ஐ.பி.எல். ஏலம் 2022: உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே கிளிக்கில் பதில்கள்

ஐ.பி.எல் ஏலம்

பட மூலாதாரம், @IPL/TWITTER

    • எழுதியவர், பராக் பதக்
    • பதவி, பிபிசி மராத்தி

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 15வது சீசனுக்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. ஏலத்திற்குப் பிறகு அனைத்து அணிகளிலும் பல மாற்றங்கள் நிகழும்.

இந்திய வீரர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள ஏராளமான வீரர்களை ஏலத்தில் எடுக்க கோடிக்கணக்கான ரூபாய் அறிவிக்கப்படும். இந்த ஏலம் தொடர்பான அனைத்து விவரங்களையும் பார்ப்போம்.

எப்போது நடைபெறுகிறது ஐ.பி.எல் ஏலம்?

15வது ஐ.பி.எல் சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது.

இதற்காக எத்தனை வீரர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்?

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இந்த போட்டி மிகவும் பிரபலமானது. எனவே உலகம் முழுவதும் உள்ள வீரர்கள், இந்த விளையாட்டில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர். வீரர்கள் தங்கள் ஆண்டு வருமானத்தை ஒன்றரை மாதங்களில் சம்பாதிக்க வாய்ப்பளிக்கும் ஒரு போட்டியாகவும் ஐ.பி.எல் கருதப்படுகிறது.

ஏலத்திற்கு பதிவு செய்துகொண்ட 590 வீரர்களில் 370 பேர் இந்திய வீரர்கள், 220 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

பதிவு செய்துள்ள வெளிநாட்டு வீரர்கள்:

ஆப்கானிஸ்தான் (17), ஆஸ்திரேலியா (47), வங்கதேசம் (5), இங்கிலாந்து (24), அயர்லாந்து (5), நியூசிலாந்து (24), தென் ஆப்ரிக்கா (33), இலங்கை (23), மேற்கிந்திய தீவுகள் (34) , ஜிம்பாப்வே (1), நேபாளம் (1), அமெரிக்கா (1), நமீபியா (3), ஸ்காட்லாந்து (2) ஆகிய நாடுகளில் உள்ள வீரர்கள் ஏலத்திற்காக பதிவு செய்துள்ளனர்.

48 வீரர்கள் தங்கள் அடிப்படை விலையாக ரூ. 2 கோடி ரூபாய் நிர்ணயத்துள்ளனர். 20 வீரர்கள் தங்கள் அடிப்படை விலையாக ரூ. 1.5 கோடியையும், 34 வீரர்கள் தங்களது அடிப்படை விலையாக ரூ. 1 கோடியையும் நிர்ணயித்துள்ளனர்.

இந்த ஏலத்தில், அதிகம் வயதுடைய வீரர் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த 42 வயதான சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆவார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 17 வயதான நூர் அகமது ஏலத்தில் பங்கேற்றுக்கும் இளம் வீரர் ஆவார்.

ஐ.பி.எல் ஏலம்

பட மூலாதாரம், Getty Images

எந்த அணியிடம் எவ்வளவு பணம் உள்ளது?

ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு எவ்வளவு பணம் வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அனைத்தும் தீர்மானிக்கப்படும். தங்களின் முந்தைய நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொண்ட அணிகளிடம் ஏலத்தில் செலவு செய்ய குறைந்த பணமே இருக்கும்.

ஐ.பி.எல் அணிகள் ஏலத்தில் முதலீடு செய்யவுள்ள தொகையின் பட்டியல் இதோ:

சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 48 கோடி

டெல்லி - ரூ. 47.5 கோடி

கொல்கத்தா - ரூ. 48 கோடி

மும்பை - ரூ. 48 கோடி

பஞ்சாப் கிங்ஸ்- ரூ. 72 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்- ரூ. 62 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ. 57 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 68 கோடிஅகமதாபாத் - 52 கோடிலக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் -59 கோடி

பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ஏலத்தில் செலவழிக்க அதிக பணம் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமும் நல்ல அணியை உருவாக்க போதுமான பணம் உள்ளது. மற்ற அணிகள் தங்களின் முக்கிய வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டதால், வரவிருக்கும் ஏலத்தில் அவர்கள் குறைந்த தொகையை மட்டுமே செலவிட முடியும்.

லக்னோ - அகமதாபாத் அணிகள் இடையிலான முதல் போட்டி

இந்தப் போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை எட்டிலிருந்து பத்தாக உயர்ந்துள்ளது. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இந்த சீசனில் முதல் முறையாக போட்டியிடுகின்றன. இரு அணிகளும் தலா மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளன.

லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் தலைமை தாங்குகின்றனர். ரவி பிஷ்னோய் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரை லக்னோ அணி வாங்கியுள்ளது. ரஷித் கான் மற்றும் சுப்மான் கில்லை அகமதாபாத் அணி வாங்கி உள்ளது.

எந்த வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்?

ஐ.பி.எல் அணிகள் தங்கள் நீண்ட கால உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் வீரர்களைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பைப் பெறுகின்றன. ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அவர்கள் ஏலத்திற்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள்:

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கைரோன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கென் வில்லியம்சன், உம்ரான் மாலிக், அப்துல் சமத்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

டெல்லி கேபிடல்ஸ்: ரிஷப் பந்த், பிரித்வி ஷா, அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே.

கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் டேவிட் வார்னர் இணைந்து இருந்த காலம் கடந்த சீசனோடு முடிவடைந்தது.

ஐ.பி.எல் ஏலம்

பட மூலாதாரம், BCCI/IPL

முதலில் அவரிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. பிறகு, அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன் பிறகு, வார்னர் தனது ஹோட்டல் அறையிலிருந்து போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தார்.

இந்த ஆண்டு, ஏலத்தில் வார்னர் சேர்க்கப்பட்டுள்ளார். வார்னர் ஒரு திறமையான பேட்ஸ்மேன்; வெற்றிகரமான கேப்டன். மேலும், அவரது இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் வெளியிடும் வீடியோக்களால், இந்தியாவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரை தங்கள் பக்கம் சேர்க்க பல அணிகள் ஆர்வமாக உள்ளன.

டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, ஸ்ரேயாஸ் அணியை விட்டு விடை பெற்றார். இந்த திறமையான பேட்ஸ்மேன் மற்றும் தேர்ந்த கேப்டனை எடுக்க பல அணிகள் ஆர்வமாக உள்ளன.

ஐ.பி.எல் ஏலம்

பட மூலாதாரம், TWITTER @DELHICAPITALS

அனுபவமிக்க இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார், பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், யஸ்வேந்திர சாஹல், மணீஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்ஷல் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹுவோ ஆகிய வீரர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய வீரர்கள்.

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த டிரென்ட் போல்ட், தென்னாப்ரிக்காவின் ககிசோ ரபாடா, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக், பேட்ஸ்மேன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் ஆகியயோர் சில முக்கியமான வெளிநாட்டு போட்டியாளர்கள்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: