நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சி - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

கோயம்புத்தூர் மாநகர மன்றம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக கோவை இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது. தமிழகத்தில் 2016-ல் இருந்து ஒத்தி வைக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குபதிவு பிப்ரவரி 19, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும் மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இம்முறை தமிழ்நாடு முழுவதும் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவி முதல் முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 100 வார்டுகள் அடங்கிய கோவை மாநகராட்சியில் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சி, 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோவை நகராட்சி 1866-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கோவை மாநகர் மன்றமாக செயல்படும் விக்டோரியா டவுன் ஹால் 1892-ம் ஆண்டு கட்டப்பட்டது.

கடந்த 1981-ம் ஆண்டு கோவை மற்றும் சிங்கநல்லூர் நகராட்சிகளை இணைத்து கோவை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1996-ம் ஆண்டு முதல் மேயர் தேர்தல் நடைபெற்றது. தற்போது வரை நான்கு முறை உள்ளாட்சித் தேர்தலும் ஐந்து முறை மேயர் தேர்தலும் நடைபெற்றுள்ளது. கோவை மேயர் பதவிக்கு நான்கு முறை நேரடியாகவும் ஒருமுறை மறைமுகமாகவும் தேர்தல் நடைபெற்றுள்ளன.

தற்போது வரை கோவை மாநகராட்சி

1996-ம் ஆண்டு கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு நடைபெற்ற முதல் நேரடித் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸின் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்று கோவை மாநகராட்சியின் முதல் மேயர் ஆனார். அதன் பின்னர் 2001-ம் ஆண்டு அதிமுகவின் மலரவன் வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் 2006-ம் ஆண்டு மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் அக்கட்சியைச் சேர்ந்த ஆர்.வெங்கடாசலம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2011-ம் ஆண்டு மீண்டும் நேரடி தேர்தல் நடைபெற்றபோது அதிமுகவின் செ.மா.வேலுச்சாமி வெற்றி பெற்று மேயரானார். அப்போது கோவை மாநகராட்சியில் 78 வார்டுகளை அதிமுக கைப்பற்றியிருந்தது.

செ.மா.வேலுச்சாமி தன்னுடைய பதவிக்காலம் முடியும் முன்பே 2014-ம் ஆண்டு ராஜினாமா செய்ததால் மேயர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவின் கணபதி பி.ராஜ்குமார் வென்று கோவையின் ஐந்தாவது மேயரானார்.

உள்ளாட்சித் தேர்தல் கோயம்புத்தூர் கள நிலவரம்

கோவையில் தற்போது வரை அதிமுக மூன்று முறையும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறையும், காங்கிரஸ் ஒரு முறையும் மேயர் பதவியை வகித்துள்ளன. திமுக இரண்டு முறையும் கூட்டணி கட்சிகளுக்கு கோவை மேயர் பதவியை ஒதுக்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருந்துவந்துள்ளது. 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருந்த நிலையில் த.மா.கா கோவை மேயர் தேர்தலில் வென்றிருந்தது.

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்றிருந்த நிலையில் அப்போது நடைபெற்ற மேயர் தேர்தலில் அதிமுக வென்றது. 2006-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி வென்றது. இம்முறை மறைமுக தேர்தல் நடைபெற்றதால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக வென்றது. இந்த முறை மேயர் பதவிக்கு மீண்டும் நேரடித் தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிமுக வென்றது.

உள்ளாட்சியின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. இம்முறை திமுக கூட்டணியாகவும், அதிமுக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் இதர கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு 26 இடங்களை ஒதுக்கியுள்ள நிலையில் 74 இடங்களில் போட்டியிடுகின்றது. அதிமுக அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடுகின்றது.

திமுக - அதிமுக

கோவை மாவட்டத்தில் மொத்தம் பத்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவையில் சிங்காநல்லூர் தவிர்த்து மற்ற ஒன்பது தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பத்து இடங்களையும் கைப்பற்றியிருந்தது. கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி இரண்டாம் இடம் பிடித்திருந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடம் பிடித்திருந்தது.

உள்ளாட்சித் தேர்தல் கோயம்புத்தூர் கள நிலவரம்

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக 43%, திமுக 37%, மக்கள் நீதி மய்யம் 14% வாக்குகளைப் பெற்றுள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி தோல்வியுற்ற இடங்களில் மக்கள் நீதி மய்யம் தான் தங்களின் வெற்றி வாய்ப்பை பறித்துவிட்டதாக திமுக தலைவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் தற்போது திமுகவில் இணைந்திருப்பதை தங்களுக்குச் சாதகமாகவே பார்க்கின்றனர் திமுகவினர்.

கோவை மாநகராட்சி ஆனதிலிருந்து இரண்டு முறை திமுகவின் கூட்டணி கட்சிகள் தான் மேயர் பதவியை அலங்கரித்துள்ளதால் இந்த முறை வென்றால் மேயர் பதவியை திமுகவே வைத்துக் கொள்ளும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவையில் தன்னுடைய செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள அதிமுகவும், அதிமுகவின் ஆதிக்கத்தை தகர்த்து தடம் பதித்துவிட வேண்டும் என திமுகவும் தேர்தல் களத்தைச் சந்திக்கின்றன.

கோவை மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் பிப்ரவரி 22-ம் தேதி தெரிந்துவிடும். கோவையின் ஆறாவது மேயராகவும் முதல் பெண் மேயராகவும் யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது மார்ச் 4-ம் தேதி தெரிந்துவிடும்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: