போலீஸ் பணியில் இருக்கும்போதே பிஎச்.டி. முடித்து உதவிப் பேராசிரியர் ஆன நெல்லை இளைஞர்

அரவிந்த் பெருமாள்.
படக்குறிப்பு, குடும்பத்தோடு, அரவிந்த் பெருமாள்.
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

திருநெல்வேலி மாவட்டம் மலையாளமேடு கிராமத்தின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் பெருமாள் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டே பி.எச்டி ஆய்வுப் பட்டம் முடித்து, உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.

குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் நிறுத்தி, போலீஸ் பணிக்கு சென்றவர், விடா முயற்சியால் விரும்பியபடி உதவிப் பேராசிரியர் பணியை, தான் படித்த கல்லூரியிலேயே கடந்த 3ம் தேதி தொடங்கியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே மலையாளமேடு கிராமத்தில் பரமசிவம் - சரோஜா தம்பதியின் மகன் அரவிந்த் பெருமாள்(34). இவர் கடந்த 11 ஆண்டுகளாக காவல் துறையில் பணிபுரிந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, அமைப்புசாரா தொழிலாளர்களின் பொருளாதார நிலை, ஊதியம் உள்ளிட்டவை குறித்து, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தொடர்ந்து, தான் பி.ஏ படித்த நாகர்கோவில் எஸ்.டி.ஹிந்து கலை, அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத்துறை உதவிப் பேராசிரியராக பிப்ரவரி 3ம் தேதி பணியைத் தொடங்கியுள்ளார்.

முன்னதாக 2.2.2022ம் தேதி காவல் துறை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். காவல் துறையில் பணிபுரிந்து கொண்டே பி.எச்டி பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியர் பணிக்கு சென்றவருக்கு அவர் கடைசியில் பணியாற்றிய சுத்தமல்லி காவல் நிலையத்தில், நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் மற்றும் உடன்பணி புரிந்த சக காவலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தி, உற்சாகமாக வழியனுப்பினர்.

"காவல்துறையில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் தொடர்ந்து அந்த உணர்வோடு பணியாற்றுவேன். காரணம் என்னுடைய முன்னேற்றத்தில் காவல் துறைக்கும் அதிகாரிகளுக்கும் முக்கிய பங்குள்ளது," என்கிறார் அரவிந்த் பெருமாள்.

குடும்ப சூழ்நிலையால் பாதியில் நின்ற படிப்பு

அரவிந்த் பெருமாள் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''ஒரு பெண் உட்பட 6 குழந்தைகள் கொண்ட என் பெற்றோருக்கு, நான் 4வது மகன். கல்லூரியில் படிக்கும் போதே, முனைவர் பட்டம் பெற வேண்டும், பேராசிரியராக வேண்டும் என்பதே என் லட்சியம். ஆகையால் முதுகலைப் பட்டத்தைத் தொடர்ந்து, எம்.பில் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால், குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தேன்.

அப்போது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவலர் தேர்வு அறிவிப்பு வந்தது. அதில் பங்கேற்று, 2011ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் வேலை கிடைத்து, பணியைத்தொடங்கினேன். பொருளாதார சூழ்நிலையால், படிப்பை பாதியில் விட்டாலும், பேராசிரியர் கனவு என்னை துரத்திக் கொண்டே இருந்தது. சென்னையில் இருந்து மணிமுத்தாறு பட்டாலியனுக்கு பணிமாறுதல் பெற்றேன். தமிழ்நாடு சிறப்புக் காவல் படையணியின் கமாண்டர் சின்னச்சாமி அவர்கள் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தி, உதவினார்.

அரவிந்த் பெருமாள்.
படக்குறிப்பு, அரவிந்த் பெருமாள்

இதையடுத்து, உயரதிகாரிகளின் அனுமதியோடு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் 2014ம் ஆண்டு பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வைத் தொடங்கினேன். விடுமுறை மற்றும் ஓய்வுக் காலத்தை முழுமையாகப் பயன்படுத்தி ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டேன்.

2019ம் ஆண்டு எனது ஆய்வை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தேன். கொரோனாவால் தாமதமாகி, கடந்த மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரிடம் முனைவர் பட்டத்தை பெற்றேன். காவல் துறையில் பணியில் சேர்ந்தாலும் நான் விரும்பியது போலவே முனைவர் பட்டம் பெற்றதும் நான் படித்த கல்லூரியிலேயே உதவிப் பேராசிரியராக பணி நியமனம் பெற்றதும் மனதிற்கு ரொம்ப நிறைவாக இருக்கிறது'' என்கிறார்.

தொடர் முயற்சியால் இலக்கை அடையலாம்

''நாம் என்னவாக வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை நோக்கி பயணித்தால், நிச்சயம் அதை அடைய முடியும். லட்சியத்தை நோக்கிய தொடர் பயணமும் விடா முயற்சியும் இருந்தால், எதுவும் நமக்கு தடையில்லை. நிச்சயம் ஒவ்வொருவரும் சாதிக்க முடியும். இதைத்தான் என்னுடைய முதல் வகுப்பில், மாணவர்களுக்கும் சொன்னேன். தொடர்ந்தும் சொல்லிக் கொடுப்பேன். சாதிக்கத் துடிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு வழிகாட்டுவேன்'' என்கிறார் அரவிந்த் பெருமாள்.

அரவிந்த் பெருமாள்.
படக்குறிப்பு, பிஎச்.டி. பட்டம் வாங்கும் அரவிந்த் பெருமாள்.

அரசு, தனியார் ஊழியர்கள் முனைவர் பட்ட வகுப்பில் சேரலாம்

அரவிந்த் பெருமாளின் ஆய்வு நெறியாளரும் மனோன்மணீயம் பல்கலைக்கழக சங்கரன்கோவில் கலை, அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் க.கிருபாகரன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''ஆர்வம் இருந்தால் பணிபுரிந்து கொண்டே முனைவர் பட்டம் வரை படிக்கலாம் என்பதற்கு இது உதாரணம். இதற்கான வாய்ப்பு அனைவருக்கும் உள்ளது.

தனியார், அரசுத் துறைகளில் பணியாற்றி வருவோர் பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பில் சேர எந்த தடையும் இல்லை. சேர்க்கைக்கு முன்னர் தான் பணிபுரியும் துறை அல்லது நிறுவனத்தின் அனுமதியை முறைப்படி பெற்று, அதற்கான சான்றிதழை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை சரிபார்த்து, பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளிக்கும். இதையடுத்து தனது ஆய்வை தொடங்கலாம். இப்போதும் பலர் இது போல் பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகின்றனர்.'' என்கிறார்.

காணொளிக் குறிப்பு, பதினேழு வயது மாணவின் அட்டகாச சாதனை - நம்பிக்கை பகிர்வு

பொருளாதார ஆய்வு முடிவு

மேலும், அமைப்புசார தொழிலாளர்களின் பொருளாதார நிலை மற்றும் ஊதியம் குறித்த அரவிந்த் பெருமாளின் ஆய்வில், "தமிழ்நாட்டில் விவசாயப் பணிகளில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பின்மையால், அடிக்கடி ஏற்படும் இடப் பெயர்வுகளால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. உரிய ஊதியம் கிடைப்பதில்லை.

ஒப்பீட்டளவில், தமிழ்நாட்டை விட கேரளாவில் கூடுதலாகவும் கர்நாடகத்தில் குறைவான ஊதியம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் நலவாரியம் உள்ளிட்டவை உள்ளன. ஆனால், அனைவரும் நலவாரியங்களில் உறுப்பினராவதில்லை. அனைவரும் உறுப்பினராக பதிவு செய்து, ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும்'' என்பனவற்றை தனது ஆய்வு முடிவில் பதிவு செய்துள்ளார்.

அரவிந்த் பெருமாளின் மனைவி பேச்சியம்மாளும் முனைவர் பட்டம் பெற்று, திருநெல்வேலியில் ஒரு தனியார் கல்லூரி சுயநிதிப் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணியில் உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: