தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் திமுகவுக்கு சாதகமான அலையா, சவாலான நிலையா?

உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் திமுகவுக்கு சாதகமான அலையா அல்லது சவாலான நிலையா?
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோவையின் கள நிலவரத்தை பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டம் அதிமுகவின் பலம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 இடங்களையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாதது திமுகவுக்கு மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் கோவை மாவட்டத்திற்குத்தான் வருகை தந்தார்.

சட்டமன்றத்திலும் ''திமுக கோவை மாவட்டத்தை புறக்கணிக்கவில்லை, எங்களுக்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் அளவுக்கும், வாக்களிக்காதவர்கள் திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படும் அளவுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

கோவைக்கு வந்திருந்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், ''கோவை மக்கள் ஏமாற்றிவிட்டனர். நான்கு, ஐந்து இடங்களிலாவது வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்,'' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்தது. உள்ளாட்சித் தேர்தலுக்கும் திமுக கூட்டணி தொடர்கிற நிலையில் அதிமுக, பாஜக தனித்து களம் காண்கின்றன.

முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக தான் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்கிற நிலையில் கோவை மாவட்டத்தில்தான் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

கோவையை வெல்ல முடியவில்லை என்ற கருத்தை முறியடிக்க வேண்டும் என திமுகவும், தன்னுடைய செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என அதிமுகவும் உள்ளாட்சித் தேர்தல் களம் காண்கின்றன.

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் கோவை திமுக நிர்வாகிகள் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் திமுகவுக்கு சாதகமான அலையா அல்லது சவாலான நிலையா?

பட மூலாதாரம், DMK Coimbatore/Twitter

திமுகவின் வெற்றி வாய்ப்புகள் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ந.கார்த்திக், ''கோவையை உண்மையில் புறக்கணித்தது அதிமுகதான். கோவை மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.370 கோடி செலவில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை 10 ஆண்டுகள் அதிமுக கிடப்பில் போட்டது. பாதாள சாக்கடை என்பது தற்போது கோவையில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. திமுக அரசுதான் அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

24 மணி நேரமும் குடிநீர் என்கிற திட்டத்தையும் முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தினோம். ஆனால் அதை அதிமுக செயல்படுத்தவில்லை. மாறாக கடந்த 2018-ம் ஆண்டு இந்தத் திட்டத்தை மதிப்பை உயர்த்தி அதையும் சூயஸ் என்கிற பிரெஞ்சு நிறுவனத்திற்கு வழங்கிவிட்டனர். கோவையில் சாலை மற்றும் மேம்பால பணிகள் எல்லாம் தொடங்கிய நிலையிலே உள்ளன. அதிமுக அனைத்து ஒப்பந்தங்களிலும் கமிஷன் பார்த்தைத் தவிர எதுவும் செய்யவில்லை. நிறைவு பெறாத சாலை மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க ரூ.200 கோடி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா முதலாம் அலையின் போது கோவை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிமுக அரசு அப்போது சரிவர கையாளவில்லை. கொரோனா இரண்டாம் அலையை ஒரு மாதத்திற்குள் கட்டுப்படுத்தி தொழில்களையும் முடக்காமல் பார்த்துக் கொண்டது திமுக அரசு. புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில் மற்றும் ஜவுளித் துறையினருக்கு மாநில அரசு செய்து தரக்கூடிய அனைத்து உதவிகளையும் செய்து தந்துள்ளோம்.

வேலை தேடும் இளைஞர்களுக்காக கோவை முழுவதும் பல தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளோம். கோவை ஒரு தொழில் நகரம், மற்ற ஊர்களை விட இங்கு வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் பலருக்கும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பலன் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் முடிவில் தெரியும்`என்றார்.

உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் திமுகவுக்கு சாதகமான அலையா அல்லது சவாலான நிலையா?

பட மூலாதாரம், DMK Coimbatore/Twitter

திமுகவினருக்குள் அதிருப்தி நிலவுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தவர், ''கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணிக்குள் குழப்பம் என செய்திகள் வந்தது. ஆனால் இறுதியில் கூட்டணி வலுவாக அமைத்து வெற்றியும் பெற்றோம். பெரிய கூட்டணி அமைத்து அதனை காப்பது சவாலான பணி. கூட்டணிகளுக்காக ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் சில கூட்டணி கட்சியினர், சொந்த கட்சியினரும் அதிருப்தியடைவது இயல்பது தான். அதை சிலர் வெளிப்படுத்தியிருப்பார்கள். அது கட்சியின் ஜனநாயகத்தைத் தான் காட்டுகிறது. ஆனால் அதிருப்தியடைந்தவர்களும் சேர்ந்து தான் தேர்தல் பணிகளைச் செய்து வருகிறோம்,'' என்றார்.

அதிமுக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன், ''கோவை மாவட்டத்தில் திமுகவிற்கு ஆள் இல்லாமல் தான் கரூரிலிருந்து அமைச்சரை வரவைத்துள்ளார்கள். கோவை எப்போதுமே அதிமுகவின் வசம்தான். கோவை மாநகராட்சியில் எஞ்சியுள்ள சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதைத் தவிர கடந்த எட்டு மாதங்களில் கோவை மாவட்டத்திற்கென்று திமுக அரசு எந்தத் திட்டத்தையும் பிரத்யேகமாக அறிவிக்கவில்லை.

''கோவை மாவட்டத்தில் பரவலாக தண்ணீர் பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொண்டது அதிமுக. ஆனால் சிறுவாணி தண்ணீரைக் கூட பெற கேரள அரசிடமிருந்து பெற முடியாமல் திமுக திணறி வருகிறது. பொங்கல் தொகுப்பில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதை அரசே ஒப்புக் கொண்டது. திமுக அரசின் தோல்வியை மறைக்க தான் அதிமுக எதுவும் செய்யவில்லை எனப் பழி போட்டு வருகிறார்கள்,'' என்றார்.

''உள்ளாட்சித் தேர்தல் களம் திமுகவுக்கு சவாலாக இருப்பதாக தோன்றினாலும் அவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் இருக்கின்றன,'' என்கிறார் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான இரா.முருகவேள்.

இதற்கான காரணத்தை பிபிசி தமிழிடம் விளக்கியவர், ''கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக களத்தில் பெரிய அளவில் தெரியவில்லை. ஆனால் தேர்தலுக்குப் பிறகு திமுகவினர் களத்தில் திறம்பட பணியாற்றியுள்ளனர். செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு திமுகவினரை எளிதில் அணுக முடிவதாக மக்கள் உணர்கின்றனர். இந்த நிலை முன்பு இல்லை. பொறுப்பு அமைச்சர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தேர்தலில் பெரிய தாக்கம் செலுத்தாது. தாங்கள் தேர்வு செய்யும் பிரதிநிதிகளை எளிதில் அணுக முடிகிறதா என்பதுதான் மக்களுக்கு முக்கியம். அந்த விதத்தில் திமுகவினரை எளிதில் அணுக முடியும் என்பது களத்தில் தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் திமுகவுக்கு சாதகமான அலையா அல்லது சவாலான நிலையா?

பட மூலாதாரம், DMK Coimbatore/Twitter

''கோவை அதிமுகவுக்கு வலுவான பகுதி என்பது உண்மைதான். ஆனால் அது வலுவான தலைமை இருந்தவரை தான். தற்போதைய இரட்டைத் தலைமை அதிமுகவுக்கு சாதகமாக இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அதிமுக சட்டமன்றத் தேர்தலில் வென்றாலும் அந்த அதீத நம்பிக்கையிலே உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்கின்றனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி போல கோவை திமுகவில் வலுவான தலைவர்கள் இல்லை, அது அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் எனப்படுகிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் என்பது தலைமையைத் தாண்டி வேட்பாளர்களை மையப்படுத்தியது.''

சட்டமன்றத் தேர்தலிலும் திமுக - அதிமுக கூட்டணிக்கு வாக்கு சதவிகிதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் என்பதால் 50, 100 வாக்குகள் கூட முக்கியமானது. உள்ளாட்சி முடிவுகள் பொதுவாகவே ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பது வழக்கம். திமுக களத்தில் இருப்பதை நன்கு பதிவு செய்துள்ளனர். அது வாக்குகளாக மாறுகிறதா என்பதை முடிவுகள் உணர்த்திவிடும்.

அதுமட்டுமில்லாமல் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக தலைமை கோவை மாவட்டத்திற்கு செலுத்துகிற அளவிற்கான முக்கியத்துவத்தை அதிமுக தலைமை தரவில்லை. அதுவும் திமுகவுக்கு சாதகமாக அமையும்.` என்றார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: