ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசி வருவதன் பின்னணி என்ன?

எடப்பாடி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

`ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அமலுக்கு வரும்போது அ.தி.மு.க ஆட்சிக்கு வருவது உறுதி' என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவது, விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிலும், `27 அமாவாசைகள்தான் தி.மு.க ஆட்சியில் இருக்கும்' எனவும் அவர் பேசியுள்ளார். `பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலேயே இதைப் பற்றிப் பேசாதபோது, எடப்பாடிக்கு மட்டும் பிரதமர் தனியாக கடிதம் எழுதியுள்ளாரா?' என தி.மு.க கேள்வியெழுப்புகிறது.

எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?

தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.கவும் அ.தி.மு.கவும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமையன்று கரூரில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, `தி.மு.கவின் கைப்பாவையாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. தி.மு.க ஆட்சிக்கும் அமைச்சர்களுக்கும் ஏவல்துறையாக காவல்துறை மாறிவிட்டது. எனவே, நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்' என்றார். மேலும், ` மேற்கு வங்கத்தைப் போல தமிழ்நாட்டிலும் சட்டமன்றத்தை முடக்க நேரிடும்' எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று சேலம் மாவட்டத்தில் ஓமலூர், கருப்பூர், காடையாம்பாட்டி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி, `நேர்வழியில் தி.மு.க வெற்றிபெற்றதாக சரித்திரம் இல்லை. ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தலில் தில்லுமுல்லு செய்து முறைகேடாக வெற்றி பெற முயன்றால் அ.தி.மு.க அமைதியாக இருக்காது. தி.மு.க தொடர்ந்து தவறு செய்தால் தமிழக சட்டமன்றத்தை முடக்கும் நிலை ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்' என்றார். இதே வரிசையில் திருச்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், `நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடக்கும். அதற்கான அச்சாரமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்' என்றார்.

அதேநேரம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. அ.தி.மு.கவின் பல கூட்டங்களில் இதே வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். கடந்த 2021 டிசம்பர் 17 ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தி.மு.க அரசைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், `இன்னும் இரண்டரை ஆண்டுகள்தான் தி.மு.க ஆட்சி இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என பிரதமர் கூறியிருக்கிறார். அதனை ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும்' என்றார்.

'எடப்பாடியிடம் பிரதமர் சொன்னாரா?'

அ.தி.மு.கவினரின் பேச்சு குறித்து ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைச்சர் சேகர்பாபு, ` எடப்பாடியின் பகல் கனவு பலிக்காது. தனது ஆசையை மத்திய அரசுக்கு பேச்சின் மூலம் அவர் தெரியப்படுத்தியுள்ளார். அவ்வாறு முடக்கினால்தான் அடுத்த தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி என அ.தி.மு.க எச்சரிக்கை விடுத்துள்ளது' என்றார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி, ``அ.தி.மு.க தொண்டர்கள் சோர்ந்து கிடப்பதால், `தேர்தல் வரப் போகிறது' என்று கூறி அவர்களுக்கு டானிக் கொடுக்க நினைக்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலேயே இதைப் பற்றிப் பேசாதபோது, எடப்பாடிக்கு மட்டும் பிரதமர் தனியாக கடிதம் எழுதியுள்ளாரா எனத் தெரியவில்லை. பிரதமருக்கும் எடப்பாடிக்கும் மட்டும்தான் நேரடித் தொடர்பு உள்ளதுபோலவும் பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்களோடு பிரதமருக்குத் தொடர்பில்லை என எண்ணத் தோன்றுகிறது. காரணம், அங்குள்ள முதல்வர்கள்கூட இதைப் பற்றிப் பேசவில்லை'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``இன்னும் 27 மாதங்களில் தேர்தல் வரும் என்றால் உத்தரபிரதேசத்தில் ஏன் தேர்தல் நடக்கிறது? இந்த ஆட்சியின் மீது எந்தக் குற்றச்சாட்டையும் அவர்களால் கூற முடியவில்லை. அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவில் சேரக் கூடியவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அ.தி.மு.கவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பலரும் தி.மு.க பக்கம் வந்துவிட்டனர். அதனால்தான் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது என்றுகூறி அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஊக்கம் கொடுக்க விரும்புகிறார்." என்கிறார்.

மேலும், ``நேரத்துக்கு ஏற்றார்போல அ.தி.மு.கவினர் பேசுவார்கள். சசிகலாவையே `சின்னம்மா', `புனிதத்தாய்' என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் முதல்வர் பதவியில் அமர்ந்த பத்து நாளிலேயே சசிகலாவை எடப்பாடி விமர்சித்தார்," என்கிறார்.

எடப்பாடி சொன்னது சரி, ஆனால்?

`` எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் உள்ளர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் என்ற திட்டம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. பிரதமரும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இப்படியொரு நடைமுறைதான் இருந்தது. சட்டசபைகளைக் கலைப்பது போன்ற காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் ஆறு மாதங்களுக்க ஒருமுறை இந்தநாட்டில் எதாவது ஓர் இடத்தில் தேர்தல் நடக்கிறது. அதனால் மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு போய் சேர்க்க முடியாதது, பொருளாதார இழப்புகள், வளர்ச்சி தடைபடுதல் ஆகியவற்றைக் கணக்கில் வைத்துத்தான் ஏற்கெனவே உள்ளதுபோல ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்கிறோம். அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கலாம்'' என்கிறார், தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

narayanan tirupathi

மேலும், ``27 அமாவாசைகள் என்றால் 2024 ஆம் ஆண்டுக்குள் ஒரே தேர்தல் நடக்குமா என்பது நடக்காத விஷயம்தான். காரணம், உ.பியில் இப்போதுதான் தேர்தல் நடக்கிறது. எனவே நடக்காது என்று சொல்லலாம். ஆனால், அதற்கான முயற்சியை தொடர்ந்து எடுத்து வருகிறோம். எடப்பாடி சொன்னது சரி, அதற்கான நேரம் சரியா எனத் தெரியாது'' என்கிறார்.

``எடப்பாடி பழனிசாமியின் பேச்சை எவ்வாறு எடுத்துக் கொள்வது?'' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``இது மத்திய அரசின் கனவுத் திட்டமாக இருந்து வருகிறது. 2014 முதல் 2019 வரையில் இதைப் பற்றிப் பேசி வருகின்றனர். அவ்வாறு வந்தால் அரசியலைத் தாண்டி பொருளாரரீதியில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு தேர்தலுக்கும் 30 முதல் 40 ஆயிரம் கோடிகள் செலவிடப்படுகின்றன. அவை மிச்சப்படுத்தப்படும். மத்திய, மாநில அரசுகளும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரேநேரத்தில் மாறுவதற்கான சூழல்கள் இருக்கும். மக்கள் நலத்திட்டங்களும் பரவலாக நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். மக்களிடமும் ஒரே மனநிலை உருவாகும். சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் அ.தி.மு.க இதனை வரவேற்கிறது'' என்கிறார்.

``2018 ஜூலை மாதம் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு அ.தி.மு.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதே?'' என்றோம். ``2004 முதல் பல்வேறு காலகட்டங்களில் விறுப்பு, வெறுப்பு, சாதகம், பாதகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டம் பேசப்பட்டு வந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருந்தது. 2018 ஆம் ஆண்டு இருந்த சூழல் வேறு, தற்போதுள்ள சூழல் என்பது வேறு. இது ஏற்கெனவே பிரதமர் கூறியதுதான். இது 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியும் கூறிய முழக்கம்தான். அரசியல் காரணங்களுக்காக அது நடக்காமல் போய்விட்டது. தற்போது அவை அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது'' என்கிறார்.

தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏன்?

இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு வரையில் ஒரே மாதிரிதான் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வந்தன. அதன்பிறகு சில மாநிலங்களில் ஆட்சிக் கலைப்பு நடைபெற்றதால் தேர்தல் நடக்கும் காலகட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, `ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் தேர்தல் செலவுகள் குறையும்' என்பது பா.ஜ.க முன்வைக்கும் காரணமாக உள்ளது. மேலும், `அடிக்கடி தேர்தல் வருவதை தவிர்த்தால் நிர்வாகம், மக்கள் நலத் திட்டங்கள் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்' என்ற காரணமும் முன்வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி பேசும்போது, `ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தக் காலகட்டத்துக்கான தேவை. நாடாளுமன்றத் தேர்தல், அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் என அனைத்துக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் வேண்டும். இதற்கென தனித்தனியாக பட்டியல் என்பது நேரத்தையும் பொருளாதாரத்தையும் வீணடிக்கும் செயல் ஆகும்' என்றார்.

இந்தத் திட்டத்துக்கு பல்வேறு காலகட்டங்களில் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டத்தை சட்ட ஆணையம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டால் பல்வேறு மாநிலங்களில் சட்டசபையின் பதவிக் காலம் குறையும் என்பதும் ஒரு காரணமாக முன்வைக்கப்பட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் எனப் பேசி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: