தமிழர் வரலாறு: தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் புதிதாக அகழாய்வு - வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை

பட மூலாதாரம், DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMIL NADU
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
கீழடி உள்பட நான்கு இடங்களில் தொடர் அகழாய்வுப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார் என்கிறது தினமணி செய்தி.
தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கிணங்க அகழாய்வுப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வழியாக தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் நான்கு இடங்களில் வெவ்வேறு கட்டங்களாக ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழு கட்டங்களும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இரண்டு கட்டங்களும், அரியலூா் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் முதல் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், கீழடியில் எட்டாம் கட்டமாகவும், சிவகளையில் மூன்றாம் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகளும் தொடக்கப்பட உள்ளன.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, தருமபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகள் முதல் கட்டமாகத் தொடங்கப்பட உள்ளன.
ஏழு தொல்லியல் அகழாய்வுகளுடன், இரண்டு கள ஆய்வுகள், சங்ககால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்கள ஆய்வுப் பணிகளும் செய்யப்பட உள்ளன. இதற்கென ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறது அந்தச் செய்தி.
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: பெங்களூருவில் இன்று தொடக்கம்

பட மூலாதாரம், Bcci / ipl
மிகுந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ஏலம் நடக்கும்.
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது.
ஏலப்பட்டியலில் 370 இந்தியர், 220 வெளிநாட்டவர் என்று மொத்தம் 590 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 229 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள் என்கிறது அந்தச் செய்தி.
கிரிப்டோகரன்சி தடை? - நிர்மலா சீதாராமன் பதில்

இந்திய அரசு கிரிப்டோகரன்சி மூலம் வரும் லாபங்களுக்கு வரி விதிக்கும் தமது உரிமையைப் பயன்படுத்தி இருப்பதாகவும் கிரிப்டோகரன்சி தடை செய்வது அல்லது தடை செய்யாமல் இருப்பது குறித்த முடிவு ஆலோசனைகளுக்கு பிறகு எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கிரிப்டோகரன்சியை சட்டபூர்வமாகத் தடை செய்யவோ இப்போதைய சூழ்நிலையில் நான் எதையும் செய்யவில்லை என்று வெள்ளியன்று நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாயா வெர்மா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:
- ஹிஜாப், புர்கா தடை: இஸ்லாமிய பெண்களின் ஆடைகளுக்கு தடை உள்ள நாடுகள்
- அம்பானி Vs அதானி: ஆசிய பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் போட்டி போடும் கெளதம் அதானியின் கதை
- இறந்த மகனின் விந்து வேண்டும் என்று கேட்டுப் போராடும் பெற்றோர் - என்ன சிக்கல்?
- அரியலூர் மாணவி தற்கொலை, தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













