், கூறுகிறது. அதன் பிறகு அவர்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கவேண்டும். மாவட்ட ஆட்சியர் இருதரப்பையும் விசாரித்துவிட்டு, இழப்பீடு நிர்ணயம் செய்து, நுழைவு அனுமதி (என்டர் அப்பான் பர்மிஷன்) தந்த பிறகுதான் அவர்கள் நுழைய வேண்டும். இங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தினாலும், இந்த சட்ட விதிகளைக் காட்டி வாதிட்டதால்தான் இங்கே போராடிய விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. பல இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்படி அதிகாரிகளிடம், தங்களுக்கு உள்ள உரிமைகளை சுட்டிக் காட்டி வாதாடியும், போராடியும் இழப்பீடு பெறுவதே சிறந்த வழி. இதை விட்டு நீதிமன்றம் சென்றவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை," என்றார் அபிராமன்.
தவிர, எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தில், தங்கள் நிலத்தின் வழியாக எரிவாயுக் குழாய் செல்லும் விவசாயிகளுக்கு சந்தை மதிப்பைப் போல 10 மடங்கு மதிப்பிட்டு அதில் 10 சதவீதம் தரவேண்டும் என்றும், சில வகை நில உரிமையாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கவேண்டும், பயிர் இழப்பீடு வழங்க வேண்டும் என்பவை தமிழ்நாடு அரசு 2020ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை எண் 54 கூறுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த மின் பாதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருகிறோம் என்றார் அபிராமன்.
ஏற்கெனவே மின்பாதை அமைக்கப்பட்டுவிட்ட நிலத்தில் என்ன செய்வது என்று கேட்டபோது, அவர்கள் நீதிமன்றத்தைத்தான் நாடவேண்டும். அமைக்கும் முன்பே எனில், உள்ளே நுழைவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றார்.
திருவண்ணாமலை அருகே உள்ள சோமாசிபாடி கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்பவர் தங்கள் நிலத்தில் எப்படி மின்பாதை அமைக்கப்பட்டது என்பதையும், பிறகு எப்படி போராடி இழப்பீடு பெற்றார் என்பதையும் விளக்கினார்.

"சோமாசிபாடியில் எங்களுக்கு இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்தார். நான் மும்பையில் வேலைக்குப் போய் சம்பாதித்தேன். எங்கள் மாமனார், மாமியார் மட்டும் இங்கே இருந்தனர். எங்கள் நிலத்தில் 700 சதுர அடியில் வீடு கட்டியிருக்கிறோம். இந்த மின்சார லைன் வந்தபோது, எங்கள் மாமனாரை ஏமாற்றி நிலத்தில் டவர் அமைத்துவிட்டார்கள். இதில் ஒன்றரை ஏக்கர் நிலம் பாதிக்கிறது. வெறும் இரண்டு லட்சம் மட்டும் வங்கிக் கணக்கில் போட்டார்கள். இந்தி பேசும் ஆள்களை வைத்து வேலை செய்துவிட்டார்கள். அவர்களிடம் என்ன பேசுவது என தெரியவில்லை என்றார் மாமனார். கம்பி ஏற்றும் நேரத்தில் நான் வந்துவிட்டேன். நான் ஆட்சேபனை தெரிவித்தேன். ஆனால், அவர்கள் போலீசை அழைத்துவந்து வேலையைத் தொடங்க நினைத்தார்கள். நான் எதிர்த்துப் பேசியபோது என்னை போலீஸ்காரர் அவமானமாகப் பேசினார். விவசாய சங்கத்தவர்கள் வந்து அவர்களிடம் சண்டை போட்டு பிறகு மாவட்ட ஆட்சியரிடம் சென்று, கூட்டம் போட்டு இழப்பீடு வாங்கித் தந்தார்கள். முதலில் ஆழ்துளைக் கிணற்றுக்கு இழப்பீடு இல்லை என்றார்கள். ஆனால், ஆட்சியர் கூட்டத்துக்குப் பிறகு, ஆழ்துளைக் கிணறு, மரங்கள் எல்லாவற்றுக்கும் கணக்குப் போட்டு 23 லட்சம் ரூபாய் இழப்பீடு வந்தது. இன்னும் நிலத்துக்கான இழப்பீடு வரவில்லை என்றார்".
தங்கள் ஊரில் மற்ற விவசாயிகளுக்கும் 10 லட்சம் - 12 லட்சம் ரூபாய் என்ற அளவில் இழப்பீடு வந்துள்ளதாகவும், சங்கத்தின் உதவியோடும், போராட்டத்தின் மூலமாகவும்தான் இது சாத்தியமானதாக சொன்னார் அவர்.
மின் பாதை போகாத நிலங்கள் சென்ட் 35 ஆயிரம் ரூபாய் அளவில் விற்கும்போது மின்பாதை போவதால் தங்கள் நிலம் சொற்ப மதிப்பே போகும் என்றும் அவர் கூறினார்.
நாமக்கல் மாட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் பெருமாள், பிபிசி தமிழிடம் பேசும்போது, நிலத்துக்கடியில் கேபிள் பதித்து இந்த மின் பாதைகளை அமைக்கவேண்டும் என்பதுதான் தங்கள் கோரிக்கை என்றார். தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் அனுராதபுரத்தை இணைக்கும் வகையில் கடலடி மின்சாரக் கேபிள்கள் அமைக்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது நிலத்தடியில் கேபிள் அமைக்க முடியாதா என்று அவர் கேட்டார். தமிழ்நாட்டின் புகளூர் - கேரளத்தின் கொச்சி இடையே சிறிது தூரம் காட்டில் கேபிள்கள் அமைக்கப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பல்லடம், கயத்தாறு போன்ற இடங்களில் காற்றாலை மின்சார உற்பத்தி மையங்களில் இருந்து வரிசை வரிசையாக இப்படி சிறு சிறு மின் பாதைகளால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கின்றன, நிலத்தின் மதிப்பு மொத்தமாகப் பாதிக்கும் நிலையில், அந்த மின் கம்பி போகும் 210 அடிக்கு மட்டும் கணக்குப் போட்டு அதிலும் 20 சதவீதம் மட்டுமே தருவதால், விவசாயிகளுக்கு வெறும் 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்படுகின்றன என்றார். திருவண்ணாமலையில் அவர்கள் எப்படி மேம்பட்ட இழப்பீட்டை பெறுகிறார்கள் என்று கேட்டபோதும், போராட்டம் மூலமாகத்தான் என்று அவர் பதில் அளித்தார்.
பிற செய்திகள்:
- பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம்; இந்தியாவில் 2 நாள் தேசிய துக்கம்
- தெற்கு ரயில்வே புது வழித் தடங்களுக்கு ரூ.308 கோடி, வடக்கு ரயில்வேவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி: சு.வெ. புகார்
- போர்களை புதிய யுகத்துக்கு இட்டுச் செல்லும் ட்ரோன்கள்: ராணுவங்களுக்கு பயங்கர சவால்
- போலீஸ் பணியில் இருக்கும்போதே பிஎச்.டி. முடித்து உதவிப் பேராசிரியர் ஆன நெல்லை இளைஞர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்









