ஆசிரியர்கள் தினம்: கல்வித்துறையில் புதுமை செய்யும் தமிழக பெண் தொழில்முனைவோர்

பட மூலாதாரம், BBC
- எழுதியவர், ஐஸ்வர்யா ரவிசங்கர்
- பதவி, பிபிசி தமிழ்
ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றத்திலும் ஏணியாய் இருந்து அவர்களை ஊக்குவிக்கும் சிறப்பான பணியைச் செய்யும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக ஆசிரியர்கள் தினம், இந்தியா முழுவதும் இன்று (செப்டம்பர் 5) கொண்டாடப்படுகிறது.
வாழ்வையே மாற்றியமைக்கும் கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்யும் முயற்சியாக கொள்கை, கற்பித்தல் மற்றும் சமூக-பொருளாதார சூழல் ஆகியவற்றை அடிப்படையாக் கொண்டு ஐம்பது நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, உலகளாவிய எதிர்காலத்திற்கான கல்வி பட்டியலில் இந்தியா 35-ஆவது இடம் பிடித்துள்ளது.
இதை நடத்திய இடான் ப்ரைஸ் என்ற அமைப்பு மாணவர்களுக்கு அவசியமான திறன்களில் புதுமையாக சிந்தித்தல், சிக்கல்களை தீர்ப்பது, தலைமைப் பண்பு, ஒத்துழைப்பு, படைப்பாற்றல், தொழில்நுட்ப திறன்கள் ஆகியவை முக்கியமானவை என்று தங்கள் ஆய்வில் தெரியவந்ததாக கூறியுள்ளது.
சமீப நாட்களாக புதிய கல்விக்கொள்கை, கொரோனா பொது முடக்கம் காரணமாக ஆன்லைன் வழிக்கல்வி, தேர்வுகள் நடத்தலாமா வேண்டாமா போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து வரும் சென்னையைச் சேர்ந்த மூன்று பெண் தொழில்முனைவோரிடம் பிபிசி தமிழ் பேசியது.
இந்தியாவைப் பொறுத்தவரை கல்வித்துறையில் என்னென்ன மாற்றங்கள் தேவை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவசியமான திறன்கள் என்னென்ன, இந்த துறையில் தாங்கள் மேற்கொண்டு வரும் தனித்துவமான முயற்சிகள் போன்றவை குறித்து இந்த மூவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
க்ரிசலிஸ் நிறுவனர் சித்ரா ரவி
ஒவ்வொரு குழந்தைக்குள் இருக்கும் மனித தன்மையை வெளிகொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு 2001-ஆம் ஆண்டில் 'க்ரிஸலிஸ்' என்ற கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கியதாகக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த சித்ரா ரவி.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக புதுமையான கற்பித்தல் முறையை வடிவமைத்துள்ள க்ரிசலிஸ் நிறுவனத்தின் பாடத் திட்டத்தை தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பட மூலாதாரம், CHITRA RAVI
கல்வித் துறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் எப்படி வந்தது என்று சித்ரா ரவியிடம் கேட்டபோது, ''இந்தியாவில் தற்போதைய கல்விமுறையில் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் போக்கு பரவலாக காணப்படுகிறது.
எனது மகள் பள்ளிக்கு செல்லத் தொடங்கிய பிறகுதான் இந்த போக்கை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது'' என்று கூறும் சித்ரா வரைபடங்கள், அனிமேஷன், இன்டெராக்டிவ் வடிவமைப்புகள் என பல புதிய வழிகளில் சர்வதேச தரங்களுக்கு இணையான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளதாகக் கூறுகிறார்.
மாணவர்களுக்கு சமூக அக்கறை அவசியம்
தொடக்கநிலை கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய சித்ரா ரவி, ''ஒரு குழந்தைக்கு 90% மூளை வளர்ச்சி ஐந்து வயதுக்குள்ளாக நடக்கிறது. அதனால் அவர்களின் தொடக்க கல்வியே சிறப்பாக அமைந்துவிட்டால் எதிர்காலத்தில் கல்வியில் மட்டுமின்றி பண்புகளிலும் சிறந்தவர்களாக திகழ்வார்கள்'' என்று கூறுகிறார்.
பள்ளிப்படிப்பைத் தாண்டி சிறுவர்களுக்கு முக்கியமான திறன்கள் எவை என்று சித்ராவிடம் கேட்டோம். அதற்கு அவர், ''குழந்தைகளுக்கு செடிகளின் பெயர் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. அதை நேரில் பார்த்தால் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற சமூக அக்கறையையும் கற்பிப்பது அவசியம். சமூக பொறுப்பு, திறனாய்வுச் சிந்தனை, வேகமாகவும் துல்லியமாகவும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்ப்பதாக கல்வி அமைய வேண்டும்.''
மாணவர்களின் திறனறிந்து ஊக்குவித்தல்
இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியமான திறன்கள் எவை என்று சித்ராவிடம் கேட்டபோது, ''ஒரு தோட்டக்காரன் ரோஜா செடியை விதைக்கும்போது அதிலிருந்து ரோஜாக்கள் மலர்கின்றனவா என்றுதான் எதிர்பார்ப்பாரே தவிர மல்லிகைப்பூ பூக்குமா என்று எதிர்பார்க்கமாட்டார்.
அதுபோல ஆசிரியர்களும் மாணவர்களின் தனிப்பட்ட திறனை அறிந்து அதை ஊக்குவிக்க வேண்டும்'' என்றார். ஆரோக்கியமான கல்வித் திட்டம் என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சுமையாக அல்லாமல் பரஸ்பரம் சுவாரஸ்யமானதாக இருக்கவேண்டும் என்கிறார்.
மேலும் அவர், ''எந்த ஒரு செய்தியையும் நேரடியாக சொல்லிவிடாமல் கேள்விகேட்டு மாணவர்களை சிந்திக்கவைத்து அதன் மூலமாக விடை கண்டறியச் செய்யவேண்டும்'' என்று கூறும் சித்ரா ஆழமான கற்றல், உள்ளார்ந்த புரிதல், எல்லை தாண்டி சிந்தித்தல், சமூகத்துடன் தொடர்புபடுத்தல் ஆகிய நான்கு கோணங்களில் தாங்கள் வடிவமைத்த பாடத்திட்டங்கள் அமைந்துள்ளதாகக் கூறுகிறார்.
ஹே மேத் இணை நிறுவனர் நிர்மலா சங்கரன்
கணிதமும் அறிவியலும் தொழில்ரீதியில் மட்டுமின்றி வாழ்வியல் ரீதியிலும் முக்கிய பாடங்களாக கருதப்படுகின்றன. ஆனால் கணித பாடம் மீது அச்சம், தனி வகுப்புகளுக்குச் செல்வது, கணக்கு வரவில்லை என்றால் தோற்றுவிட்டதாக எண்ணுவது போன்ற எண்ணங்கள் தவிர்க்க முடியாதவையாகவே உள்ளன. இந்த நிலையில், மாணவர்களுக்கு கணிதத்தின் மீதான அச்சத்தை போக்கவேண்டும் என்ற நோக்கில் 2000-ஆவது ஆண்டு சென்னையைச் சேர்ந்த நிர்மலா சங்கரன் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஹே மேத்.
இந்த நிறுவனத்தை தொடங்க காரணம் என்ன என்று நிர்மலாவிடம் கேட்டோம். அதற்கு அவர், ''கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு கருத்தாக்கமும் மற்றொன்றுடன் தொடர்புடையவை என்பதால் இந்த பாடத்திற்கு முழுமையான புரிதல் தேவை. ஒருவேளை மாணவர்கள் குறிப்பிட்ட வகுப்பு படிக்கும்போது ஏதாவதொரு பாடத்தை புரிந்துகொள்ள முடியாமல் போனாலோ அதை தெளிவுபடுத்திகொள்ளாமல் அடுத்த வகுப்புகளுக்குச் செல்ல செல்ல ஒரு கட்டத்தில் கணிதத்தின்மீது வெறுப்பு ஏற்படுகிறது. இந்த எண்ணம் வராமல் இருக்க தொடக்கத்திலேயே அவர்களுக்கு கணிதத்தின்மீது ஆர்வம் ஏற்படுத்த நாங்கள் விரும்பினோம்'' என்கிறார்.

பட மூலாதாரம், NIRMALA SANKARAN
2000-ஆம் ஆண்டில், இந்தியாவில் தொழில்நுட்பங்கள் கால்பதிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் கணித பாடத்தில் நிலவும் பிரச்சனைக்குத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வு கண்டுபிடிக்க ஆரம்பித்ததாக கூறுகிறார் நிர்மலா சங்கரன். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், கொலம்பியா ஆகிய நாடுகளில் உள்ள பள்ளிகள் ஹே மேத் இணைய வழி கணித வகுப்புகளை பயன்படுத்தி வருகின்றன.
''வேகமாக கணக்குகளை தீர்ப்பவரே புத்திசாலி அல்ல''
சமீபகாலமாக பள்ளி முதல் பல்கலைக்கழக படிப்பு வரை இணையவழி கல்வி என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்த நிலையில், இணையவழி பாடங்களால் ஆசிரியர்களை விஞ்சிவிட முடியுமா என்று நிர்மலாவிடம் கேட்டபோது, ''இந்தியாவில் நிறைய கணித ஆசிரியர்கள் இருந்தாலும் சிலர் தனிச் சிறப்புடன் விளங்குவதோடு மாணவர்களைக் கவரும் ஆசிரியர்களாகவும் மாறிவிடுகின்றனர்.
அப்படிப்பட்ட கணித ஆசிரியர்களின் பண்புகள் என்னென்ன என்று ஆராய்ந்தபோது அனைவரையும் சமமாக நடத்தும், தவறுகளை ஆதரிக்கும், வகுப்பறை விவாதங்களை விரும்பும், வேகமாக கணக்குகளை தீர்ப்பவரே புத்திசாலி என்று நம்பாத ஆசிரியர்களே சிறந்த கணித மாணவர்களை உருவாக்குகின்றனர் என்பதை அறிந்தோம். இந்த அம்சங்களை அடிப்டையாகக் கொண்டே ஹே மேத்தின் இணையதளத்தை வடிவமைத்தோம்.ஆசிரியர்களை எதனாலும் விஞ்சிவிடமுடியாது ஆனால் இதன் மூலம் ஆசிரியர்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுவதோடு அவர்களால் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது'' என்று அவர் பதிலளித்தார்.
கணிதத்துறைக்கு பெயர்போன அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பள்ளிப்பாடங்கள் மட்டுமின்றி உலகளவில் பொருந்தக்கூடிய 80க்கும் மேற்பட்ட கணித கோட்பாடுகளை வித்தியாசமான முறையில் இணைய வழியில் மாணவர்களுக்கு வழங்குகிறது ஹே மேத் நிறுவனம். இதன் மூலம் வகுப்புவாரியாக மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில், விளையாட்டு போல் கணிதம் கற்க உதவுவதோடு ஒரு பள்ளியில் நடத்தப்படும் தேர்வுகள், ப்ராஜெக்ட்டுகள், முக்கிய கேள்வி தொகுப்புகள் போன்றவற்றை வேறொரு பள்ளி ஆசிரியராலும் அணுக முடியும்.
ஒருங்கிணைந்த கற்பித்தல் முறை

பட மூலாதாரம், NIRMALA SANKARAN
ஹே மேத் இணையதளத்தால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கும் பயன்கள் குறித்து கேட்டபோது, ''தமிழ்நாட்டில் கணித பாடங்களுக்கான தனி வகுப்புகளுக்குச் செல்லும் போக்கு அனைத்து பள்ளி மாணவர்களிடையேயும் காணப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்படுத்த நினைத்தோம்.'' என்று நிர்மலா கூறினார்.
மேலும், இந்தியாவின் தற்போதைய கல்விமுறையில் ஒருங்கிணைந்த கற்பித்தல் முறை மற்றும் மாணவர்கள் மத்தியில் தொடர்புகொள்ளும் திறன் ஆகியவை மேலும் மேம்படுத்தப்பட வேண்டியவை என்றும் பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்கள் சூழலுக்கு ஏற்றவாறு தங்களையும் கற்பித்தல் முறைகளையும் மாற்றிக்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
கிட்ஸ்ப்ரூனர் நிறுவனர் மோகன லட்சுமி
தொடக்க கல்வியும் கணித அறிவும் அவசியம்தான். அதையும் தாண்டி மாணவர்களுக்கு மற்றொரு திறனும் முக்கியம் என்கிறார் கிட்ஸ்ப்ரூனர் ஸ்டார்ட் அப் நிறுவனர் மோகன லட்சுமி.
இந்தியாவில் தற்போதைய கல்விமுறை மாணவர்களிடையே படைப்பாற்றலை காணாமல் போகச் செய்வதாக மோகனா கூறுகிறார். ''கிட்ஸ்ப்ரூனரில் சேரும் மாணவர்களுக்கு வயது மற்றும் திறன் அடிப்படையில் புதிதாக தொழில் தொடங்குவது குறித்து பயிற்றுவிக்கிறோம். பணம் ஈட்டுவது எப்படி என்று கற்றுத்தருவது எங்கள் இலக்கு அல்ல.''

பட மூலாதாரம், MOHANA LAKSHMI
''குழந்தைகளுக்குள் இருக்கும் புதிதாக சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டிவிட்டு ஒரு துறையில் இருக்கும் பல்வேறு வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக்கொள்வது, தினசரி வாழ்வில் ஏற்படும் சவால்களை எப்படி மாற்றி யோசித்து சமாளிப்பது போன்றவற்றை கற்பிப்பதே எங்கள் நோக்கம்'' என்று கூறும் மோகன லட்சுமி ஏழு முதல் பதினெட்டு வயது வரை உள்ள மாணவர்களுக்காக சென்னையில் 2016-ஆம் ஆண்டு இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார்.
''தோற்றது உன் யோசனைதான், நீயில்லை''
கிட்ஸ்ப்ரூனரில் மாணவர்களுக்கு என்னென்ன கற்றுத்தருகிறீர்கள் என்று மோகனாவிடம் கேட்டோம். ''எங்கள் மாணவர்களுக்கு முதலில் நாங்கள் காற்றுத்தருவது தோல்விக்கு பழகிக்கொள்ளவேண்டும் என்பதுதான். ஒரு மாணவர் உருவாக்கிய யோசனை சிறப்பாக இல்லையென்றால் அவர் யோசித்த விதம்தான் தோற்றுவிட்டதே தவிர அவர் தோற்கவில்லை. இதை புரியவைத்துவிட்டால் எந்த குழந்தையும் சோர்ந்துபோகாது'' என்கிறார் அவர்.
கிட்ஸ்ப்ரூனர் வகுப்புகளை முழுமையாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு அமெரிக்காவின் எம்ஐடி மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'கிட்ஸ்ப்ரூனர் எம்பிஏ' என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா உட்பட பன்னிரெண்டு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றுவரும் இந்த பாடத்திட்டம் இந்தியாவில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.
"பிரச்சனைக்கு தீர்வளிப்பவரே தொழில்முனைவோர்''

பட மூலாதாரம், MOHANA LAKSHMI
பள்ளிப் பாடங்கள் தவிர்த்து இதுபோன்ற வகுப்பில் சேருவது மாணவர்களுக்கு சுமையாக இருக்காதா என்று மோகன லட்சுமியிடம் கேட்டபோது, ''ஒரு பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிப்பவரே தொழில்முனைவோர். அப்படி இருக்கையில், தினசரி வாழ்வில் ஏற்படும் சிக்கலை எப்படி சமாளிப்பது என்பதை அடிப்டையாகக் கொண்டே நாங்கள் பாடத்திட்டங்களை வகுத்துள்ளோம். எனவே மாணவர்கள் இந்த வகுப்புகளை மிகவும் ஆர்வத்துடன் கற்கிறார்கள்'' என்கிறார்.
மாணவர்கள் தங்களின் புதிய தொழில் யோசனைகளை சக மாணவர்கள், பெற்றோர் மற்றும் தொழிலதிபர்களுடன் பகிர்ந்துகொள்ள 'கிட்எக்ஸ் ஏஷியா' என்ற தளத்தை மோகன லட்சுமி உருவாக்கியுள்ளார். மேலும் தற்போது இவர், பிரான்சில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளாகமான 'ஸ்டேஷன் எஃப்பில்' நடைபெறவுள்ள தொழில்சார் மாநாட்டுக்காக தங்கள் மாணவர்களை தயார்செய்து வருகிறார்.
இந்த நிறுவனம் சார்பாக சிறந்த தொழில் யோசனைகளை உருவாக்கும் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளில் நடக்கும் பல்வேறு தொழில்சார் மாநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 2018-ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் 15 குழந்தைகள் முன்வைத்த தொழில் யோசனைக்கு தலா முப்பதாயிரம் டாலர்கள் முதலீட்டு ஊக்கத்தொகை கிடைத்தது.
''சிறந்த தொழிலதிபர்களை உருவாக்க இன்றே விதை விதைக்கிறோம்''

பட மூலாதாரம், MOHANA LAKSHMI
தனியார் வகுப்புகள் மட்டுமில்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் மிகவும் குறைந்த கட்டணத்தில் தொழிற்கல்வி சார்ந்த பாடத்திட்டங்களை கிட்ஸ்ப்ரூனர் நிறுவனம் வழங்கி வருகிறது. அதன் நிறுவனர் மோகனா, எந்த வகை தொழிலாக இருப்பினும் மின்னணு ஊடகத்தில் இருப்பு வைத்திருப்பது இன்றியமையாதது என்கிறார். இந்திய தயாரிப்புகள் அதிகரிக்கவேண்டும், தொழில்துறை செழிக்க வேண்டும் என்று நாம் பேசிவரும் நிலையில், இன்று விதை விதைத்தால்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் தலை சிறந்த தொழிலதிபர்களை உருவாக்க முடியும் என்றும் கூறுகிறார்.
மேலும் அவர், ''வாய்ப்புகளை எளிதில் மாணவர்களுக்கு வழங்கிவிடாமல் அதற்கு அவர்கள் தகுதியானவர்களா என்பதை முதலில் சுயபரிசோதனை செய்ய வைக்கிறோம். எங்களிடம் வரும் 70% மாணவர்கள் சமூக தொழில்முனைவோராகவே விரும்புகிறார்கள். சிறு வயதிலேயே இந்த எண்ணம் கொண்ட குழந்தைகள் நாளை சமுதாயத்துக்கு பயனளிக்கும் சேவையைச் செய்பவராக மாறுவார்கள்'' என்று பெருமைப்பட கூறினார்.
பிற செய்திகள்:
- விடுதலைப்புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர் வலியுறுத்தல்
- இலங்கை ஜனாதிபதிக்கான அதிகாரம்: மீண்டும் வருகிறது சட்டத்திருத்தம்
- நடிகை கங்கனாவின் சர்ச்சை கருத்து: "மும்பையில் வாழ உரிமை கிடையாது" - மிரட்டும் தலைவர்கள்
- ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ஹர்பஜன் சிங் - காரணம் என்ன?
- "சிங்கம்" பட ஹீரோ போல இருக்காதீர்கள் - ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு பிரதமர் மோதி அறிவுரை
- காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் விபத்து - 7 பெண்கள் பலி
- இலங்கை கப்பல் தீயை அணைக்க தீவிர முயற்சி: எரிபொருள் கசிவு ஏற்பட்டால் பேராபத்து
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












