தமிழர் வரலாறு: கீழடி அகழாய்வு செய்த முக்கிய கண்டுபிடிப்பு என்ன? #தமிழர்_பெருமை

கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

பட மூலாதாரம், Tamil Nadu State Archeology Department

படக்குறிப்பு, கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் 11வது கட்டுரை.)

மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த கட்டங்கள், தொல்பொருட்கள் ஆகியவை, தமிழ்நாட்டின் வரலாற்றுத் துவக்கம் குறித்தும் தமிழர்களின் வாழ்வு குறித்தும் முன்பிருந்த பல கருத்துகளை மாற்றியமைத்தன. தமிழ்நாட்டின், தமிழர்களின் பெருமைக்குரிய புள்ளிகளில் ஒன்றாக கீழடி உருவெடுத்திருக்கிறது.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாத நிலையில், அங்கு அகழ்வாய்வைத் தொடர மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. அதற்குப் பிறகு தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

கட்டுமான அமைப்பு

பட மூலாதாரம், sivaganga.nic.in

அந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டபோது, தமிழ்நாட்டு வரலாற்றின் பழமை குறித்த முந்தைய கருத்துகள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாயின. தவிர, தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் முதல் முறையாக பழங்காலக் கட்டடத் தொகுதிகளும் அகழ்தெடுக்கப்பட்டன.

கீழடி நாகரீகத்தின் காலம் என்ன?

கீழடியில் கிடைத்த 6 பொருட்கள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (Accelerated mass spectometry) ஆய்வுக்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் லேப்பிற்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, அந்தப் பொருட்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டது.

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என்ற முடிவுக்கு மாநிலத் தொல்லியல் துறை வந்தடைந்தது.

Tamil Nadu State Department of Archaeology keezhadi archaeological site

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் தொடங்குவதாக கருதப்பட்டுவந்தது. ஆகவே கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல, இரண்டாவது நகர நாகரீகம் இங்கு நிகழவில்லை எனக் கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்தடைந்தது. கங்கைச் சமவெளியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர நாகரீகம் உருப்பெற்றது.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் ஒரு பானை ஓட்டில் எழுத்துகளை வைத்து தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே வழக்கத்தில் இருந்திருக்கலாம்; ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருக்கக்கூடும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்தது.

இந்தியாவில் கிடைத்த வரிவடிவங்களில் சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்களே மிகப் பழமையானவை. சிந்துவெளி பண்பாடு மறைந்து தமிழ் பிராமி எழுத்து தோன்றியதற்கு இடையில் கீறல் வடிவில் ஒரு வரிவடிவம் இருந்ததாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். சிந்து சமவெளி எழுத்துகளைப் போலவே இவற்றின் பொருளும் இதுவரை முழுமையாகப் புரியவில்லை.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொற்கை, கொடுமணல், கரூர், தேரிருவேலி, பேரூர் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் இந்த வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாம போன்ற இடங்களிலும் இது போன்ற குறீயிடுகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில், கீழடி அகழாய்விலும் 1001 ஓடுகள் இத்தகைய வரி வடிவங்களுடன் கிடைத்தன.

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

மேலும், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்தன. இவற்றில் குவிரன், ஆத(ன்) உள்ளிட்ட பெயர்களும் முழுமையடையாத எழுத்துகளும் கிடைத்தன. இதில் ஆதன் என்ற பெயர், அதன் என்று குறிப்பிடப்படுகிறது. முற்கால தமிழ் பிராமியில், நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையவையாகக் கருதப்படுகின்றன.

கீழடியின் முக்கியத்துவம் என்ன?

தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் சுட்ட செங்கல்களால் ஆன கட்டடங்கள் முதன் முதலில் வெளிப்பட்டுள்ளது.

கங்கைச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் (சிந்து சமவெளி நாகரீகம் முதலாம் நகர நாகரீகம்) கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. ஆனால், அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழகத்தில் எந்த நகர நாகரீகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததில்லை. முதன் முதலாக கீழடியில் அதே காலகட்டத்தில் கட்டடத் தொகுதிகள் கிடைத்திருப்பதால், நகர நாகரீகத்திற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆகவே, இரண்டாம் நகர நாகரீக காலத்தில் தமிழகத்திலும் நகர நாகரீகம் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கீழடி வெளிப்படுத்தியது.

சிந்துச் சமவெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆர். பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வறிஞர்கள், சிந்துசமவெளிக்கும் கீழடிக்கும் இடையில் தொடர்பு இருக்கக்கூடுமென்றே கருதுகிறார்கள்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் எந்தவொரு தொல்லியல் களத்தையும்விட கீழடி, பல்வேறு செய்திகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

கீழடி எங்குள்ளது?

மதுரை நகரிலிருந்து தென்கிழக்கு திசையில் 13 கி.மீ. தூரத்தில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இந்த இடத்திலிருந்து வடக்கில் இரண்டு கி.மீ. தூரத்தில் வைகை நதி ஓடுகிறது. இந்த ஊருக்குக் கிழக்கே மணலூரும் தென்கிழக்கில் அகரம் என்ற ஊரும் மேற்கில் கொந்தகையும் அமைந்திருக்கின்றன.

கீழடியில் உள்ள தென்னந்தோப்பில்தான் முதன் முதலில் அகழ்வாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில் உள்ள இந்திய அகழ்வாய்வுப் பிரிவு 2014 - 15, 2015- 16 ஆகிய ஆண்டுகளில் ஆகழ்வாய்வுகளை மேற்கொண்டது. இதற்குப் பிறகு தமிழ்நாடு அரசு 2017 -18ல் அகழாய்வுப் பணிகளைத் துவங்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: